எவ்வளவு பறவைகள் பறந்தாலும் இந்த வானத்துல இன்னும் இடமிருக்கு...



திருவிழா முடித்த சாமி மாதிரி உட்கார்ந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 2018க்கான சாகித்ய அகாடமி விருது அவரின்  ‘சஞ்சாரம்’ நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் இருக்கிற அவருக்கு தமிழ் இலக்கிய உலகம் சிறப்பு  செய்யத் திரண்டிருக்கிறது. அறமும், கருணையும், எல்லாவற்றுள்ளும், எல்லோருள்ளும் தன்னைக் காணும் பேருள்ளத்துக்கு கிடைத்த  வரவேற்பு இது.‘‘எழுத்தை நம்பியே இந்த வாழ்க்கையில் இருந்தேன். இந்த விருதை நான் செய்த, செய்யப்போகிற காரியங்களுக்குக்  கிடைத்த அங்கீகாரமாப் பாக்குறேன். என் குடும்பமும், நண்பர்களும் இன்னும் மகிழ்ச்சியடைகிறார்கள். எப்பவாவது எனக்கு ஒரு பெரிய  விஷயம் நடக்குமென்று காத்திருந்தார்கள். அது கிடைக்கும்போது சந்தோஷப்படுகிறார்கள்...’’ உணர்வோடு பேசுகிறார் எஸ்.ரா.

எழுத்தை நம்பி வாழணும் என்ற முடிவு கடினமானதில்லையா...?

20 வயதில் அந்த முடிவெடுத்தேன். எல்லோரும் பரிகசித்தார்கள். ரொம்ப பழைய கேள்வியான ‘சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க...’னு  கேட்டாங்க. ஆனால், இன்னைக்கு நான் நாடறிந்த எழுத்தாளன். ஆரம்பத்தில் அறையில் இடம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து, பணமும்  கொடுத்து, புத்தகமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் நண்பர்கள். கையில் ஒரு பொருளுமில்லை. என் படிப்பை என் ஊரிலேயே விட்டுட்டு  வந்தேன். என் முன்னோடிகள் புதுமைப்பித்தன், அழகிரிசாமி, மெளனி, கு.ப.ரா, செல்லப்பா எல்லோரும் இங்கேதான் இருந்திருக்கிறார்கள்.  என் முன்னோடிகள் வந்திறங்கிய அதே தைரியத்தில்தான் நானும் வந்திறங்கினேன். இந்த வாழ்க்கையில் கிடைத்தது எல்லாம் சென்னை  கொடுத்ததுதான். என் ஊர் மல்லாங்கிணறு என்றாலும் நான் சென்னைவாசி. ராமகிருஷ்ணன் எழுத்தாளன் ஆனதில் ஒரு பகுதி  சென்னைக்குச் சொந்தம். என் நண்பர்களைப் பார்த்துவிட்டு ஊருக்கு வந்துவிடுகிறேன் என நான் சொல்லவே முடியாது. அதுக்கு பத்து  வருஷத்துக்கு மேல ஆகலாம்.

அதற்கு நான் நல்ல எழுத்தாளன், சிறந்த கலைஞன் என்பது காரணமல்ல. நான் செய்த காரியத்துக்கு 100 சதவீத அர்ப்பணிப்போடு  இருந்திருக்கேன். வெறுப்புக்கும், கசப்புக்கும் தொடர்பில்லாதவனா இருந்திருக்கேன். நான் சந்திக்கிற ஒவ்வொரு மனிதனையும் மதிக்கிறேன்.  அவன் அதே மதிப்பை எனக்கும் கொடுக்கிறான். இந்த வாழ்க்கையில் நான் கண்டுகொண்டது வெறுப்பில் இருந்து ஒருபோதும் அன்பை  உருவாக்க முடியாது என்பதுதான். அதனால் வெறுப்பை களையெடுத்தேன். எவர் குறித்த புகாரும் எனக்கில்லை. இந்த உலகத்துக்கு  ஏதாவது ஒன்று செய்தாலும் இந்த உலகம் உங்களை அங்கீகரிக்க ஆரம்பிக்கும். எழுத்தாளனாக இருப்பது கதை, கட்டுரை எழுதுவதற்கல்ல.  அது ஒரு பொறுப்புணர்ச்சி. பாரதி, எழுத்து தெய்வம், எழுதுகோல் தெய்வமென்றார். கவிதை எனக்கு தொழில் என்றார். கவிதை தொழில்னு  சொன்ன இடத்தில், எழுத்து என் தொழில்னு நான் சொல்லத்தான் செய்வேன்! இவ்வளவு எழுதினாலும் எல்லாவற்றிலும் ஒரு கதைதான்  சொல்லிருக்கேன். அது எளிய மனிதர்களின் கதை. அவர்கள் கைவிடப்பட்டதின் கதை.

