பகவான்-34



பகவான் கைது!
ரஜனீஷ்புரத்தில் ஷீலா என்னதான் செய்தார்?

அந்த புதிய நகரத்தையே நிர்மாணித்தவர் அவர்தான் என்றாலும், அங்கிருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் கீழ்க்கண்டவற்றை மட்டுமே செய்தார் என்பது அமெரிக்க ஊடகங்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைக் கொடுத்தவர்கள், ரஜனீஷ்புரத்தைச் சேர்ந்தவர்களே என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்கது.ரஜனீஷ்புரத்தில் ஷீலாவால் ஆயுதக் கலாசாரம் தொடங்கியது. பாதுகாப்பு என்கிற பெயரில் அவர் சகட்டுமேனிக்கு துப்பாக்கிகளை வாங்கி, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.

ரஜனீஷ்புரத்துக்கு வந்து சேர்ந்த பக்தர்களை போதைக்கு அடிமை ஆக்கினார். அவர்கள் சுயநினைவு இல்லாத சூழலில், அவர்களது சொத்துகளைப்  பறித்துக் கொண்டார்.தன்னை எதிர்த்துப் பேசிய ரஜனீஷ்புரத்து வாசிகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
ரஜனீஷ்புர வாசிகளை வாக்காளர்களாக பதிவு செய்து, ஒரேகான் மாகாண உள்ளாட்சித் தேர்தல்களில் தனக்கு ஆதரவான வெற்றிகளைப் பெறுவதற்கு தில்லுமுல்லு செய்தார். காரியம் முடிந்ததும் தேவையற்றவர்களை வன்முறையாக வெளியேற்றினார்.

ரஜனீஷ்புரத்து ரகசியங்களை எழுதிய பத்திரிகை நிருபர் ஒருவரை கொல்லுவதற்கு திட்டங்கள் தீட்டினார்.இதுமாதிரி ஏராளமான குற்றச்சாட்டுகள்.இவற்றின் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் பணிகள் ஒரு பக்கம் முடுக்கி விடப்பட்டிருந்தன.குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தனக்கு ஆதரவாக பகவான் இருப்பார் என்கிற நம்பிக்கை பொய்த்த நிலையில், செப்டம்பர் 1985ல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ரஜனீஷ்புரத்தை விட்டு வெளியேறினார் ஷீலா.

ஷீலா வெளியேறினால் ரஜனீஷ்புரத்துக்கு ஏற்பட்டிருந்த அத்தனை அச்சுறுத்தல்களும் அகலும் என்று பலரும் நம்பிக் கொண்டிருந்தார்கள். பகவானையும் நம்ப வைத்திருந்தார்கள்.ஆனால் -அதுதான் நடக்கவில்லை.ரஜனீஷ்புரத்தை புல், பூண்டு கூட முளைக்காத அளவுக்கு முடக்குவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் அமெரிக்க அரசு செய்துகொண்டிருந்தது.

ஓஷோவோ அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். சும்மா இருந்தாலே பல பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று கருதினார்.
வெளியே செல்ல முடிவெடுத்துவிட்ட ஷீலாவும், அவரது ஆதரவாளர்களும் நிர்வாகத்தில் ஏகத்துக்கும் குளறுபடியைச் செய்துவிட்டுத்தான் சென்றிருந்தார்கள். அவர்கள் செய்திருந்த சேதாரத்தை சரி செய்யவே பல ஆண்டுகள் பிடிக்கும் என்பது நிலைமை.ஓஷோ, நேரடியாக நிர்வாகத்தை கவனிக்க முடிவெடுத்திருந்தார்.

எனினும் -அடிக்கடி காவல்துறையினர் ஆசிரமத்துக்குள் அடாவடியாக நுழைந்து, இங்கே குற்றவாளிகள் வசிக்கிறார்கள், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பிரச்சினை செய்துகொண்டிருந்தார்கள்.“இங்கிருந்த குற்றவாளிகள் வெளியேறி விட்டார்கள். வேறு யாரையேனும் நீங்கள் கருதும் பட்சத்தில் கைது செய்து அழைத்துச் செல்லுங்கள்...” என்று அவர்களிடம் அமைதியாகவே பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால் -ஒரேகான் கவர்னர் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தினார்.அந்தக் கூட்டத்தில் ரஜனீஷ்புரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது மட்டுமே விவாதிக்கப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் இராணுவத் தாக்குதல் நடத்தவும் அமெரிக்க அரசு தயாராக இருக்க வேண்டுமென்று அந்தக் கூட்டத்தில் பேசினார்கள்.கூட்டம் முடிந்ததுமே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கவர்னர்.

