பேச்சுக்கும் இடம் பொருள் ஏவல் உண்டு



கடலை போடுவது எல்லை மீறினால் என்னவெல்லாம் விபரீதம் ஆகுமென்று கடந்த வாரம் செய்தித்தாளில் வாசித்த இந்த செய்தியே சாட்சி. கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானம் அது. பயணி ஒருவர் செல்போனில் வெடிகுண்டு பற்றி எதிர்முனையில் நண்பர் ஒருவரிடம் பேசியிருக்கிறார். அக்கம் பக்கத்து பயணிகள் பேஜாராகி விமான ஊழியர்களிடம் அவரைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். பைலட் வரை விஷயம் போயிருக்கிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் சேர்ந்து, அவர்கள் மத்திய ரிசர்வ் படையினரை எச்சரிக்கை செய்ய, கிளம்ப வேண்டிய விமானம் தடுத்து நிறுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பயணியைப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அவர் ஏதோ கேஷுவலாகத் தான் பேசியிருக்கிறாராம். தீவிரமாக விசாரித்ததில் வெறும் அம்மாஞ்சி என்று தெரிந்திருக்கிறது. பேசுவது ஒரு குற்றமில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமையே பேச்சு சுதந்திரம்தான். “நல்ல பொண்ணுதான். என்ன, வாய் கொஞ்சம் அதிகம்!” யாருக்காவது பெண் பார்க்கப் போகும்போது, அக்கம் பக்கத்தில் விசாரித்தால் இதுபோல எந்தப் பெண்ணைப்பற்றியாவது சொல்லியிருப்பார்கள். ஏற்கனவே சொன்னது மாதிரி வாய் இருப்பது பெரிய குற்றமில்லைதான்.

வாயாடியாக இருப்பது மட்டும் குற்றமாகி விடுமா என்ன? சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கூட வாயே இல்லாமல் தானிருந்தது. கணவன் ‘கிணற்றில் குதி’ என்று சொன்னாலும் கூட, முட்டாள்தனமாக குதித்துவிட தயாராக இருந்த பத்தினித் தெய்வமாகத்தான் அவளை இளங்கோவடிகள் சித்தரித்திருந்தார். ஆசைநாயகியை நாடிப்போன கணவனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்பாளா? ஆசைநாயகி அலுத்துப்போய் திரும்பியவனைப் பார்த்தாவது ஏதாவது சொன்னாளா? சாகிறவரைக்கும் கண்ணகி அப்படியே வாழ்ந்திருந்தால் கண்ணகிக்கு கோட்டம் அமைத்திருப்போமா?

சென்னை கடற்கரைச் சாலையில் சிலை தான் வைத்திருப்போமா? பாண்டிய மன்னனிடம் பக்கம் பக்கமாக ‘தேராமன்னா செப்புவதுடையேன்’ என்று வசனம் பேசியதால்தானே கண்ணகிக்கு பெருமை. நீதி வழுவியது புரிந்து “யானோ மன்னன்? யானே கள்வன்!’ என்று சொல்லி பாண்டியன் உயிர்நீத்தான். அதன்பிறகு கண்ணகி மதுரையை எரித்தாள். அவளுக்கும், அவள் கணவனுக்கும் வானுலகில் இடம் கிடைத்தது. இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால், தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை தேவையான அளவு பேசியே தீரவேண்டும்.

பேசாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். அதே நேரம் அதிகம் பேசுபவர்கள் படுதோல்வி அடைகிறார்கள். பேசாவிட்டால் தோல்வி. அதிகம் பேசினால் படுதோல்வி. என்னதான் செய்வது என்கிறீர்களா? பேசுங்கள். எதைப் பற்றியும் நாலு பேரிடம் அதிகம் பேசுங்கள். பதிலுக்கு அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள். பேசுவதற்குத்தானே வாய்? கேட்பதற்குத் தானே காது? இழவு வீட்டுக்குப் போன மாமியாரும் மருமகளும் அதிகம் பேசிக் கெட்ட கதையைப் பார்ப்போம். இழவு வீட்டில் பெண்கள் எதிரெதிரே அமர்ந்து ஒப்பாரி பாடி மாரிலடித்துக் கொண்டு அழுவார்கள்.

