ராட்சசன்



சிறு பெண்களை வேட்டையாடும் கொலையாளியைக் கண்டுபிடித்து பழி தீர்ப்பதே ‘ராட்சசன்’.இயக்குநராகும் விருப்பத்தில் இருக்கிறார்  விஷ்ணு விஷால். தன் முதல் த்ரில்லர் படத்திற்கான ஆராய்ச்சிக்காக சில முக்கிய கொலை வழக்குகளை ஆராய்ந்து தகவல்  சேகரிக்கிறார். கொலை செய்பவர்களின் மனநிலை, அவர்கள் செயல்படும் விதம், அவர்களின் மன வினோதம் எல்லாம் நாளடைவில்  அவருக்குப் புரிபடுகிறது. முதல் படம் செய்யும் முயற்சி தள்ளிக்கொண்டே போக, விஷ்ணுவிற்கு போலீஸ் வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. எஸ்.ஐ. தேர்வு எழுதி வெற்றி பெற, அவர் முதல் வழக்கே அவர் வைத்திருந்த சினிமாக்கதையோடு  பலவிதங்களில் சம்பந்தப்படுகிறது.

அவர் வைத்திருந்த தகவலின் வழி முன்னேறிப்போக, வழக்கின் அத்தனை முடிச்சுகளும் மெல்ல அவிழ்கின்றன. எப்படி கொலையாளியை  விஷ்ணு கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக் கதை.பரபரத்து நடக்கும் கொலைகள், துளித் துளியாகக் கிடைக்கும் துப்புகள், அதைப்  பிடித்துக்கொண்டே தேடல்கள் என ஒரிஜினல் அக்மார்க் த்ரில்லருக்கான எல்லா அம்சங்களும் சேர்ந்த வகையில் ‘திக் திடுக்’ திரைப்படம்  ஆக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்குமார்.யோசித்துப் புறப்பட்டு வேட்டையாடும் இளைஞனாக விஷ்ணு விஷால். முந்தைய  உடல்மொழியிலிருந்து வேண்டிய முன்னேற்றம். அங்கே இங்கே கொலைகள் நடந்து, தன் வீட்டிலேயே கொலைகாரன் புகுந்துவிட்டதை  அறிந்து கொதிக்கும்போது அடக்கி வாசிக்கிறார். இன்னும் இறுக்கம் அவரிடமிருந்து விடுபடலாம்.

பாந்தமாக, சாந்தமாக, தீர்க்கமாக, தெளிவான தேவதையாக வசீகரிக்கிறார் அமலா பால். ஆனாலும் அவருக்கு பெரிய வேலையே இல்லை.  ஆங்காங்கே விஷ்ணுவை ஈரப்பார்வை பார்ப்பதோடு சரி.கொலைகளைச் செய்யும் சைக்கோ யாரென்ற ஃபிளாஷ்பேக்கும், காரணமும்  அழுத்தமான முத்திரையில் விழுந்திருக்கிறது. சுவாரஸ்ய காதல் அத்தியாயம், திடும்மென நடைபெறும் கொலைகள் என ஒரு  நிமிடத்தையும் வீணாக்காத முன்பாதி திரைக்கதை, பின்பகுதியில் கொஞ்சமாய் தடுமாறுகிறது. முகம் தெரியாத அந்த சைக்கோவை  கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனத்தை இன்னும் பவர்ஃபுல்லாகக் காட்டியிருக்கலாம். அடுத்தது நடக்கப்போவது என்ன? யார் கொலைகாரன்?  என கணிக்க முடியாததே படத்தின் ஆதார பெரும்பலம்.

முனீஸ்காந்த் குணச்சித்திரத்தில் கவனம் பெறுகிறார். காளி வெங்கட் யதார்த்தம். கர்வம் நிறைந்த பெண் இன்ஸ்பெக்டராக சூசன் சாலப் பொருத்தம்.விஷ்ணு விஷால் தோள் மீதே பயணிக்கும் உணர்வைக் கடத்தியிருக்கிறது பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு. ஜிப்ரானின் பின்னணி  படபடப்பையும், திகில் டுவிஸ்ட்டையும் ஏற்றித் தருகிறது. செம பில்டப்போடு தொடங்கும் முன்பாதி காரணமாக, எதிர்பார்த்துக்  காத்திருந்தவர்கள் படத்தின் நீளத்தில் கவலை கொள்கிறார்கள். அதிலும் சைக்கோ கொலையாளியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை  அத்தனை தூரம் அடிக்கடி காட்டியிருக்க வேண்டுமா? சற்றே துணுக்குற நேர்கிறதே? எல்லாம் மீறி சுறுசுறுப்பான த்ரில்லர் பார்த்த நிறைவு.
    

-குங்குமம் விமர்சனக்குழு