கால்நடைக் மருத்துவக் கல்லூரி...தலபுராணம்

கால்நடைகளுக்கும் மனிதனுக்குமான உறவு என்பது ஆற்றங்கரை நாகரிகத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. பழங்காலத்தில் கால்நடைகளைத் தெய்வமாகவே வழிபட்டனர். நாணயங்களில் கூட கால்நடையின் வடிவத்தைப் பொறித்து அழகு பார்த்தனர். அதனால், கால்நடை மருத்துவம் என்பதும் பழமையான ஒன்றுதான். இந்தியாவில் கிறிஸ்து பிறப்பிற்கு 250 வருடங்கள் முன்பே, சந்திரகுப்த மௌரியர் காலத்திலேேய கால்நடை மருத்துவம் தோன்றிவிட்டது. அப்போது கால்நடை மருத்துவர்கள் ‘சாலிஹோத்ரியா’ எனப்பட்டனர்.

பின்னர், அசோகர் காலத்தில் கால்நடை மருத்துவமனை உருவாக்கப்பட்டு, நாட்டு மருந்துகளைக் கொண்டு மருத்துவம் பார்க்கப்பட்டது. நவீன கால்நடை மருத்துவம் என்பது 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தொடங்கியது. இந்தியாவில் தங்கள் குதிரைகளுக்காகவே முதலில் கால்நடை மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். அவர்களுக்கு இங்கே சிறந்த பொலி குதிரைகளைக் கண்டடைவது சிரமமாக இருந்தது. இதனால், வங்காளத்தில் குதிரைப்படைகளுக்குத் தேவையான குதிரைகளை உருவாக்க பண்ணை ஒன்றைத் தோற்றுவித்தனர்.

இந்தப் பண்ணைக்கு 1808ம் வருடம் குதிரை சிறப்பு மருத்துவரான வில்லியம் மூர்கிராஃப்ட் நியமிக்கப்பட்டார். இவர்தான் கால்நடை மருத்துவம் படித்த முதல் ஆங்கிலேயர். மட்டுமல்ல. பிரான்ஸ் நாட்டின் லயன் நகரில் தோற்றுவிக்கப்பட்ட உலகின் முதல் கால்நடை மருத்துவப் பள்ளியில் பயின்றவர். அவர், இங்கே கால்நடை அறிவியலின் நெறிமுறைகளைக் கொண்டு வந்தார். பிறகு, கால்நடை மருத்துவர்களின் தேவை அதிகரிக்க, அது 1827ம் வருடம் ராணுவக் கால்நடை மருத்துவத் துறை என்ற புதிய துறையை இந்தியாவில் உருவாக்க வித்திட்டது.

பின்னர், புனேவில் 1862ம் வருடம் ராணுவக் கால்நடை மருத்துவப் பள்ளியும் தொடங்கப்பட்டது. இங்கே சிறப்பான பயிற்சி அளித்து ராணுவக் கால்நடை மருத்துவத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நேரம் கால்நடை நோய்கள் அதிகரித்தன. விளைவு... இந்திய பிரிட்டிஷ் அரசு 1869ம் வருடம் ‘இந்திய கால்நடை பிளேக் கமிஷன்’ ஒன்றை நியமித்து கால்நடைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கேட்டது. இந்தக் கமிஷன் அளித்த பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று, கால்நடை மருத்துவப் பள்ளிகள் ஆரம்பித்து இந்திய விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது.

இதனால், 1877ம் வருடம் பாபுஹார் (உத்தரப்பிரதேசத்தில் உள்ளது) என்ற ஊரில் முதல் கால்நடை மருத்துவப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இங்கே உருது மொழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இங்கு படிப்பவர்கள், சுற்றிலுமுள்ள இடங்களுக்கும் ராணுவப் பண்ணைகளுக்கும் உதவியாளராக பணியமர்த்தப்பட்டனர். பின்னர், லாகூரில் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது) முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி 1882ம் வருடம் தொடங்கப்பட்டது. இங்கும் உருது மொழியிலேயே கற்றுத் தரப்பட்டது. தொடர்ந்து இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வியில் முதல் கால்நடைமருத்துவக் கல்லூரி 1886ம் வருடம் பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கிடையே பஞ்சங்கள் தலைவிரித்தாட, கால்நடைகளின் நோய்களும் அதிகரித்தவண்ணம் இருந்தன. கால்நடை நோய்களைக் கட்டுப்படுத்தவும், காளைகளின் உடல்நிலையைப் பராமரிப்பது பற்றியும் கேள்விகள் எழுந்தன. இதனால், கால்நடைகளின் மருத்துவ உதவிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கால்நடை மருத்துவத் துறை கொண்டு வரப்பட்டது. முன்னர் ராணுவத்திற்காக மட்டும் செயல்பட்ட கால்நடை மருத்துவத் துறை இப்போது பொதுமக்களுக்காக விரிவுபடுத்தப்பட்டது. இப்படியாக 1892ம் வருடம் மெட்ராஸிலும் கால்நடை மருத்துவத் துறை உருவாக்கப்பட்டது.

