ஜெ 60தமிழ்ப் பத்திரிகை உலகில் ஓவியர் ஜெயராஜ் ஆல்டைம் ஃபேவரிட். பக்குவமான அத்தனை ரசிகர்களுக்கும் அவர் பெயர் தெரியும். புது வகை சித்திரங்களை அறிமுகப்படுத்திய ஜெயராஜ் வரைய ஆரம்பித்து 60 வருடங்கள் நிறைந்துவிட்டன. பத்து லட்சத்திற்கும் மேல் ஓவியங்கள், ஏராளமான விருதுகள்... பத்திரிகைகளை வாங்கும் தமிழர் இல்லங்களில் ஜெ... ஓர் அடையாளம். வேரூன்றி நிற்கும் அந்த வித்தைக்காரரைச் சந்தித்தது நிறைந்த அனுபவம். ‘இதோ மை ஸ்வீட் ஹார்ட்’ என ஜெயராஜ் அறிமுகப்படுத்தியதும் ரெஜினா அம்மையார் சிந்துகிற புன்னகையில் வீடே வெளிச்சம் பெறுகிறது.

கண்களில் அன்பு வழிய தன் வாழ்க்கையை ரீவைண்ட் செய்கிறார்...மூணு வயசில் ஓவியம் வரைய ஆரம்பிச்சேன். பெண்களை நிர்வாணமாக வரைவேன். எங்க அம்மா பார்த்திட்டு ‘என்னடா அதிகப்பிரசங்கி...’னு திட்டுவாங்க. எனக்கு அது ஒரு சித்திரம் என்பதற்கு மேல் ஒண்ணும் தெரியாது. ஆனால், அந்தப் பக்கம் வந்த அப்பா பார்த்திட்டு ‘எவ்வளவு அழகா போட்டுருக்கான். பாராட்டாம தப்பு சொல்றே. குழந்தை வரையத் தொடங்கும்போதே அதை முடிச்சு வைக்கக்கூடாது. உன் வேலையைப் பாரும்மா...’னு சொல்லி அனுப்பிடுவார்.

அப்புறமும் என் ஓவியத்தை வாங்கிப்பார்த்திட்டு ‘இந்தத் தொடை அந்தத் தொடையைவிட கொஞ்சம் மெலிவா இல்லை, கொஞ்சம் பேலன்ஸ் பண்ணி வரைஞ்சு பார்...’னு தட்டிக்கொடுத்திட்டுப் போனார். Nude படம் போட்டதை தப்பான காரியம் பண்றேன்னு எடுத்துக்காம அவர் அதை ஒரு கலையாகப் பார்த்தது பெரிய விஷயம். அப்புறம்தான் அனாடமியை நல்லா வரைஞ்சேன். நான் கவர்ச்சியாக படம் வரைகிறேன்னு இப்ப வரைக்கும் சொல்வாங்க. பெண் அழகா இருக்கணும், ஆண் பிள்ளைகள் எப்படியிருந்தாலும் சரின்னு ஒரு விஷயம் இங்கே காலங்காலமாய் இருக்கே.

பெண்கள் அழகாக இருப்பது என்பது இயற்கையோட நியதி. அல்லது விருப்பம். ஒரு படம் வரைந்து, அது மக்களுக்குப் பிடிக்கிறது சாதாரணமான விஷயமில்லை. மனசு சந்தோஷமாக இருக்கணும். இளசா இருக்கணும். பி.ஏ.எக்கனாமிக்ஸ் படிச்சதும் எந்த வேலைக்கும் போகலை. அப்பாதான் இந்த மாதிரியான படங்களுக்கு மதிப்பு இருக்குப்பான்னு சொல்லி ‘குமுதம்’ ஆபீஸுக்கு போகச் சொன்னார். ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை சுலபத்தில் சந்திக்க முடியாது. ஏழு கடல், ஏழு மலை தாண்டி போறது மாதிரி. நான் சுலபமாக சந்திச்சிட்டேன்.

வரைந்த ஓவியங்களைக் கொடுத்து அனுப்பிட்டு உட்கார்ந்திருக்கும்போதே அவர்கிட்டே இருந்து அழைப்பு வந்தது. உள்ளே போனால், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன்னு உட்கார்ந்திருக்காங்க. எஸ்.ஏ.பி. என் ஓவியங்களை ரசித்துவிட்டு ரா.கி.ரங்கராஜன் எழுதிய கதையைக் கொடுத்துப் படம் வரையச் சொன்னார். உடனே வரைந்து கொடுத்ததும் அவங்களுக்குப் பிடித்துவிட்டது. கலர்ஃபுல்லாக என் கேரியரை ஆரம்பித்தது அவர்களே. ‘தினமணி கதிரி’ல் சாவி, எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் படம் போடச்சொன்னார்.

சுஜாதாவிற்கு வரையச் சொன்னார்கள். நவீன இளைஞர்கள் மனதிற்குள்ளும் வந்துவிடுகிறேன். கடைசிவரைக்கும் சாவி அவர்களை மறக்க இயலாது. என்னை ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும் அழைத்துப்போய் அழகு பார்த்தார். அவர் எங்கே போனாலும் எனக்காக ஸ்காட்ச் வாங்கி வருவார். ஒவ்வொரு புதுவருடமும் புது ஒரு ரூபாய் நோட்டுக்கட்டை பரிசாக அளிப்பார். அந்தக் கட்டுகளை அவரது ஞாபகம் ஏந்தி இன்னும் வைத்திருக்கிறோம். அவர் ஏன் எங்களை மட்டும் இத்தனை பிரியமாக வைத்திருந்தார் என்பதற்கு எங்களிடம் பதிலே இல்லை.

