Harvard பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்!



‘‘கனவு மாதிரி இருக்கு. என்னையே கிள்ளிப் பார்த்துக்கறேன்..!’’மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான சுருதி பழனியப்பா. காரணம், ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கான தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்! 20 வயதான சுருதியின் அப்பாவும் அம்மாவும் 1992ம் ஆண்டு வேலை காரணமாக அமெரிக்காவில் குடியேறினார்கள். அந்நாட்டிலேயே படித்து வளர்ந்த சுருதி, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்காக சேர்ந்தார்.

அங்கு நடந்த மாணவர் அமைப்புக்கான தேர்தலில் அவரும் அவரது தோழியான ஜூலியா ஹியூஸாவும் போட்டியிட்டனர். எப்போதும் வாக்குப்பதிவு முறைப்படி நடக்கும் தேர்தல், இம்முறை ரேங்க் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் சுருதியும் ஜூலியாவும் 41.5% வாக்குகள் பெற்றனர். இவர்களை எதிர்த்து நின்ற நாதின் எம் கவுரி மற்றும் அர்னவ் அகர்வால் ஆகியோருக்கு 26.6% வாக்குகளே கிடைத்ததால் சுருதி தலைவராகவும், ஜூலியா துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர்.

விஷயம் இது மட்டுமல்ல... அப்பல்கலைக்கழகத்தில் நடந்து வந்த பாலியல் பிரச்னைகள் உள்ளிட்ட மாணவர்களின் மற்ற பிரச்னைகளை எளிதாக அமைப்புக்குத் தெரிவிக்கும் வகையில் சுருதியும் ஜூலியாவும் பல திட்டங்களைத் தீட்டியிருப்பதுதான் சர்வதேச அளவில் பேசும் பொருளாக இருக்கிறது. 2016ல் பிலடெல்பியாவில் நடைபெற்ற ஜனநாயக தேசிய மாநாட்டில் ஹார்வர்டு சார்பில் பங்கேற்று சுருதி பேசியிருக்கிறார்.

அந்த மாநாட்டில் பேசிய மிகக்குறைந்த வயதுடைய நபர் சுருதிதான்! ‘‘‘மேக் ஹார்வர்டு ஹோம்...’ இதுதான் தேர்தல் அப்ப நாங்க செஞ்ச பிரசாரம். ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒவ்வொரு மாணவருக்கும் அவங்கவங்க வீடு மாதிரி மாறணும். இந்த ஸ்லோகனுக்கு ஏற்பவே நானும் ஜூலியும் செயல்படுவோம்...’’ என்கிறார் சுருதி. இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சுருதியும், ஜூலியாவும் முன்பிருந்த தலைவர்களைக் காட்டிலும் நீண்ட நாட்கள் பணிபுரிய இருக்கிறார்கள்!            

- ஷாலினி நியூட்டன்