வணிகமும் வளர்ச்சியும்



தலபுராணம்  

ஆங்கிேலயர்கள் முதல்முதலாக இந்தியாவிற்கு வந்ததே வணிகத்திற்காக என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆரம்பத்தில் மிளகுக்காக  கிழக்கிந்தியக் கரையைத் தொட்டிருந்தாலும் மெட்ராஸில் மலிவாகக் கிடைத்த அச்சடிக்கப்பட்ட காலிகோ துணிகளே அவர்களை இங்கே  தங்கி வணிகம் செய்ய வைத்தது.மதுரையைப் போலவோ, தஞ்சாவூரைப் போலவோ, காஞ்சிபுரத்தைப் போலவோ மெட்ராஸிற்கு  பழம்பெருமை எதுவும் இருக்கவில்லை. இந்நகரை மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆளவும் இல்லை.

மெட்ராஸ் என்கிற அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தைச் சுற்றிலும் நெசவுத் தொழில் மட்டுமே சிறப்பாக நடந்து வந்தது. அவ்வளவே! அவர்கள் வணிகத்தைத் தொடங்கியதும் முதல்முறையாக ஐரோப்பிய சந்தைகளில் மெட்ராஸ் கைத்தறித் துணிகள் ஊடுருவின. 1640  முதல் 1644 வரை நான்கு வருடங்களில் சராசரியாக மெட்ராஸில் இருந்து ஏற்றுமதியான பொருட்களின் மதிப்பு மட்டும் வருடம் ஒன்றுக்கு  ரூ.25 ஆயிரம்!இதனால், சுற்றிலும் இருந்த மற்ற ஊர் நெசவாளர்கள் குடும்பம் குடும்பமாக இங்கே வந்து குடியேறினர். அடுத்த ஐந்து  வருடங்களில் துறைமுக ஏற்றுமதி நான்கு லட்சம் ரூபாயாக உயர்ந்தது. ஆரம்பக் காலங்களில் கிழக்கிந்தியக் கம்பெனி ஒவ்வொரு  வருடமும் லண்டனில் இருந்து இரண்டு அல்லது மூன்று கப்பல்களில் மற்ற பொருட்களுடன் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பவுண்ட்  மதிப்புள்ள தங்கத்தையும், ஸ்பானிஷ் டாலர்களையும் மெட்ராஸுக்கு அனுப்பி வைத்தது.

இதில், தங்கம் முழுவதும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்த நாணயத் தயாரிப்பு இடத்தில் பகோடாக்களாக மாற்றப்பட்டன. இந்தப் பகோடா  ஒவ்வொன்றின் மதிப்பும் எட்டு முதல் ஒன்பது ஷில்லிங் ஆகும். தவிர, ஸ்பானிஷ் டாலர்கள் அன்று கிழக்கிந்தியா முழுவதும்  செல்லத்தக்கவையாக இருந்தன.1813ம் வருடம் வரை பகோடா என்ற நாணயமே மெட்ராஸின் நாணயமாக இருந்தது. இதன்பிறகே, பகோடா  என்பது ரூபாயாக மாறியது. ஒரு ரூபாய் இரண்டு ஷில்லிங்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. சில நேரங்களில் ஒரு ரூபாயின் மதிப்பு  இரண்டு ஷில்லிங் பத்து பென்ஸ் எனவும் உயர்ந்தது. நெசவாளர்களுக்கு நிரந்தரமான வருமானம் வர, முன்பைக் காட்டிலும் நிறைய  நெசவாளர் குடும்பங்கள் மெட்ராஸில் குடிபுகுந்தன. இவர்களைப் பார்த்து கணக்கர்கள், பட்டு நெசவாளர்கள், தோல் தொழிலாளர்கள்,  கைவினைக் கலைஞர்கள், எண்ணெய் வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் குடியேறினர்.

தவிர, ஆங்கிலேயர்களும் நெசவாளர்களுக்காக மெட்ராஸில் பல்வேறு இடங்களை உருவாக்கினர். அப்படி வந்தவைதான் காலடிப்பேட்டை,  சிந்தாதரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை போன்ற இடங்கள். 1690ல் கவர்னராக இருந்த தாமஸ் பிட் ஐம்பது நெசவாளர் குடும்பங்களை  மெட்ராஸில் குடியமர்த்தினார். அது நெசவாளர் தெரு எனப்பட்டது. இதுவே நைனியப்ப நாயக்கர் தெரு என பின்னாளில் மாறியதாகத்  தன்னுடைய, ‘Story of Madras’ நூலில் குறிப்பிடுகிறார் க்ளின் பார்லோ.  இதன்பிறகு, 1719ம் வருடம் கவர்னராக இருந்த ஜோசப் காலட்  திருவொற்றியூர் அருகே ஒரு பேட்டையை உருவாக்கினார். இதன் பெயர் காலட்பேட்டை என்றாகி காலடிப்பேட்டையாக மாறியது. 1734ம்  வருடம் நெசவாளர்கள் தேவை அதிகரிக்க, கூவம் நதிக்கரையின் ஓரத்தில் ஒரு பேட்டை உருவாக்கப்பட்டது. சிறிய தறிகள் அங்கு  அமைக்கப்பட்டதால் சின்னத்தறிப்பேட்டை என அழைக்கப்பட்டு நாளடைவில் சிந்தாதரிப்பேட்டையானது.
 