இறந்து கிடப்பவனை நினைத்து அழுவதைக் காட்டிலும் தத்தம் சொந்த சோகங்களை நினைத்து இழவு வீடுகளில் அழுபவர்களே அதிகம். அந்த ஊரின் தெருக்கோடி முனைவீட்டில் ஒரு கிழவன் இறந்தான். வீட்டின் முகப்பில் பாகற்காய் பந்தல். பந்தல் முழுக்க பாகற்காயாய் காய்த்து தொங்குகிறது. ஒப்பாரி வைக்க வரும் பெண்களுக்கெல்லாம் பாகற்காய் மீது கண். இழவு விசாரிக்கப் போன நம் மாமியாரும், மருமகளும் ஒப்பாரி வைத்து எப்படி அழுதார்கள் தெரியுமா? ‘பந்தலிலே பாவக்கா, பார்த்து அறு மாமியாரே!’ - ஒப்பாரி ராகத்தில் மருமகள் மாமியாருக்கு சுட்டிக் காட்டுகிறாள்.

அதே ராகத்தில் மாமியாரும் பதில் சொல்கிறாள்.‘போகும்போது பார்த்துக்கலாம், பொறுத்திருடி மருமகளே’மாமியாரும், மருமகளும் பாகற்காயை ஆட்டை போட நினைத்ததை கவனித்துவிட்டாள் இழவு வீட்டுக்காரி. மாமியார், மருமகள் இருவருக்கும் பதிலளிக்கும் வண்ணம் அவளும் ஒப்பாரி வைத்து சத்தமாகப் பாடுகிறாள்.‘விதைக்கல்லோ விட்டிருக்கேன், விரலாலே தொட்டிடாதே!’அக்கம் பக்கம் பார்க்காமல் மாமியாரிடம் பாகற்காயை சுட்டிக்காட்டியது மருமகளின் தவறு. பக்கத்தில் பாகற்காய்க்கு சொந்தக்காரி நிற்கிறாள் என்பது தெரியாமல் மருமகளுக்கு பதில் சொல்லியது மாமியாரின் தவறு. மாமியார் - மருமகள் நோக்கத்தை சோகத்துக்கு இடையிலும் கண்டறிந்து சரியான பதிலடி கொடுத்தது பாகற்காய்காரியின் சாமர்த்தியம்.

நேரம் கெட்ட நேரத்தில் எதையாவது பேசி மாட்டிக் கொள்வானேன்? எதைப் பேசவேண்டும், எங்கு பேசவேண்டும், என்ன பேசவேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு பேசுங்கள். மகிழ்ச்சி, குதூகலம், அன்பு, வெற்றி, காதல், கத்தரிக்காய், இத்யாதி.. இத்யாதி எல்லாம் உங்களைத் தேடி வரும். பேசுவதுதான் பலபேருக்கு தொழிலே தெரியுமா? வாத்தியாரம்மா பேசாவிட்டால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான். டாக்டரம்மா பேசாவிட்டால் நோயாளிகளின் கதி அதோகதிதான்.

காய்கறிக்காரனிடம் பேரம் பேசாவிட்டால் அஞ்சரைப் பெட்டியில் சேர்த்து வைத்த காசு சீக்கிரமே கரைந்துவிடும். அரசியல்வாதி பேசாவிட்டால் ஆட்சியை யார் பிடிப்பது? பால்காரர், கண்டக்டர், டெய்லர், கறிக்கடைக்காரர், வாட்ச்மேன், ஆட்டோக்காரர், மேனேஜர், கிளார்க், ரிசப்ஷனிஸ்ட்... இதுபோன்றவர்களிடமெல்லாம் பேசாமல் ஏதாவது காரியம் சாதிக்க முடியுமோ? வேலைக்காரப் பெண்ணிடம் அக்கம் பக்கம் புரளி பேசாவிட்டால் நமக்கு தூக்கம் வருமா? வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்ரமாதித்தனின் தலையே சுக்குநூறாகி விடுமாம். பேசவேண்டிய இடங்களில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுவதே நலம்.