“ரஜனீஷ்புரம் விவகாரம், அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அங்கு நடைபெறும் குற்றச்செயல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை விரைவில் அமைதிப்படுத்துவோம்...” என்று சொன்னார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரஜனீஷ்புரத்து வாசிகளை கொதிக்கச் செய்திருந்தது. ஷீலாவின் பொறுப்பை அப்போது ஹஸ்யா ஏற்றிருந்தார். அவரே ஓஷோ இண்டர்நேஷனலின் புதிய செயலர்.

ஓஷோவும், ஹஸ்யாவும் அமெரிக்க ஊடகங்களைச் சந்தித்தார்கள். கவர்னரின் பேச்சு குறித்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள்.
“ரஜனீஷ்புரத்தில் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. அதுபோல குற்றம் சாட்டிக்கொண்டு அமெரிக்க அரசு அதிகாரிகள் எங்களுக்குள் ஊடுருவி, குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா, எங்களை எதிரிகளாகக் கட்டமைப்பது சரியல்ல. நாங்கள் ஆன்மீகவாதிகள். அமைதியை விரும்புபவர்கள். எங்களோடு அமெரிக்கா போரிட நினைத்தால், நூறாண்டுகள் ஆனாலும் அந்தப் போர் முடியாது.

கவர்னர் எங்களை அமைதிப்படுத்துவோம் என்று கூறி நகைச்சுவை செய்கிறார். அமைதியாக இருக்கும் எங்களை எப்படி அமைதிப்படுத்த முடியும்?” என்று சூடாகக் கேள்வி எழுப்பினார் பகவான்.எனினும் அடுத்தடுத்த நாட்களில் ரஜனீஷ்புரத்தில் நடந்த சம்பவங்கள், ஓஷோவை மிகவும் கவலை கொள்ளச் செய்தன. ரஜனீஷ்புரத்தையே முற்றிலும் தகர்ப்பதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவின் உளவுத்துறை செய்துகொண்டிருந்தது.

பக்தர்களின் போர்வையில் உள்ளே நுழைந்துவிட்ட உளவாளிகள் யார் யாரென்று அறிய முடியாமல் நிர்வாகம் திணறியது. இதனால் ஒருவரை ஒருவரே சந்தேகிக்கக்கூடிய சூழலில், ஆசிரமத்தின் அமைதி கேள்விக்குறியானது.

ஷீலா செய்துவிட்டுப் போன குளறுபடிகளையே சரிசெய்ய முடியாத நிலையில் இருந்தவர்களால், அடுத்தடுத்து அமெரிக்க அரசு ஏற்படுத்திய நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியவில்லை.ரஜனீஷ்புரத்தின் மீது குற்றம் சாட்டுவதற்கு உறுதியான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல்துறை அதிகாரிகள் குதர்க்கமான வழிமுறைகளைப் பின்பற்றினார்கள். நாடறிந்த குற்றவாளிகள் பலரையும் பக்தர்கள் வேடத்தில் ரஜனீஷ்புரத்துக்குள் ஊடுருவச் செய்தார்கள். அவர்கள் மூலமாக ஆசிரமத்தின் சட்டம், ஒழுங்கை கேள்விக்குரியதாக்கினார்கள்.

பகவான், மிகவும் கவலையாகக் காணப்பட்டார்.புதிய சமூகத்தை உருவாக்கும் தன்னுடைய கனவு தடைபட்டு விட்டதே என்று வருந்தினார்.அமெரிக்கா என்றில்லை. உலகம் முழுக்கவே அரசாங்கம் என்கிற அமைப்பு, எந்த தளையுமற்ற புதிய சமூகம் உருவாவதை விரும்புவதில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துகொண்டார்.