இதேபோல் அன்று கம்பெனியின் கீழ் சாயம் போடுபவர்களும், வெளுப்பவர்களும் அதிகளவில் இருந்தனர். இவர்களுக்குத் திறந்தவெளியும்,  தண்ணீரும் தேவைப்பட, இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடமே பின்னாளில் வண்ணாரப்பேட்ைட என்றானது.ஆனால், ‘‘இது துணி  வெளுக்கும் வண்ணார் சமூக மக்கள் வாழும் இடம் என்பதால் இந்தப் பெயர் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. அது தவறு. புதுத் துணிகளை  பிளீச் செய்பவர்களையே வண்ணார்கள் எனக் கம்பெனி அழைத்தது. அதுவே, வண்ணாரப்பேட்டை என்றானது...’’ என்கிறார் க்ளின் பார்லோ. இதனால், நெசவுத் தொழில் தவிர அன்று பெரிய தொழில்கள் எதுவும் மெட்ராஸில் இல்லை. பின்னர் நிர்வாகம் சார்ந்த பணிகளிலும்,  கல்விக் கூடங்களிலும், நீதிமன்றங்களிலும் பணியாற்ற நிறைய பேர் வந்தனர். இவர்களின் தேவைகளுக்காக மற்றவர்கள் வந்து சேர்ந்தனர்.  இதனால், குடியிருப்புத் தலமாக வளர்ந்ததே ஒழிய தொழில் நகரமாக மெட்ராஸ் வளரவில்லை.

மட்டுமல்ல. மெட்ராஸ் மாகாணத்தில் நிலக்கரி, இரும்பு, எஃகு போன்ற தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான கனிமங்கள் எதுவும்  இருக்கவில்லை. எனவே, தொழிற்சாலைகள் அமைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இவற்றைக் கப்பல்கள் வழியே கொண்டு  வந்திருக்கலாம்தான். ஆனால், மெட்ராஸ் இயற்கையான துறைமுகம் கொண்ட நகர் கிடையாது. 1881ல் செயற்கை துறைமுகம்  அமைக்கப்பட்ட பிறகே குறிப்பிட்டத்தக்க தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே, 18ம் நூற்றாண்டின் இறுதியில் தனிப்பட்ட ஐரோப்பிய  வணிக நிறுவனங்கள் மெட்ராஸுக்கு வந்ததை ‘மெட்ராஸ் கூரியர்’ இதழ் விளம்பரங்கள் மூலம் அறிய முடிகிறது. இந்நிறுவனங்கள்  முத்துக்கள், தங்க ஆபரணங்கள், கடிகாரங்கள், மதுபானங்கள், சீனப் பீங்கான் பொருட்கள், தேயிலை எனப் பல்வேறு வகைப் பொருட்களை  விற்பனை செய்துள்ளன. ஆனால், 19ம் நூற்றாண்டிலேயே பெரிய தொழிற் நிறுவனங்களின் படையெடுப்புகள் நடந்தன.

1805ம் வருடம் தாமஸ் பாரி என்பவர் மெட்ராஸில் முதல்முதலாக தோல் பதனிடும் தொழிற்சாலையை சாந்தோமில் நிறுவினார். சில  வருடங்களிலேயே இதில் முந்நூறு பேர் பணியாற்றினர். இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,  தென்னாப்பிரிக்கா என உலகம் முழுவதும் அனுப்பப்பட்டன. குறிப்பாக காலணிகளும், துணி உள்ளிட்ட மற்ற பொருட்களும் இந்திய  ராணுவத்திற்கு மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் ராணுவத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. நெப்போலியனுடன் வாட்டார்லூ என்ற இடத்தில்  ஆங்கிலேயர்கள் நடத்தியபோரில் பிரிட்டிஷ் படைகள் அணிந்திருந்த காலணிகள் எல்லாம் மெட்ராஸில் தயாரிக்கப்பட்டவைதான். இந்தத் தாமஸ் பாரியே, பாரி அண்ட் கோவைத் தொடங்கியவர். 1788ல் மெட்ராஸ் வந்த இவர் தனி வணிகராக லைசென்ஸ் பெற்று  வணிகத்தைத் தொடங்கினார்.

முதலில், சேஸ் அண்ட் பாரி என்றும், பின்னர், பாரி டேர் அண்ட் கோ என்றும் மாறியது. இப்போது ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரீஸ் பாரி  (EID Parry) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இருந்தும் இதன் அலுவலக இடம் மெட்ராஸ்வாசிகளுக்கு அன்றும் இன்றும் பாரிஸ்  கார்னர்தான்!முதல் பீச் லைனில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இதன் தலைமையக இடம் கர்நாடக நவாபிடம் இருந்து 1775ல்  வாங்கப்பட்ட ஒன்று. பின்னர் 1803ல் பாரியிடம் விற்கப்பட்டது. 1824ம் வருடம் கடலூர் அருகே காலராவால் தாமஸ் பாரி மரணமடைய,  பாரியின் பங்குதாரரான ஜான் வில்லியம் டேர் என்பவர் இந்நிறுவனத்தை மேம்படுத்தினார். இந்நிறுவனம் மெட்ராஸ் மட்டுமல்லாமல்  தென்னிந்தியா முழுவதும் சர்க்கரை, உரம், ரசாயனம், மரம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளை ஆரம்பித்து முன்னோடியாகத்  திகழ்ந்தது. மட்டுமல்ல, குரோம்பேட்டையில் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையையும் பெரியளவில் நிறுவியது.