முன்பெல்லாம் கணவனோடு தனிமையில் கிசுகிசுவென்று பேசுவார்களாம் இல்லத்தரசிகள், ‘தலையணை மந்திரம்’. இப்போதெல்லாம் பைக் பில்லியனில் உட்கார்ந்துகொண்டு காதோரம் தெருவெங்கும் கிசுகிசுத்துக் கொண்டே போகிறார்கள், பில்லியன் தந்திரம்! நல்லவேளையாக கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு கொண்டு வந்ததோ இல்லையோ... ஏகப்பட்ட இல்லத்தரசர்களின் காது தப்பியது. கைப்பேசி வந்து தொலைத்தாலும் தொலைத்தது, எல்லோரும், எப்போதும், எதையாவது, எங்கேயாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நின்றால் பேச்சு, நடந்தால் பேச்சு, படுத்தால் பேச்சு...

செல்போன் கம்பெனி முதலாளிகள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். பெட்ரோல் விலையேற்றம், விலைவாசி உயர்வு, காவிரி பிரச் னை... என எந்தப் பிரச்னையையாவது எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்ப்பதற்கு நாடு தழுவிய பந்த் நடத்தப்படுகிறது. ஏதாவது பயன் இருக்கிறதா? ஒரே ஒருநாள் யாரும், யாரோடும் பேசவே மாட்டோம் என்றொரு பந்த் நடத்தினால் என்னவாகும்? எவ்வளவு கோடிகள் நஷ்டமாகும்? டிவியில் செய்தி வாசிப்பவர் சாடை மொழியில் செய்தி வாசித்தால் எப்படியிருக்கும்? காலையில் இரண்டு இட்லியை விண்டு வாயில் போட்டுக்கொண்டு நாள் முழுக்க உண்ணாவிரதம் கூட இருந்துவிடலாம்.

இப்போதெல்லாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாய் பிரியாணி(!)யை வெட்டு வெட்டென்று வெட்டி உண்ணும் விரதம் கூட இருக்க ஆரம்பித்து விட்டார்கள். மவுனவிரதம் இருப்பது ஒன்றே இன்றைய காலகட்டத்தில் சாத்தியமில்லாததும், மிகக்கடுமையானதாகவும் இருக்கக்கூடும். உரிமைகளைக் கேட்கவும், உணர்வுகளைச் சொல்லவும், உறவாடவும், நட்பினைக் கொண்டாடவும், மகிழ்ச்சியையும் சோகத்தையும் பகிர்ந்து கொள்ளவும்..

எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் பேசியாக வேண்டியிருக்கிறது. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்? பாருங்கள். உங்களிடம் சமயசந்தர்ப்பம் தெரியாமல் எதையோ வெட்டியாக பேசிப்பேசி எனக்கு வாய் வலிக்கிறது. தொண்டை கட்டிக் கொண்டது. எனக்குப் பதிலாக நீங்களாவது சத்தமாகப் பேசுங்கள்... மன்னியுங்கள்... கத்துங்கள்... விண்ணதிர கோஷமிடுங்கள்.. ஆனால் - அந்த கொல்கத்தா பயணி யைப் போல சமய சந்தர்ப்பம் தெரியாமல் ஏடாகூடமாக எதையாவது பேசித் தொலைக்காதீர்கள். பேச்சுக்கும் இடம், பொருள், ஏவல் உண்டு.                         l

- யுவகிருஷ்ணா