இது கதையல்ல... நிஜம்!ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில் உள்ள வசதியான குடும்பத்தில் பிறக்கிறான் அவன். அம்மாவும் அப்பாவும் தொழில்ரீதியாக அலைந்துகொண்டிருந்ததால் மகனை சரியாக கவனிக்க முடியவில்லை. நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூட அவனுக்கு யாருமில்லை. தனிமையில் தவித்த அவனுக்கு ஆறுதலாக இருந்தது ஓவியம் மட்டுமே.

எப்போதும் வரைந்துகொண்டே இருக்கிறான். அவனின் மூக்கு கொஞ்சம் பெரிது. அதை அவனுடைய அம்மா கிண்டலடித்துக்கொண்டே இருக்கிறாள்.மனமுடையும் அவன் 15 வயதிலேயே பாரிஸுக்குப் போகிறான். அங்கு இரண்டு லட்சம் பேர் கலந்து கொண்ட ஒரு ஓவியப் போட்டியில் கலந்துகொள்கிறான்.

அவன் வரைந்த ஆட்டுக்குட்டியின் ஓவியம் பலரின் மனதைக் கவர்கிறது. பிரான்ஸின் பிரபலமான ஃபேஷன் டிசைனர் ஒருவர் ‘‘தன்னிடம் வேலை செய்ய முடியுமா..?’’ என்று கேட்க, எதைப்பற்றியும் யோசிக்காமல் தலையாட்டுகிறான்.பதினாறு வயதிலேயே ஃபேஷன் உலகத்துக்குள் நுழைகிறான். அதுவரை அவனுக்கு ஃபேஷனைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லை. சிறு வயதில், தான் அனுபவித்த தனிமை, நேர்ந்த அவமானங்கள், உதாசீனங்கள் எல்லாமே ஃபேஷனின் மீதான காதலில் கரைகின்றன.

‘ஸ்கர்ட்’ என்ற குட்டைப்பாவாடையை உலகுக்கு அறிமுகம் செய்கிறான். உடைகளில் இருந்த கட்டுப்பாடுகள், விதிகள் எல்லாவற்றையும் தகர்த்து புதிய பாய்ச்சலை ஃபேஷன் துறையில் ஏற்படுத்துகிறான். அவனின் புகழ் பிரான்ஸைத் தாண்டி உலகமெங்கும் பரவுகிறது. மாபெரும் ஃபேஷன் நிறுவனமான ‘சேனலி’ல் இருந்து அவனுக்கு அழைப்பு வருகிறது. அப்போது ‘சேனலி’ன் பிசினஸ் அதலபாதாளத்தில் இருந்தது. அவன் நுழைந்த சில வருடங்களில் பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் நிறுவனமாக ‘சேனல்’ மாறுகிறது.

பெயர், புகழ், பணம் சம்பாதித்தாலும் அவனுக்கு என்று எந்த துணையும் இல்லை. அவனுக்கு ஒரு பூனை அன்பளிப்பாகக் கிடைக்கிறது. அந்தப் பூனையுடன்தான் மரணம் வரை இருந்தான். ஆம்; மேலே சொல்லிக்கொண்டிருப்பது உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர் கார்ல் லேகர்ஃபெல்டைப் பற்றியதுதான். கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அவர் இறந்துவிட்டார். இன்று அவருடைய பில்லியன் டாலர் சொத்துக்கு வாரிசாகிவிட்டது அவரது செல்லப் பூனை!