என் அம்மாவுக்குக் கல்யாணம்...அவசியம் வந்துடுங்க!வைரலான கேரள இளைஞர்!

‘என் அம்மாவுக்கு திருமணம். இப்படி ஒரு பதிவு எழுத வேண்டுமா என்று யோசனையாகவே இருந்தது. மறுமணம் என்பது பாவச் செயல் என்று இன்னமும் கருதிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நான் என் அம்மாவின் திருமணத்துக்கு வாழ்த்துங்கள் என்று கேட்கிறேன்...’
இப்படி அதிரடியாகத் தொடங்குகிறது அந்த ஃபேஸ்புக் பதிவு.

கோகுல் ஸ்ரீதர் கேரளாவின் கொல்லத்தில் உள்ள கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர். இவர்தான் தன் தாய்க்குத் திருமணம் செய்து வைத்த முற்போக்கு இளைஞர். ஒரு குட்டி பிளாஷ்பேக்.கோகுலின் தாய் மினி ஓர் ஆசிரியை. தந்தை பெயர் ஸ்ரீதர்.

அப்போது கோகுல் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சிறு சிறு பிரச்னைகளோடு சென்றுகொண்டிருந்த குடும்பத்தில் மெல்ல மெல்ல தகராறுகள் அதிகரிக்கத் தொடங்கின.  
கோகுலின் தந்தை தினமும் தன் மனைவியை மகன் முன்பாகவே மூர்க்கமாகத் தாக்குவார். நாளுக்கு நாள் பிரச்னை அதிகரிக்க, தொல்லை தாங்காமல் மகனை அழைத்துக்கொண்டு தனியாக வந்துவிட்டார் கோகுலின் தாய் மினி.

‘‘எனக்கு அந்த நாள் நன்றாக நினைவிருக்கிறது. நான் என் அம்மாவின் கையைப் பிடித்தபடி எங்கு போவதென தெரியாமல் வேறு வழியே இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்தோம். என் தந்தையின் கொடுமை அவ்வளவு உச்சமாக இருந்தது...’’ என்று வேதனையுடன் சொல்கிறார் கோகுல்.

‘‘ஒருமுறை அம்மாவை அப்பா மூர்க்கமாகத் தாக்கியபோது தலையில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. நான் பதறிப் போனேன். மருத்துவமனைக்குப் போய் தலையில் கட்டுப்போட்டுவிட்டு வரும் வழியில் அம்மாவிடம் கேட்டேன்.

‘நீ ஏன் இதை எல்லாம் சகித்துக் கொள்கிறாய்? உனக்குப் பிடித்த வாழ்க்கை வாழ வேண்டியதுதானே?’

அதற்கு என் அம்மா, ‘நான் வாழ்வதே உன் ஒருவனுக்காகத்தான்...’ என்றார். அந்த பதில் என்னை உருகச் செய்துவிட்டது. எனக்கு நன்கு தெரியும், அது அத்தனை சத்தியமான சொற்கள். என் அம்மா எனக்காக செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் தன் ஆசிரியை பணியையே விட வேண்டி வந்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னலம் யோசிக்காமல் என் நல்வாழ்வுக்காகச் சிந்திப்பவர் என் அம்மா.

அன்று வீட்டை விட்டு வெளியேறும் நாளில் நான் மனதுக்குள் உறுதியெடுத்துக்கொண்டேன். நான் பெரியவன் ஆனதும் ஒருநாள் என் அம்மாவுக்குப் பிடித்த ஓர் இனிய வாழ்வை ஏற்படுத்தித் தருவேன் என...’’ என்று பழைய நினைவுகளைப் பகிர்கிறார்.படிப்பு முடிந்ததுமே கோகுலுக்கு வேலை கிடைத்தது.

அவர்கள் குடும்பத்தின் இன்னல்கள் தீர்ந்தன. பொருளாதார ரீதியாக கொஞ்சம் குடும்பம் மேலேறியதுமே கோகுலுக்கு, மகனுக்காக தன் வாழ்வையே மெழுகாக உருக்கிக்கொண்ட அம்மாவின் நிலைதான் முள்ளாக உறுத்தியது.

நண்பர்கள் உதவியுடன் களத்தில் இறங்கினார். அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடினார். இதோ, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த வேணு என்கிற முன்னாள் இராணுவ அதிகாரியை தன் அம்மாவுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார் கோகுல்.

‘‘என் அம்மாவின் எதிர்கால நலன் கருதியே நான் இந்த முடிவை எடுத்தேன். முதலில் அம்மா இதற்கு சம்மதிக்கவில்லை. பிறகு, முதுமையில் ஒவ்வொரு மனிதருக்கும் ஆறுதலுக்கு ஒரு துணை தேவை என்ற நடைமுறை எதார்த்தத்தை எடுத்துச் சொல்லி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தேன்.

இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது...’’ என்று சொல்லும் கோகுலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

என்.யுவதி