ஆனாலும், போதுமான அளவில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால் மாகாணத்தில் சரியான முன்னேற்றம் ஏற்படவில்லை. அப்போதுதான் கால்நடை மருத்துவக் கல்விக்கென ஒரு பயிற்சி நிறுவனம் மெட்ராஸில் தேவை என்பதை உணர்ந்தனர். இதற்கிடையே இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, 1878ம் வருடமே கால்நடை மருத்துவம் ஒரு படிப்பாக சைதாப்பேட்டையில் இருந்த வேளாண் கல்லூரியில் கற்றுத் தரப்பட்டு வந்தது. பின்னர், அங்கேயே கால்நடை மருத்துவ டிப்ளமோ படிப்பும் தொடங்கப்பட்டது.

மருத்துவப் பயிற்சி மட்டும் நந்தனத்தில் இருந்த கால்நடை மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் போதுமானதாக இல்லை. இந்நிலையில்தான் 1900ம் வருடம் கால்நடை மருத்துவ நிபுணர்களின் மாநாடு அரியானாவிலுள்ள அம்பாலா நகரில் நடந்தது. இங்கே கால்நடை மருத்துவப் படிப்பிற்கான சரியான பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படியே 1903ம் வருடம் ‘மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி’ திறக்கப்பட்டது. வேப்பேரியில், ‘டாபின் ஹால்’ எனப்படும் கட்டடத்திலிருந்து இந்தக் கல்லூரி செயல்படத் தொடங்கியது.

இந்தக் கட்டடத்திற்கு மாத வாடகை 60 ரூபாய்! 1798ல் ஜேம்ஸ் டாபின் என்கிற ஏல நிறுவனக்காரர் வேப்பேரியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி தன்னுடைய தோட்ட இல்லத்தை அமைத்திருந்தார். இதன் பெயரே டாபின் ஹால். இதைப் பின்னாளில் அரசு பெற்று மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரியை அமைத்தது. மெட்ராஸ் கால்நடை மருத்துவத் துறையின் முன்னாள் கண்காணிப்பாளராக இருந்த மேஜர் டபிள்யூ.டி.கன் என்பவர் பகுதிநேர முதல்வராக நியமிக்கப்பட்டார். இருபது மாணவர்களுடன் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப் பட்டது கல்லூரி!  

மூன்று வருட டிப்ளமோ படிப்பு, ‘Graduate of Madras Veterinary College’ என அழைக்கப்பட்டது. சுருக்கமாக, ‘GMVC Diploma’ எனச் சொல்லப்பட்டது.கல்விக்கான பயிற்சி சிறப்பாக நடந்தாலும் நடைமுறைப் பயிற்சிக்கென்று ஒரு மருத்துவமனை தேவையாக இருந்தது. அதற்குப் போதுமான இடவசதி டாபின் ஹால் கட்டடத்தில் இல்லை. இதனால், புதிய கட்டடத்தின் அவசியம் ஏற்பட, வேப்பேரி நெடுஞ்சாலையிலேயே 1904ல் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இதை அன்றைய கட்டட ஒப்பந்ததாரர் மாசிலாமணி முதலியார் என்பவர் இந்தோ சாராசெனிக் பாணியில் கட்டினார்.

இதைக் கல்லூரியின் கல்வெட்டில் காணலாம். இந்தச் சிவப்பு வண்ணக் கட்டடத்திலேயே  இன்றும் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, தென்னிந்திய விவசாயிகளைச் சந்தித்துப் பேசி அவர்களின் தேவைகளுக்கேற்ப கல்லூரியின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுக் கொண்டே வந்தன. இந்நிலையில், 1928ம் வருடம் ‘Royal Commission on Agriculture’ என்ற ஆணையம் கால்நடை நோய்களை வேகமாக குணப்படுத்த வேண்டுமெனில், உதவி மருத்துவர்களை நான்கு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றது. அத்துடன், இங்கிலாந்தில் கால்நடை மருத்துவத்தில் உயர்நிலைப் படிப்பு இருப்பதுபோல் இங்கும் கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றது.

