5 மாடி கட்டடத்தை இந்தப் பள்ளத்துக்குள் நிறுவலாம்!சமீபத்தில் விஞ்ஞானிகளின் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ள ஒரு சம்பவம் இது. ரஷ்யாவின் துலா நகரத்துக்கு அருகில் உள்ளது டெடிலோவா. விவசாயம் சிறப்பாக நடக்கும் கிராமம் இது. அங்கே நூறு ஏக்கருக்குப் பரந்து விரிந்த காய்கறித் தோட்டம் ஒன்று இருக்கிறது. திடீரென அந்தத் தோட்டத்துக்கு அருகே ஒரு மெகா பள்ளம் உருவாகியுள்ளது.

ஒரு புதைகுழியைப் போல தோற்றமளிக்கும் இந்தப் பள்ளத்தின் அகலம் 49 அடி. ஆழம் 98 அடி. அதாவது ஒரு ஐந்து மாடி கட்டடத்தை இந்தப் பள்ளத்துக்குள் நிறுவ முடியும்!இந்தப் பள்ளம் ஏன் உருவானது? எப்படி உருவானது? பள்ளம் தோன்றும்போது யாராவது நேரில் பார்த்தார்களா? போன்ற விஷயங்களை ஆராய்ந்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.

பள்ளத்தினால் எந்தவிதமான உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பதே ஒரே ஆறுதல். பள்ளத்தை மூடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பள்ளத்தைப் புகைப்படமாக்கி இணையத்தில் தட்டிவிட, வைரலாகிவிட்டது திடீர் பள்ளம்.

த.சக்திவேல்