கவிதை வனம்



பிளிறல்

காட்டின் நடுவே
முளைத்த
நட்சத்திர ஹோட்டல்
இசை விருந்தில்
டிரம்பட்டாய்
ஒலிக்கிறது
பாதை தொலைந்த
யானையின் பிளிறல்

- பா.ரமேஷ்

இரவின் பாடல்


இந்த இரவில்தானே
உன்வீட்டில் நீயும்
என்வீட்டில் நானும்
தொலைக்காட்சியின்
ஓரலையில்
இணைந்திருந்தோம்
இந்த இரவில்தானே
63 விடுபட்ட
அழைப்புகளால்
மௌனமாக்கப்பட்ட
என் செல்பேசியை
நிறைத்தாய்
இந்த இரவில்தானே
எனக்கான பாடலாக
நீ மலர்ந்தாய்
தடுக்கி விழுந்த
காமத்தை
இந்த இரவில்தானே
உன் முத்தத்தால்
ஆற்றுப்படுத்தினாய்
எப்படி
இலந்தை முட்களில்
சிக்காத காற்றாக
எல்லாம் மறந்து
என்னையும் இந்த
இரவுகளையும்
கடக்க முடிகிறது
உன்னால்?

- சுப.முத்துகுமார்