எபிசோடு முழுக்க ஒரே ஷாட்!‘மெட்டி ஒலி’ ஒளிபரப்பாகி 12 ஆண்டுகள் கடந்து விட்டன. நெகிழ்வான உறவுகளும், இயல்பான எமோஷனலும் அதை பிரதிபலித்த ஒளிப்பதிவும் இன்றும் அனைவரது மனதிலும் நிறைந்திருக்கின்றன. சினிமாவைப் போல அந்த மெகா தொடரிலும் 360 டிகிரி சிங்கிள் ஷாட், ஹேண்டில் ஷாட் என மேக்கிங்கில் மிரட்டியவர் வேறு யாருமல்ல... ஒளிப்பதிவாளர் சேவிலோ ராஜாதான்.‘‘ஒரிஜினல் பெயர் ராஜேந்திரன். அப்பா சேதுபதி, விவசாயி. அம்மா விசாலாட்சி, இல்லத்தரசி. என் பெற்றோர்களுக்கு அடுத்து என்மீது அன்பும் அக்கறையும் காட்டினவர் லோகநாதன் சார்.

அந்த நன்றிக்கடனாத்தான் அவங்க எல்லோர் பெயர்கள்ல உள்ள முதலெழுத்தையும் சேர்த்து என் பெயரை மாத்தி வச்சுக்கிட்டேன்...’’ என இன்ட்ரோ கொடுக்கும், சேவிலோ, ‘மெட்டிஒலி’ திருமுருகனின் ஜூனியர்!‘‘பூர்வீகம் தென்காசி பக்கம், ஊர்மேலழகியான். எனக்கு ரெண்டு அக்கா, மூணு அண்ணன்கள். வீட்ல நான் கடைக்குட்டி. நாங்க 80கள்ல சென்னைக்கு குடிவந்துட்டோம். எழும்பூர்ல அப்ப இருந்த ட்ராஃபிக் போலீஸ் அலுவலகத்துல அப்பா ஃபாஸ்ட் ஃபுட் கேன்டீன் வச்சிருந்தார். ப்ளஸ் டூ வரை சென்னைலதான் படிச்சேன்.

எங்க அம்மாவுக்கு  நான் சினிமால பெரிய ஆளா வரணும்னு ஆச. அவங்க சிவாஜி படம் பார்க்கப் போறப்ப என்னையும் கூட்டிட்டுப் போவாங்க. ப்ளஸ் டூ முடிச்சதும், என்ஜினியர் ஆகலாம்னு நினைச்சேன். ஆனா, ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்ல சேர்ந்துட்டேன். ‘மூன்றாம் பிறை’ல பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவும், ஷாட்ஸும் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. அதனாலயே ஒளிப்பதிவை செலக்ட் பண்ணினேன். இன்ஸ்டிட்டியூட்ல கோல்டு மெடலும் வாங்கினேன். அங்க படிக்கும்போதுதான் திருமுருகன் சாரை தெரியும். அவர் எனக்கு சீனியர்.

என் கிளாஸ்மேட் வைத்தி, அவரோட ஃபைனல் இயர் புராஜெக்ட்களுக்கு ஒளிப்பதிவு பண்ணிட்டிருந்தார். அவர் மூலமா, முருகனோட நட்பு கிடைச்சது. வைத்தி வேறு வேலைகளுக்குப் போறப்ப முருகன் சாரோட குறும்படங்களுக்கு நான் ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன். என் ஒர்க் அவருக்குப் பிடிச்சுப் போச்சு. அந்த நட்பே ‘மெட்டிஒலி’ அமைச்சுக் கொடுத்தது...’’ என்ற சேவிலோ ராஜா ஒளிப்பதிவாளர்கள் கிச்சாஸ், பன்னீர்செல்வம், வி.மணிகண்டன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

‘‘ஃபைனல் இயர் படிக்கிறப்ப ஒளிப்பதிவாளர் கிச்சாஸ்கிட்ட ‘அரண்மனைக்  கிளி’யில் உதவியாளரா சேர்ந்தேன். வடிவேலுவுக்கு அது ரெண்டாவது படம். அப்ப இருந்து வடிவேலுவும் நானும் நல்ல நண்பர்கள். டி.எஃப்.டி. முடிச்சதும், எம்.வி.பன்னீர்செல்வம் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ஆர்.கே.செல்வமணி இயக்கின ‘அதிரடிப்படை’, ‘மக்களாட்சி’, ‘ராஜ முத்திரை’யில் உதவி ஒளிப்பதிவாளரா வேலை பார்த்தேன். பன்னீர்செல்வம் சாரும், இப்ப பாலிவுட்ல நம்பர் ஒன் கேமராமேனா இருக்கற வி.மணிகண்டன் சாரும் இன்ஸ்ட்டிட்யூட்ல கிளாஸ் மேட்ஸ். ஸோ, அவரைப் பார்க்க மணிகண்டன் சார் வருவார்.

