இனி பார்வையற்றவர்களும் டச் ஸ்கிரீன் போன் பயன்படுத்தலாம்!



வந்தாச்சு புதிய கீ போர்ட் ஆப்

சென்னை பேராசிரியரின் சாதனை


ஆப் அறிமுகம் செய்த மாநிலக் கல்லூரி பேராசிரியர் வி.சிவராமன்


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் டச் ஸ்கிரீன் செல்போன்களை பயன்படுத்துவதில் படும் சிரமங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவே சுமார் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள்.

இதைப் போக்கவே புதிய கீ போர்டு ஆப் ஒன்றை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு உருவாக்கியிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரான முனைவர் வெ.கிருஷ்ணமூர்த்தி. அதன்பெயர் K4 கீ போர்டு!‘‘பொதுவா, டச் ஸ்கிரீன் செல்போனை பயன்படுத்துற பார்வையற்றவர்கள் வாய்ஸ் ஓவரை ஆன் செய்துதான் பயன்படுத்துவாங்க. ஏன்னா, ஓர் எழுத்தை உள்ளீடு செஞ்சதும் அது என்ன எழுத்துனு செல்போன் சொல்லும். அப்புறமே, அடுத்த எழுத்துக்குப் போவாங்க.

இப்படி ஒவ்வொரு எழுத்தா உள்ளீடணும். இதனாலயே, பார்வைக் குறைபாடுள்ள சிலர் இன்றைய நவீன டச் ஸ்கிரீன் தொழில்நுட்பமுள்ள போன்களுக்கு மாறலை. நம்பர் போர்டு உள்ள பழைய மாடல் செல்போனையே பயன்படுத்திட்டு இருக்காங்க.

அவங்களும் நம்மைப் போல டச் ஸ்கிரீன் போனை எளிதாகப் பயன்படுத்தணும் என்பதற்காகவே இந்த ஆப்பை உருவாக்கினோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் பேராசிரியர் வெ.கிருஷ்ணமூர்த்தி.‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்தது. ஏற்கனவே, நான் ‘தமிழ் 99’ கீ போர்டு ஐடியாவுலயும், டிசைன்லயும் முக்கிய பங்கு வகிச்சேன். இதனால, தமிழ் எழுத்துரு, கீ போர்டுனு எல்லாத்திலும் எனக்கு நிறைய அனுபவம் இருக்கு.

ஒருமுறை பார்வையற்ற நண்பர் ஒருவர் ‘எங்களுக்காக ஏதாவது பண்ணுங்க சார்’னு கேட்டார். அவர் என்னைச் சந்திக்கிற நேரமெல்லாம் இதைச் சொல்லிட்டே இருந்தார். அந்நேரம், செல்போன்ல அவங்கபடுகிற சிரமங்கள் பத்தித் தெரிய வந்துச்சு. உடனே, இதுக்கு ஏதாவது பண்ணலாம்னு நினைச்சேன். இந்த ஐடியா உதயமாச்சு.

கடந்த அஞ்சு வருஷங்களா இதுக்கான வேலைகள்ல ஈடுபட்டோம். அவங்களுக்கு ஏற்படுற சிரமங்களை எல்லாம் அவங்களப் பயன்படுத்தச் சொல்லியே சரி செய்தோம். இதுமாதிரி, பலகட்ட பரிசோதனைக்குப் பிறகே இப்ப அறிமுகப்படுத்தியிருக்கோம்...’’ என்றவர், இந்தக் கீ போர்டின் டிசைனை விவரித்தார்.

‘‘இதுல ரெண்டுக்கு ரெண்டு என நாலு கட்டங்கள் இருக்கும். இந்தக் கட்டத்துக்குள்ள எண்களையும், எழுத்துக்களையும் ஒரு தடவல் (swipe) மூலம் உருவாக்கி வார்த்தைகளை அமைக்க வேண்டியதுதான். உதாரணத்துக்கு, முதல் கட்டத்துல மேலிருந்து கீழ் நோக்கி ஒருமுறை தடவினால் எண் ஒன்று டிஸ்பிளே ஆகும். இதுபோல இரண்டாவது கட்டத்துல வலமிருந்து இடமாக ஒருமுறை தடவினால் எண் மூன்று டிஸ்பிளே ஆகும்.