சொல்ல முடியவில்லை. உலகத்தில் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமா என்ன? நாங்கள் எங்கள் வாழ்வில் மிகவும் உணர்ந்த ஒரு அற்புதமும் பிரியமுமாக சாவி அய்யா இருக்கிறார். ஓடுகிற காலம் துயரத்தை மறைக்கிறது. வயதை அழிக்கிறது. ஆனால், சாவியின் அன்பை மட்டும் யாராலும் அழிக்க முடியவில்லை. இன்னொரு அற்புதமான விஷயம், கலைஞரைச் சென்று பார்த்தது. அவர் மாதிரி கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது. என்னை நண்பன் மாதிரி பக்கத்தில் உட்காரவைத்து, எழுதப்போகிற வரலாற்றுத்தொடருக்கு எப்படி படம் போடலாம் என விவாதிப்பார்.

என்மேல் அன்பு வைத்து ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பாயும் புலி பண்டாரக வன்னியன்’, ‘குறளோவியம்’, ‘தொல்காப்பியம்’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’ என அனைத்து தொடர்களுக்கும் வரையச் சொன்னார். பாராட்டி தட்டிக்கொடுத்தார். முதல் சந்திப்பிலேயே எஸ்.ஏ.பி. என்னோடு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ‘‘என்னய்யா, மந்திரம் போட்டு வச்சிருக்க. இப்படி பேசிட்டு இருக்காரு...’ என்று ஜ.ரா.சு. கேட்க, ‘மந்திரம் அவர் போடலை. படம் போடுது...’ என்று சொல்லிச் சிரித்தார் ரா.கி.ரங்கராஜன். ‘அப்புசாமியும் சீதாப்பாட்டியும்’ என்ற தொடரை பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் ஜ.ரா.சு. எழுதினார்.

அதற்கு ஒரு தாத்தா படம் வேணும் என்றார். உடனே மயிலாப்பூரில் நான் பார்த்த ஒரு தாத்தாவை ஞாபகத்திற்குள் கொண்டுவந்து வரைந்து கொடுத்தேன். அவர்தான் அப்புசாமி. ‘என்னய்யா, இவ்வளவு அருமையா வரைஞ்சு தர்றே...’னு வியந்து ஆசிரியரிடம் கொண்டு போனார். எஸ்.ஏ.பி.யும் ‘பிரமாதமாக வரையறீங்க ஜெ...’னு பாராட்டினார். அப்பொழுதெல்லாம் சூப்பர் என்ற வார்த்தை உபயோகத்திலேயே இல்லை. அப்புறம் ‘தாத்தா இருந்தால் பாட்டி வேண்டாமா...’ என்றேன். ‘என்னய்யா, எனக்கு க்ளூ கொடுக்கிறாய்...’னு சொல்லிட்டு ‘வரைஞ்சு தாங்க’ என்றார்.

அந்த தாத்தாவையே சில திருத்தம் செய்து பாட்டியாக்கி விட்டேன். அதுதான் சீதாப்பாட்டி! இப்பவும் நானும் ரெஜினாவும் கல்யாணம் காட்சிக்குப் போனால் ‘அப்புசாமி - சீதாப்பாட்டி’ வந்திட்டாங்க என எங்களை  வரவேற்பார்கள். எனது ஓவியங்கள் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’, ‘குங்குமம்’ என பிரதான பத்திரிகைகளில் அட்டைப்படங் களாக வந்தன. இதெல்லாம் எனக்குக் கிடைத்த பெருமை! 1962ல் எங்களுக்குத் திருமணம் நடந்தது. ரெஜினா என் வாழ்வில் கிடைத்த பாக்கியம். அவள் அன்பை பெரிதாக வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

வரைந்து காட்டவும் முடியாது. எனக்கு அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என பெரும் சொந்தமுண்டு. தாய்மாமன் கூட மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருவரிடமும் சிறு பிணக்கில்லை. என்னை விடவும் ரெஜினா அவர்களை அன்பில் நனைப்பாள்.‘டேய், நீ கொடுத்து வைத்தவன்டா தம்பி, அருமையான பொண்ணுடா...’ என்று என் அண்ணனே காதில் வந்து சொல்வார். ‘பிரதர், கண்ணு வைச்சிடப்போறீங்க...’னு நான் சொல்லிச் சிரிப்பேன். அவளுக்கு அன்பு செலுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. குட்டிப்பூனை, அணில் குஞ்சு கூட அவளைப் பார்த்துவிட்டுப் போக வரும்.

ஏதோ பெத்த பிள்ளையை விசாரிக்கிற மாதிரி அவைகளை விசாரிப்பாள். எங்கள் அன்பிற்கு சாட்சியங்களாக ஹில்டா, டிஸ்னி இருக்கிறார்கள். திருமணம் ஆன புதிதில் அவளைப் பார்க்க தூத்துக்குடி போவேன். நான் தெரு முனையில் சூட்கேஸுடன் வரும்போதே ஓடிவந்து நடுரோட்டில் என் கழுத்தைக் கட்டிக் கொள்வாள். ‘என்னடா நடக்குது இங்கே’ என்பதுபோல அனைவரும் பார்ப்பார்கள். இதையும் நான் படம் வரைந்து ‘குமுத’த்தில் அட்டைப்படமாக வந்திருக்கிறது! இப்போதும் நான் வெளியே போனால் ‘ஜெயராஜ் சாரா’ என நிறுத்தி விசாரிக்கிறார்கள். கையைப் பிடித்து என் சௌகரியம் பற்றி கவனம் வைக்கிறார்கள். அப்படித் தொடும் ஒவ்வொரு இடத்திலும் நான் துளிர்க்கிறேன்!                    

- நா.கதிர்வேலன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்