விரல்மொழி நல்லது!



மொழி படத்தில் ஜோதிகா பள்ளிக் குழந்தைகளிடம் விரல்களால் பேசுவாரே... அதே மொழிதான். காதுகேளாத, பேசமுடியாத குழந்தைகளுக்கென நர்சரி முதல் நான்காவது வரையிலான சைகை மொழியை நொய்டா காதுகேளாதோர் சங்கம் (NDS), பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு மாநில குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது. தில்லியைச் சேர்ந்த ரூமா ரோகா, இம்மையத்தை 2005ம் ஆண்டு தொடங்கியபோது இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 5. இப்போது அது 75 ஆக அதிகரித்துள்ளது. இப்பள்ளியில் பணியாற்றுபவர்கள் 70% பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதுகேளாதோரின் பிரச்னைகளுக்கு இறுதியாக செவிசாய்த்த இந்திய அரசின் சமூகநலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, 2015ம் ஆண்டு சைகைமொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை (ISLRTC) தில்லியில் தொடங்கியது. இம்மையம், இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் சைகைமொழிக்கான முதல் அகராதியை (ISL) வெளியிட்டுள்ளது. அகராதியிலுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைகைகளின் அர்த்தத்தை எளிமையாகப் புரிந்துகொண்டு அவர்களுடன் உரையாடுவதற்கு அரசின் அகராதி உதவும் என்பதோடு இது மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியமான அங்கீகாரச் சாதனை கூடத்தான்.

அண்மையில் நிப்மேன் பவுண்டேஷனைச் சேர்ந்த நிபுன் மல்கோத்ரா, உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்து சைகைமொழியை 23வது அதிகாரபூர்வ மொழியாக மாற்ற உதவியுள்ளார். விரைவில் ப்ரெய்லியுடன் சைகைமொழியும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவிருப்பது இதன் உடனடி நன்மை. கடந்த மாதம் இந்தியாவிலுள்ள 20 கல்வி போர்டுகள் ஒருங்கிணைந்து இதற்கான வரைவை உருவாக்கியுள்ளன. சைகைமொழி பேசினாலும் குழந்தைகளுக்கு புத்திசாலித்தனத்தில் குறையொன்றும் இல்லை.

நொய்டா காதுகேளாதோர் சங்கத்தில் படித்த பலரும் கணினி, நிதி சார்ந்த படிப்புகளைப் படித்து தாஜ், ஆக்சிஸ் வங்கி என பல்வேறு நிறுவனங்களில் நல்ல பணியில் இணைந்துள்ளதே இதற்கு சாட்சி. “சைகைமொழித்திறன் சிறப்புக்குழந்தைகள் கற்க எளிதான ஒன்று. அவர்களை அம்மொழியைக் கற்கக்கூடாது என அவர்களின் பெற்றோர்களே தடுப்பது வேதனையான ஒன்று. சைகைமொழியைக் கற்றுக்கொண்டு அவர்களிடம் உரையாட முயற்சிக்காதது நமது தவறு; குழந்தைகளிடம் பிழையில்லை...” என்கிறார் காதுகேளாதோருக்காக இயங்கும் அமைப்பான சென்டம் ஜிஆர்ஓ நிறுவனரான ஆலிம் சந்தானி. விரல்களின் மொழி இனி அனைவருக்கும் புரியும்!        

- ச.அன்பரசு