இந்நேரம், ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸின் கண்காணிப்பாளராக வந்த ஆல்பிரட் சாட்டர்டன் என்பவர் இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்  தகடுகள் மூலம் அலுமினியப் பாத்திரங்களை பரிசோதனை முறையில் உற்பத்தி செய்தார். இதனால், தொழில்துறைக் கல்விக்கு முழுநேர  அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.பின்னர், முழுநேரமாக இயங்கும் அலுமினிய தொழிற்சாலையைத் தொடங்கினார். இதை 1903ம் வருடம்  இந்திய அலுமினிய நிறுவனம் வைத்திருந்த வழக்கறிஞர் எர்ட்லி நார்ட்டனிடம் விற்றுவிட்டார். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  ஸ்பென்சர் அண்ட் கோ, அடிசன் அண்ட் கோ, சிம்சன் அண்ட் கோ, பெஸ்ட் அண்ட் கோ, பர்மா ஆயில் ஷெல் சேமிப்பு நிறுவனம்  போன்றவை வந்தன. இதில், ஸ்பென்சர் பொது வர்த்தகம், ஒயின் தயாரிப்பு, ஏலம் போடுதல் போன்ற பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டது.ஆரம்பத்தில், சார்லஸ் தூரண்ட் என்பவர் 25 ஆயிரம் ரூபாய் எனச் சிறிய முதலீட்டில் தொடங்க பின்னர் ஜெ.டபிள்யூ. ஸ்பென்சர் என்பவர்  அவருடன் கைகோர்த்தார். மெட்ராஸ் கன்னிமாரா, பெங்களூர் வெஸ்ட் எண்ட் போன்ற ஹோட்டல்களின் உரிமையாளர்களும் ஸ்பென்சர்  நிறுவனத்தினர்தான்.

அடிசன் அண்ட் கோ 1873ம் வருடம் ஹாகிங்ஸ் என்பவரால் அச்சகப் பணிக்காக சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், 1886ம் வருடம்  இதை டாம் லூக்கர் என்பவர் விலைக்கு வாங்கி வளப்படுத்தினார். இந்நிறுவனம் ஆறடி நீள ஸ்பிரிங் உடைய ‘வார்ட்டர்பரி’ என்ற பெயரில்  குறைந்த விலைக் கடிகாரங்களை அறிமுகப்படுத்தியது. 1890ல் சைக்கிள் தொழிற்சாலை ஒன்றையும் தொடங்கி சைக்கிள்  தொழிற்சாலையின் முன்னோடியாகத் திகழ்ந்தது அடிசன்! ஏ.வி.பெஸ்ட் மற்றும் ஜான் மெக்லின்டாக் என்பவர்கள் இணைந்து பெஸ்ட் அண்ட்  கோவைத் தொடங்கினர். இந்நிறுவனம் ேதால் பதனிடும் தொழிற்சாலையுடன் தோல் பொருட்கள் விற்பனையும் செய்து வந்தது. தவிர, மண்ணெண்ணெய் விநியோகத்தையும் செய்தது.

இந்நிறுவனங்களுக்கெல்லாம் முன்பே 1840 வருடம் சிம்சன் என்பவரால் சிம்சன் அண்ட் கோ தொடங்கப்பட்டு விட்டது. கோச், கேரேஜ்  தயாரிப்புகள், அழகுபடுத்தப்பட்ட ரயில் கோச், ேமாட்டார் கார்கள் எனப் பலவற்றை உற்பத்தி செய்தது. இந்தியாவில் முதல் சிமென்ட்  நிறுவனமும் மெட்ராஸில்தான் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்திய தொழில் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இந்த சிமென்ட் ஆலையில்  வருடத்திற்குப் பத்தாயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.

இது ‘மெட்ராஸ் போர்ட்லேண்ட் சிமென்ட் கோ’ என அழைக்கப்பட்டது.தவிர, பீடித்  தொழிற்சாலைகள் திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளில் சிறு தொழில்களாக நடந்து வந்தன. ஆனால், இத்தனை  தொழில்களும், தொழிற்சாலைகளும் அடுத்தடுத்து வந்தாலும் மெட்ராஸின் பாரம்பரியம் நெசவுதான். அதற்காக வந்த ஒரு பஞ்சாலைதான்  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையாக இருந்தது. அதன் பெயர் பின்னி அண்ட் கோ! நூற்றாண்டைக் கடந்து செயல்பட்ட  இந்நிறுவனம் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். l

=பேராச்சி கண்ணன்  ராஜா