இப்படியாக, 1935ம் வருடம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி இணைக்கப்பட்டது. அடுத்த வருடமே பி.வி.எஸ்சி பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டது. இந்தியாவில் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பி.வி.எஸ்சி டிகிரி வழங்கிய முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றது மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி! டிப்ளமோ படிப்பு நான்கு வருடமும், பட்டப்படிப்பு ஐந்து வருடமும் கற்றுத் தரப்பட்டன. பின்னர், 1946ம் வருடம் GMVC டிப்ளமோ நீக்கப்பட்டு பட்டப்படிப்பு மட்டும் தொடர்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு முதுநிலை, ஆய்வுப் படிப்புகள் கொண்டு வரப்பட்டன. மட்டுமல்ல. இன்று மாதவரத்தில் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விதை, மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.                                              

சில தகவல்கள்

ஆரம்பத்தில் இலவசக் கல்வியாகவே தொடங்கப்பட்டது. இதில், 50 சதவீத மாணவர்களுக்கு மாதம் பத்து ரூபாய் ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்பட்டது.  
* 1929ம் வருடம் முதல்வராக நியமிக்கப்பட்ட வி.கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவரே இந்தக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வர் ஆவார்.
* 1931ம் வருடம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயில் கல்லூரி விடுதி கட்டப்பட்டது.
* 1945ம் வருடம் மாணவர் சேர்க்கை 70லிருந்து 80 ஆக அதிகரிக்கப்பட்டது.
* 1947ம் வருடம் பால்வளத் துறையும், கால்நடை வளர்ப்புத் துறையும் ஆரம்பிக்கப்பட்டன. கூடவே, எம்.எஸ்சி மற்றும் பிஹெச்.டி படிப்புகளும் கொண்டு வரப்பட்டன.
     
* 1953ல் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு ஐம்பதாவது வருட கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
* 1958ம் வருடம் இக்கல்லூரி தென்மண்டல பட்டமேற்படிப்பு ஆய்வு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட, எம்.வி.எஸ்சி படிப்பு தொடங்கியது.
* 1959ம் வருடம் புதிய கட்டடம் அன்றைய முதல்வர் காமராஜரால் தொடங்கப்பட்டது. இன்று இந்தக் கட்டடம் ‘கிளினிக் பிளாக்’ ஆக செயல்பட்டு வருகிறது.
* 1969ம் வருடம் இந்தக் கல்லூரி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் என மாற்றியமைக்கப்பட்டது.
* 1974ம் வருடம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இந்தக் கல்லூரி இணைக்கப்பட்டது.
* 1985ம் வருடம் நாமக்கல்லில் இரண்டாவதாக கால்நடை மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
     
இந்த இரண்டு கல்லூரிகளும் 1989ம் வருடம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைய, மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகத்தின் இன்றியமையாத கல்லூரியாக மிளிரத் தொடங்கியது. மட்டுமல்ல. ஆசியாவின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இதனுடன் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியும் மற்ற மையங்களும் இணைந்திருந்தன. மீன்வளப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் அதனுடன் அந்தக் கல்லூரிகள் இணைந்துவிட்டன. 1991ம் வருடம் முதல் செமஸ்டர் சிஸ்டம் பின்பற்றப்படுகிறது.
     
இப்போது, பல்வேறு விலங்குகளுக்கான மருத்துவமும் இக்கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் பார்க்கப்படுகின்றன. தினமும் குறைந்தது நாய், மாடு, கிளி என இருநூறு பிராணிகளுக்கு மேல் மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது விலங்கு அன்றைய நாளில் கால்நடை மருத்துவப் படிப்பு ஆண்களுக்கானதாகவே இருந்தது. ஒரு பெண்ணால் இந்தத் துறையில் சாதிக்க முடியுமா.. என்ற கேள்வி இருந்தது. 1948ம் வருடம் இந்நிலைமை மாறியது. இரண்டு பெண்கள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். கல்யாணி என்பவர் அதிக மதிப்பெண் எடுத்து வெளியே வந்த இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் ஆவார். அவருடனே கால்நடை மருத்துவர் பட்டம் பெற்றவர் சக்குபாய் ராமச்சந்திரன். மாணவர்களுக்கான ரத்த வங்கியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர்கள்...

அன்றைய நாளில் கால்நடை மருத்துவப் படிப்பு ஆண்களுக்கானதாகவே இருந்தது. ஒரு பெண்ணால் இந்தத் துறையில் சாதிக்க முடியுமா.. என்ற கேள்வி இருந்தது. 1948ம் வருடம் இந்நிலைமை மாறியது. இரண்டு பெண்கள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். கல்யாணி என்பவர் அதிக மதிப்பெண் எடுத்து வெளியே வந்த இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் ஆவார். அவருடனே கால்நடை மருத்துவர் பட்டம் பெற்றவர் சக்குபாய் ராமச்சந்திரன்.  

- பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சேன்ட் பால்
ஓவியம் : ராஜா