‘‘கனவுக்கும், ஆசைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அடுத்த படம் நான் ரஜினி சார் கூட நடிக்கணும்னு நினைச்சா அது கனவு. ஆனா கௌதம் மேனன் படத்தில நடிக்கணும்னு நினைச்சா, அது ஆசை. அதனால கனவு கண்டு வானத்தில மிதக்காம, ஆசைப்படறதை அடைய நிலத்தில முதலடி எடுத்து வைக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்...’’ என்று ஆரம்பமே வேதாந்தமாக புல்லரிக்க வைப்பது ரம்யா நம்பீசன்.
‘‘ஏதும் ஆசிரமம் பக்கம் போய் வந்தீங்களா... தத்துவம் வழியுதே..?’’ என்றால், ‘‘இயல்பான விஷயத்துக்கெல்லாம் ஏன் பில்டப் கொடுக்கறீங்க..? இது எல்லாருக்கும் தெரிஞ்ச யதார்த்தம்தான். ‘ராமன் தேடிய சீதை’யைத் தொடர்ந்து ‘ஆட்ட நாயகன்’ வாய்ப்பு வந்தது. பிறகு ‘இளைஞன்’. இப்ப ‘குள்ளநரிக் கூட்டம்’ ரிலீசாகி நல்ல பெயரைத் தந்திருக்கு. அடுத்து ‘முறியடி’ ரிலீசாகணும். இந்த அடிப்படையில வளர்ச்சின்னு பார்த்தா ‘குள்ளநரிக் கூட்டம்’ படத்திலதான் எனக்கு முழுமையா நடிக்க வாய்ப்பு கிடைச்சதா நினைக்கிறேன். இன்னும் நிறைய நடிக்கணும். கௌதம் மேனன் சார் படம் போல ஒரு படம் அமைஞ்சா அடுத்த கட்டத்துக்குப் போகலாம். அதுக்கு என்ன பண்ணணும்ங்கிறதை விட்டுட்டு ‘ராணா’ல ஹீரோயினாக என்ன வழின்னு யோசிச்சா, நீங்களே கிண்டல் பண்ண மாட்டீங்களா..?’’ என்று வயதுக்கு மீறிக் கேட்கும் ரம்யாவைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
முந்தைய படங்களிலிருந்து நடிப்பில் வலுத்தாலும், உடலளவில் இளைத்திருப்பவர் இன்னும் இளைக்க ‘ஜிம்’மில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ‘‘மனசும் இளமையா இருக்க யோகா கிளாஸ். எல்லாமே ஆரோக்கியமா இருக்கு. ஆனா டயட்டுக்காக கேரளா ரைஸையும், சிக்கன் ஃபிரையையும் மிஸ் பண்றதுதான் வருத்தமா இருக்கு...’’ என்றவரைப் பார்க்க பாவமாக இருந்தது.
கன்னடத்தில் அஜய் ராவுடன் அடுத்த படத்துக்கு டேட்ஸ் கொடுத்திருப்பவர், மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘‘ஒரு படம் ‘சங்கராபரணம்’ போல அமையணும். கால்ல சலங்கை கட்டி தரை தேய ஆடி அசத்தணும்...’’ என்று ரம்யா சொல்லும்போது ஆடிய கால் சும்மா இருக்காது என்பது புரிந்தது. ‘ரம்யா நம்பீசன் டான்ஸ் ட்ரூப்’ என்று வைத்துக்கொண்டு நாடுகளைக் கடந்து நடன நிகழ்ச்சிகளும் நடத்திக்கொண்டிருக்கிறது இந்த நடன மயில்.
‘‘சின்ன வயசிலேர்ந்தே கத்துக்கிட்ட பரதம் இப்ப டிகிரியாவும் தொடருது...’’ என்றவருக்குப் பாட்டும் பயிற்சியாயிருக்கிறது. ‘‘எங்க சித்தி நல்லாப் பாடுவாங்க. நானும் கிளாசிக்கல் கத்துக்கிட்டதில, எனக்கும் பாட வரும்...’’ என்றார் குரலைச் செருமியபடி.
‘‘பக்தி ஆல்பங்களும் பாடியிருக்கேன். அதைக் கேட்ட மலையாள முன்னணி மியூசிக் டைரக்டர் ஷரத், ‘இவன் மேக ரூபன்’ங்கிற படத்தில பத்மப்ரியாவுக்காக ஒரு பாட்டு பாட வாய்ப்பு தந்திருக்கார். இப்ப நான் பிளேபேக் சிங்கரும் கூட...’’ என்கிறார் ரம்யா மனம் நிறைய சந்தோஷத்துடன்.
ஆடிய கால்களுடன் பாடிய வாயும் சேர்ந்து கொண்டதா... இனி அதகள கச்சேரி ஆரம்பம்தான்..!