இப்போதைக்கு அமெரிக்க அரசோடு பிரச்சினை வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்தவர், தற்காலிகமாக ரஜனீஷ்புரத்தை விட்டு தான் மட்டும் வெளியேறலாம் என்கிற முடிவுக்கு வந்தார்.அதன் மூலமாக ரஜனீஷ்புரத்தின் மீதான அமெரிக்காவின் கெடுபிடி குறையும். அங்கே வசிப்பவர்களாவது நிம்மதியாக இருப்பார்கள் என்று கருதினார்.

முடிந்தால் அமெரிக்காவையே விட்டு சில காலத்துக்கு விலகியிருக்கலாம் என்றும் கருதினார்.நார்த் கரோலினா மாகாணத்துக்கு சென்றார். அங்கே சார்லோட் என்கிற நகரில் தங்கியிருந்தபோது அதிரடியாக இரவு நேரத்தில் அவரைச் சுற்றி வளைத்தனர் போலீஸார்.ஓஷோவின் பாதுகாவலர், போலீஸாரோடு சண்டையிட முயற்சித்தபோது ஓஷோ அவரைத் தடுத்தார்.

“எங்களை எந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்கிறீர்கள்? கைது செய்வதற்கான வாரண்ட் வைத்திருக்கிறீர்களா?” என்று பகவான் கேட்டார்.எனினும் காவல்துறை அதிகாரி அவரைக் கைது செய்வதில் மும்முரம் காட்டினாரே தவிர, பேச்சுவார்த்தைக்கெல்லாம் தயாராக இருந்ததாகத் தெரியவில்லை.

முரட்டுத்தனமாக சில காவலர்கள் பகவானை நெருங்கினார்கள்.பகவானோடு இருந்த பாதுகாவலர், சமையல்காரர், மருத்துவர் போன்றோர் போலீஸாரோடு கைகலப்பில் ஈடுபட்டனர்.ஓஷோ இருதரப்பையும் விலக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

திடீரென ஆயுதம் தாங்கிய காவலர்கள் நுழைந்து, துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தினர்.“நான் ஒரு சாமியார். ஒரு கொலைக் குற்றவாளியைப் பிடிப்பது போல ஏன் இவ்வளவு பெரிய படையோடு வந்து என்னை அச்சுறுத்துகிறீர்கள்?” என்று பகவான் கேட்டார்.அவருக்கு அப்போதுதான் ஓர் உண்மை புரிந்தது. ரஜனீஷ்புரத்தைவிட்டு தான் வெளியேறாமல் இருந்திருந்தால், இராணுவத்தையே வைத்து முற்றுகையிட்டு நகரைத் தகர்த்திருப்பார்கள். தானாக வெளியேறியதின் மூலமாக அந்த முயற்சியை ஓஷோ முறியடித்துவிட்டார்.

அந்த வெறியிலேயே அவரைக் கைது செய்ய போலீஸ் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.காவல்துறை படைக்கு தலைமை ஏற்று வந்திருந்தவர் சாடை காட்ட, பெரிய இரும்புச் சங்கிலிகளைக் கொண்டு வந்து பகவானையும், அவருடன் இருந்தவர்களையும் பிணைத்தார்கள்.

கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்ட நிலையில் ஓஷோவால் நடக்கக்கூட முடியவில்லை. போலீஸார் பின்னாலிருந்து துப்பாக்கியைத் தலைகீழாக வைத்து அவரது முதுகில் தாக்கி நடக்க வைத்தனர்.தங்கியிருந்த வீட்டுக்குள் இருந்து பகவான் வெளியே வர, அதற்குள்ளாக விவரம் அறிந்து பத்திரிகையாளர்கள் வாசலில் குழுமியிருந்தார்கள். பத்திரிகையாளர்களுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்களும் பதறிப்போய் வந்து காத்துக் கிடந்தார்கள்.

பக்தர்களுக்குக் கை காட்டி விடக்கூடாது என்பதாலேயே ஓஷோவை இரும்புச் சங்கிலிகளில் பிணைத்திருந்தார்கள்.காவல்துறையின் கார் ஒன்றில் அவரை முரட்டுத்தனமாகத் தள்ளினார்கள்.

(தரிசனம் தருவார்)  

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்