அறத்தை இழந்து நிற்குதே உலகம்..

ஆமாம், இது அறம் இல்லாதுபோன ஒரு காலம்தான். நம் காலமே ஒரு வீழ்ச்சியோட காலம். இந்தக் காலத்தில் எல்லாமே  வீழ்ச்சியடைஞ்சிட்டு இருக்கு. இந்த கட்டத்தில் எல்லாமே உங்கள் கையை மீறி நடக்கும். வீழ்ச்சியின்போது மனிதன் நிலைகுலையுறான்.  என்ன செய்தால் காப்பாற்றிக்கொள்ளலாம் என நினைத்து, என்ன வேண்டுமானாலும் செய்கிறான். இப்படி செய்யும்போது குற்ற உணர்ச்சி  வந்துவிடக்கூடாது என்பதற்காக நியாயப்படுத்த ஆரம்பிக்கிறான். திருக்குறள், வாய்மை இல்லாததுதான் காரணம்னு சொல்லுது. எல்லா  தவறுகளும் பொய் சொல்வதில் தொடங்குகிறது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும்போது தொடங்குகிறது.

வாய்மையை மட்டும் கடைப்பிடித்தாலே எல்லா அறங்களும் தொடர்ந்து இருக்கும். ராமன் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்ததால் அடைந்த  மேன்மையை ராமாயணம் சொல்லுது. மகாபாரதம், கடைசியில் எல்லா சகோதரர்களையும் ஒருபிடி மண்ணுக்காக இழந்ததைச் சொல்லுது. இந்திய மனதுக்கு கதை வழியாக ஒரு அறம் சொன்னால் அது போய்ச் சேருது. பசி, காமம், துக்கம், இறப்பு, வாழ்க்கையோட தீராத புதிர்கள்  இதைப்பத்திதான் எழுத்தாளன் எங்கேயும் பேசுகிறான். எப்படி பேசுகிறான் என்பதில்தான் வேறுபாடு.

உங்களுக்கு விருது கிடைத்ததை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்...

இந்த விருது எனக்கு கிடைக்கணும்னு அவர்களே நினைச்சாங்க. நான் ஒரு விஷயம் பிடிக்கலைன்னா நேர்லயே சொல்லிருக்கேன். அதை  எழுத்தில் சொல்லி வெறுப்பை உருவாக்கியதில்லை. யாரும் என்னை வந்து பார்ப்பதில் எந்த இடர்பாடும் இல்லை. அவர்கள் வேறு  ஒருவரிடம் அடைந்த மோசமான அனுபவத்தை என்னிடம் அடையவே இல்லை. நேத்தைக்கு ஒருத்தர் காலையில் இருந்து என் பூட்டிய  அலுவலகத்தில் வந்து உட்கார்ந்திருக்கார். பெங்களூரிலிருந்து நான்கைந்து மணிநேரம் பயணம் செய்து என்னைப் பார்த்துட்டு,  வாழ்த்திட்டுப்போக வந்திருக்கார். முன்ன பின்ன பழக்கமில்லாத என்னை அவர் ஏன் இங்க வந்து காத்திருந்துபார்க்கணும்?

ஒரு நாதஸ்வரக் கலைஞன் பேசினாரு. ‘ஐயா... எங்க வாழ்க்கையை எழுதிருக்கீங்க. எங்க வீட்டுப் புள்ள நீங்க. எனக்குப் பாராட்டவெல்லாம்  தெரியாது. வாத்தியத்த எடுத்துட்டு வந்து வாசிச்சிப்புடுவேன்...’னு சொன்னாரு. அதான் எனக்கு மரியாதை. பேசினதுல 50 விழுக்காடு  பெண்கள். ‘சார், உங்ககிட்டப் பேசணும்னு சொல்றாங்க...’னு அலைபேசியைப் பிடுங்கி, அம்மா, அக்கா, தங்கச்சின்னு முறை சொல்லி  பேசுறாங்க. வண்ணதாசன் ‘தம்பி முகநூல்ல உனக்கு விருது கெடச்சத ஊர் திருவிழாமாதிரி கொண்டாடுறாங்கப்பா...’னு சொன்னாரு. நான் கடைப்பிடித்த அன்புக்கும், பண்புக்கும், நட்புக்கும் இதெல்லாம் கிடைச்சிருக்கு. எவ்வளவு பறவைகள் பறந்தாலும் இந்த வானத்துல  இன்னும் இடமிருக்கு. நான் இளைஞர்களை பெருசா மதிக்கிறேன். அவர்களால் இந்த தமிழ் இலக்கிய உலகத்தின் வீச்சு இன்னும்  அதிகமாகும்னு நம்புறேன்.   

-நா.கதிர்வேலன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்