டிஸ்பிளே ஆகும் போதே வாய்ஸும் வருவதால எழுத்துப் பிழை வராது. பிழை வந்தாலும் பேக் ஸ்பேஸ் தடவல் மூலம் உடனடியாகச் சரி செய்ய முடியும். இப்படி எண், எழுத்து மட்டுமல்ல… ஸ்பெஷல் கேரக்டர்ஸ், ஈமோஜினு எல்லாத்துக்கும் தடவல் இருக்கு.

இனிமே, பார்வைக் குறைபாடு உள்ளவங்களாலும் ரொம்ப ஈஸியா ஈமோஜிய அனுப்ப முடியும். கோடுகள் எல்லாமே செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் மட்டுமே இருக்கிற மாதிரி இந்தத் தடவல்களை அமைச்சிருக்கோம். அதனால தப்பு வர்றது ரொம்ப குறையும். தவிர, தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், அரபிக்னு 14 மொழிகள்ல பயன்படுத்தும்படி இந்தக் கீ போர்டை உருவாக்கியிருக்கோம்.

அடுத்து, படிப்படியா மொத்தம் 100 மொழிகளுக்கு வரும். இதுல எந்த யூனிகோடு எழுத்தையும் உள்ளிட முடியும். இப்படி தடவல் மூலம் உள்ளீடு செய்றதால எஸ்எம்எஸ்ஸோ, கட்டுரையோ எதுவானாலும் வேகமா முடிக்க முடியும். அப்புறம், ஒரே தடவலில் பல எழுத்துகள் வர்ற மாதிரியும் சில விஷயங்கள் இதுல இருக்கு. அதாவது, இப்ப ஆங்கிலத்துல ing, ion… தமிழ்ல ஆல், ஓடு, உடன் போன்ற சொற்களின் முடிவுகளை ஒரே தடவலில் செய்ய முடியும்.

ஒருத்தர் Goingனு எழுத நினைச்சா, G மற்றும் Oவிற்கு ரெண்டு தடவல் செய்திட்டு, ingக்கு ஒரு தடவல் செய்தா போதும். இந்த மாதிரியான பல ஷார்ட்கட்களையும் புகுத்தியிருக்கோம். அப்புறம், ஒரு பெரிய பழமொழியையே கூட ஐஞ்சாறு எழுத்துகள்ல உள்ளிடலாம். இதை ப்ராடிக்கல்லா செஞ்சு பார்க்கும் போது ஈஸியா பயன்படுத்தும்படி இருக்கும். நிச்சயம், பார்வையற்றவங்க ரொம்ப வேகமா புரிஞ்சுப்பாங்க.

இந்த ஆப்பை ப்ளே ஸ்டோர் போய் தரவிறக்கம் செய்துக்கலாம். முதல்ல டெமோவை பயன்படுத்திப் பார்க்கும்படி செய்திருக்கோம். அது பிடிச்சிருந்தா, பிறகு சந்தா செலுத்தி பயன்படுத்தலாம். விலை ஒண்ணும் அதிகமில்ல. ஆறு மாசத்துக்கு 70 ரூபாய். வருஷத்துக்கு 140 ரூபாய்.

என்னோட குறிக்கோளே பள்ளி, கல்லூரிகள்ல தேர்வு எழுதுற பார்வையற்ற மாணவர்கள் ஸ்கிரைப் உதவியில்லாம அவங்களாவே இந்தக் கீ போர்டு உதவியோடு எழுதணும்ங்கிறதுதான்...’’ முத்தாய்ப்பாக முடிக்கிறார் பேராசிரியர் வெ.கிருஷ்ணமூர்த்தி.             

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்