இலையைத் தாக்கும் துரு நோய்!ஹோம் அக்ரி 27

 மன்னர் மன்னன்


ஒருசில ஈக்களும் இலைச்சாறு உறிஞ்சுவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த வகையான ஈக்கள் தங்கள் முட்டைகளை இலைகளின்  அடிப்பாகத்தில் இடுகின்றன. இந்த முட்டைகள் புழுக்களான பருவத்தில் இலைகளை உறிஞ்சியும் உண்டும் வாழ்கின்றன. பொதுவாக  எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய இந்தப் புழுக்களால் பெரும் சேதாரங்கள் ஏற்படுவதில்லை. ஆனால், கவனமாக இல்லாவிட்டால் இவை  செடிகளுக்கு பெரும் அழுத்தத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி விளைச்சலை பாதிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களில் 5 - 6  புழுக்கள் கூட இருக்கலாம். இவை உறிஞ்சும் பகுதிகளில் வளைவு நெளிவாக வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் கோடுகள் தெரியும்.தோட்டங்களில் இயற்கையாகக் காணப்படும் பெரும்பாலான வண்டுகள் இந்த லார்வாக்களை உண்கின்றன. வேப்ப எண்ணெய் கரைசலும்  இவைகளைக் கொல்வதோடு, ஈக்கள் முட்டை இடுவதையும் தடுக்கிறது. தோட்டங்களுக்கு வரும் சிறு பறவைகளும் லார்வாக்களை  உண்கின்றன.

இந்த ஈக்கள் மஞ்சள் நிறத்தால் கவரப்படுகின்றன. மஞ்சள் அட்டைகளாலும், மஞ்சள் நிற தொட்டிகளில் நீர் வைப்பதாலும் இவைகளை  எளிதில் கட்டுப்படுத்தலாம். இந்த இலைகளைத் தாக்கும் ‘மைனர்’ லார்வாக்களுக்கு பூச்சி மருந்து தேவையில்லை. இலையைத் தாக்கும்  இன்னொரு நோய் துரு (Rust) நோய். இரும்பில் ஏற்படும் துரு போன்று இது தோற்றம் அளிப்பதால் இந்தப் பெயர். இந்த நோய் ஒரு  பூஞ்சையால் ஏற்படுவது. காய்கறிச் செடிகளில் வரும் நோய்களில் 60%க்கும் மேலானவை பூஞ்சைகளால் வருபவைதான். பூஞ்சைகள்  மண்ணிலிருந்தும், களைகளிலிருந்தும், செடிகளின் அருகில் கிடக்கும் தாவரக் கழிவுகளிலிருந்தும் வருகின்றன. பூஞ்சைகள் வளரவும்,  பரவவும் தட்பவெப்ப சூழல் அதற்கு மிகவும் சாதகமாக இருக்க வேண்டும். காற்றில் நல்ல ஈரப்பதம், இலையில் ஈரம், மண்ணில் குறைந்த  வெப்பம், மிதமான வெப்ப நிலை போன்ற சூழலில் இவை உயிர் பெறுகின்றன.

இந்தச் சூழல் பூஞ்சைக்கு பூஞ்சை சிறிது மாறுபடும். சரியான சூழலில் 4 - 6 மணி நேரங்களிலேயே இந்தப் பூஞ்சைகள் தங்கள்  வாழ்க்கையைத் தொடங்கி விடுகின்றன. சரியான பருவத்தில் விதைப்பதும், நடுவதும் இந்தத் தாக்குதலைக் குறைக்கும். தோட்டத்தை  துப்புரவாக வைத்துக்கொள்ளுவதும், பூஞ்சைத் தொற்று இல்லாத விதைகளை உபயோகிப்பதும் அவசியம். விதைகளையும், நாற்றுகளையும்  நன்மை தரும் ‘ட்ரைக்கோடெர்மா’ என்ற பூஞ்சையில் நனைத்து உபயோகப்படுத்தும் போது மண்ணில் இருந்து வரும் தீங்கு தரும்  பூஞ்சைகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம். துரு நோய், நல்ல ஈரப்பதம், மழை, குறைந்த வெப்பம் ஆகியவை 4 - 6 மணி நேரங்கள்  இருந்தாலே பூஞ்சையின் தொற்றில் இருந்து உடனடியாக செயல்பட ஆரம்பிக்கிறது. ஆரம்பித்தபின், நல்ல வெப்பம் மற்றும் வெளிச்சம்  இருந்தால் வேகமாகப் பரவுகிறது.