என் சுறுசுறுப்பும், சின்ஸியரும் அவருக்கு பிடிச்சுப் போக, அவர் படங்களுக்கும் ஒர்க் பண்ண என்னைக் கூப்பிட்டார். காலையில பன்னீர்செல்வம் சார் படத்துல வேலை... ராத்திரில மணிகண்டன் சார் ஒளிப்பதிவு பண்ணின ‘அதர்மம்’, ‘சரிகமபதநி’... இப்படி ஓய்வே இல்லாமல் ஒர்க் பண்ணியிருக்கேன். அந்த டைம்ல அஜித்தின் ‘காதல் மன்னன்’ படத்துல ஆப்ரேட்டிவ் கேமராமேனா ஒர்க் பண்ணியிருக்கேன். அதுல ‘வானும் மண்ணும்...’ ஓபனிங் பாடலை ஷூட் பண்ணினது நான்தான்...’’ என அடக்கத்துடன் குறிப்பிடும் சேவிலோவை சீரியலுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

‘குப்பி’, ‘வன யுத்தம்’ போன்ற படங்களை இயக்கியவர். அவர் தூர்தர்ஷனுக்காக இயக்கிய ‘கிளாக் ஹவுஸ்’ என்ற சீரியல் மூலம் ஒளிப்பதிவாளராக சின்னத்திரையில் அறிமுகமாகியிருக்கிறார்.‘‘சீரியலைப் பொறுத்தவரை ஃபிக்‌ஷன், நான்ஃபிக்‌ஷன்னு பத்து வருஷங்கள் ஒர்க் பண்ணிட்டேன். கிட்டத்தட்ட ரெண்டாயிரம் எபிசோட் வேலை பார்த்திருப்பேன். அப்ப திருமுருகன் சார் சீரியல்களுக்கு வைத்தி ஒளிப்பதிவு பண்ணிட்டிருந்தார். இப்ப கன்னடப் படங்கள்ல பிசி ஒளிப்பதிவாளரா அவர் இருக்கார்.

இவங்க ரெண்டு பேரையும் பார்க்க ஸ்பாட்டுக்கு அடிக்கடி போவேன். அப்ப வைத்தி மலையாளப் பட ஒளிப்பதிவிலும் இருந்ததால, க்ளாஷ் ஒர்க் வேலைகளை நான் கவனிப்பேன். அந்த அனுபவத்துல விகடன் டெலிவிஸ்டாஸுக்காக அவர் இயக்கிய ‘சத்யா’விற்கு ஒளிப்பதிவு பண்ணினேன். அப்புறம் திருமுருகன் சார் ‘காவேரி’ இயக்கினார். முழுக்க முழுக்க மும்பைல படமாக்கப்பட்ட தொடர். 60 எபிசோடுகள் போச்சு. இதுக்குப் பிறகுதான் ‘மெட்டி ஒலி’க்கு வந்தோம்...’’ என்றவர் ஒரு எபிசோடை ஒரே ஷாட்டில் எடுத்த மேக்கிங்கை விவரித்தார்.

‘‘‘மெட்டி ஒலி’ல நாங்க பண்ணின சாதனையை இப்ப வரை சீரியல் உலகில் யாரும் பண்ணலைனு சொல்லலாம். இப்ப சீரியல்கள்ல ‘ரெட்’, ‘அலெக்ஸா’னு மூவி கேமராக்கள் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, நான் அப்ப பயன்படுத்தினது ஆரி 435 கேமரா.‘மெட்டி ஒலி’யின் 170வது எபிசோடு வர்றப்ப ‘இந்த எபிசோடை ஒரே ஷாட்ல எடுத்தால் என்ன?’னு முருகன் சார் கேட்டார். அப்படி ஒரே ஷாட்ல ஷூட் பண்ணினா அந்த எமோஷன் சிந்தாமல், சிதறாமல் நம் மனசில நிற்கும். ஒரு எபிசோடு முழுக்க ஒரே ஷாட்ல எடுக்கணும் என்பது சாதாரண விஷயமில்ல.