துரு நோய் வேகமாகப் பரவினால் இலைகள் உதிர்ந்து விடுகின்றன. துரு தாக்கிய இலைகளை உடனடியாக அழித்து விடுவது நல்லது.  தழைச்சத்து மற்றும் மெதுவாகக் கிடைக்கக்கூடிய இயற்கை உரங்களை உபயோகப்படுத்தும்போது இவைகள் கட்டுப்படுத்தப்படும்.  உடனடியாக செடிகளுக்கு தழைச்சத்தை தரும் இலைவழி மற்றும் மண்வழி யூரியா, DAP அளவுக்கு அதிகமாக இல்லாமலும்; களைகள்  இல்லாமல் நல்ல காற்றோட்டம் இருக்குமாறும் பார்த்துக்கொள்வது பலன் தரும். இந்த துரு நோயை இயற்கை முறைகளில்  முடியாவிட்டால்,  தாமிர உப்புகள் (காப்பர் ஆக்ஸி குளோரைடு, காப்பர் ஹைட் ராக்ஸைடு) மற்றும் கரையும் கந்தகத்தையும் கொண்டு  கட்டுப்படுத்தலாம். இந்த இரண்டு முறைகளும் அனுமதிக்கப்பட்ட இயற்கை விவசாய முறைகளே. மேலும் செடியின் வேர்கள் அருகில்  மூடாக்கு இடுவதன் மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

(வளரும்)

Q&AQ&AQ&AQ&A

வாதா மடக்கி என்று ஒரு மரத்தின் இலைகளை மூட்டு வலிக்கு அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். இது குறித்து எதுவும்  தகவல் தர முடியுமா?
- முரளி மேனன், டல்லாஸ், அமெரிக்கா.

வாதா மடக்கி அல்ல, வாத மடக்கி. அதாவது இது வாதத்தை மடக்கக்கூடியது என்று பொருள். வாதநாராயணன் என்றும் சொல்வார்கள். இலையை சூடு செய்து மூட்டுக்கு ஒத்தடம் கொடுப்பார்கள். விளக்கெண்ணெயில் காய்ச்சி தைலமாகவும் உபயோகப்படுத்தலாம். இன்று  மிகப்பரவலாகக் காணப்படும் மூட்டுத்தேய்வு பிரச்னைகளுக்கு மிகவும் பலமான கைவைத்தியம் இது. இந்த இலையில் சட்னி, ரசம்,  அடைமற்றும் சூப்பும் செய்து சாப்பிடலாம்.


கரும்புப்பயிர் தண்ணீர் தேவையுள்ளது. அதனால் அதைத்தவிர்த்து மற்ற சர்க்கரை உள்ள பயிர்களை வளர்க்க முயற்சிக்க வேண்டும் என்ற  கருத்து உள்ளதே?
- தாமரைக்கனி, திருச்சி.

ஆம். கரும்புப்பயிர் மிகவும் அதிகமான நீர்த்தேவையுள்ளது. ஒரு கிலோ கரும்புக்கு 150 - 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. 100  கிலோ கரும்புக்கு 7 - 10 கிலோ சர்க்கரை கிடைக்கும். ஆக, 10 கிலோ சர்க்கரைக்கு நாம் 15,000 - 20,000 லிட்டர் தண்ணீர் செலவு  செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு மாற்றாக நாம் பனைவெல்லம், தென்னை வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதிமதுரம்,  சீனித்துளசி, இலுப்பைப்பூ போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.

அரிசி இதைக்காட்டிலும் அதிகமான தண்ணீர் தேவை கொண்டது. ஒரு கிலோ அரிசிக்கு நாம் 1500 - 2000 லிட்டர் வரை நீர் செலவழிக்க  வேண்டியிருக்கிறது. சிறுதானியங்கள் மழைநீரை மட்டும் வைத்து வளர்கின்றன. இறைச்சலில் வளர்த்தாலும் ஓரிரண்டு பாய்ச்சலிலேயே  வளர்த்து விடலாம். அரிசியைவிட ஊட்டம் நிறைந்தவையாக இவை இருக்கின்றன.பருத்தி இதைக்காட்டிலும் நீர் குடிக்கக்கூடியது. ஒரு  கிலோ பஞ்சுக்கு 22,500 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. ஆக நாம் நீர் சேமிக்க விரும்பினால், ஒரு நுகர்வோராக ஒருசில உணவுப்
பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இது துணி துவைக்கும் பழக்கத்தை மாற்றிக்கொள்வதைக் காட்டிலும் எளிதானது.  ஆரோக்கியமானதும் கூட.

நம் மஞ்சணத்தி வகையைச் சேர்ந்ததுதான் நோனி என்று சொல்லியிருந்தீர்கள். நோனியைப்போல நம் நுணா காய்களும், பழங்களும்  மருத்துவத்தில் பயன்படுமா?
- திருஞானம், தேவதானப்பட்டி.

நிச்சயமாக. நோனிக்கு இணையானதாக இது இருக்காது. நுணா காய்களும் பழங்களும் வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும்.  எல்லாவிதமான தோல் வியாதிகளுக்கும் உள்ளேயும், வெளியேயும் பயன்படுத்தலாம். மாதவிலக்கைத் தூண்டுவதில் நிகரற்றது.