சிஏ எக்சாம் எழுதற மாதிரி. பத்து சப்ஜெக்ட்டுல ஒண்ணு போனாலும் மறுபடியும் பத்தையும் எழுதணும்! இப்படிப்பட்ட ரிஸ்க்கை நாங்க எடுத்தோம். இதுக்கு சன் டிவி கொடுத்த சப்போர்ட்டை மறக்கவே முடியாது. முன்கூட்டியே இப்படி செய்யப் போறோம்னு சொல்லிட்டோம். எபிசோட் நடுவுல விளம்பர பிரேக் விட்டா ஒரே ஷாட்ல எடுக்கற முயற்சி வீணாகிடும்னு அவங்க புரிஞ்சுகிட்டு விளம்பர இடைவெளி இல்லாம அந்த எபிசோடை ஒளிபரப்பினாங்க. ‘நாதஸ்வரம்’ல லைவ் ஷாட் கின்னஸ் ரெக்கார்ட் பண்ணினதுக்கு அஸ்திவாரம் போட்டதே ‘மெட்டிஒலி’தான்.

திருமுருகன் சாரோடு பத்து வருடங்கள் பயணம் செஞ்சேன். இடையில விளம்பரப் படங்கள், குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணினேன். அப்புறம் ஒய்.ஜி.மகேந்திரன் சீரியல்கள், அனிருத்தின் அம்மா லட்சுமி இயக்கின ‘சாவித்ரி’, ‘மின்சாரப் பூவே’ சீரியல்களுக்கும், அவங்க இயக்கின விளம்பரப் படங்களுக்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன்...’’ என்ற சேவிலோ ராஜா, ‘எம்டன் மகன்’ வழியாக பெரியதிரைக்கு வந்திருக்கிறார்.‘‘அந்தப் படத்துக்கு அப்புறம் ‘நெல்லை சந்திப்பு’, ‘காசேதான் கடவுளடா’, ‘திமிரு 2’, ‘கிழக்கு பார்த்த வீடு’, ‘கன்னியும் காளையும் காதல்’,

‘ஸ்வாதி கொலை வழக்கு’, ‘எம்டன் மக’னுக்குப் பிறகு மறுபடியும் பரத்துடன் ‘8’, ஸ்ரீதர் மாஸ்டரின் ‘சாவடி’னு ஒரு டஜன் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன். சீரியல்ல சாதிச்சது மாதிரி சினிமாலயும் பெயர் வாங்கணும். அதுக்காகத்தான் இப்ப முயற்சி செஞ்சு கிட்டு வரேன்...’’ புன்னகைக்கும் சேவிலோ ராஜாவின் மனைவி சண்முகப்பிரியா, எம்.எஸ்சி., எம்.பில் படிப்பில் டபுள் கோல்டு மெடலிஸ்ட்!‘‘அரேஞ்ஜ்டு மேரேஜ்தான்.

ரெண்டு மகள்கள். பெரிய பொண்ணு இமயா, பத்தாவது படிக்கறா. இளையவள் நக்‌ஷத்ரா, ஏழாவது. எங்க குழந்தைங்க நல்ல மார்க் எடுப்பதைப் பார்த்து, ‘நீங்க எங்க டியூஷன் படிக்கிறீங்க?’னு ஸ்கூல்ல விசாரிச்சாங்க. ‘எங்க அம்மாதான் டியூஷன் எடுக்கறாங்க’னு அவங்க சொன்னதும், எல்லாருமே ஆச்சரியப்பட்டிருக்காங்க. இப்ப, என் மனைவி விஐபி பசங்களோட டியூஷன் டீச்சர்! இயக்குநர் ஹரி, ஹாரிஸ் ஜெயராஜ் குழந்தைகள், திலகவதி ஐபிஎஸ்ஸின் பேத்திகள்னு நிறையப்  பேருக்கு டியூஷன் எடுக்கறாங்க!’’

- மை.பாரதிராஜா
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்