+2க்குப் பிறகு என்ன படிக்கலாம் ? நிபுணர்கள் தரும் சாய்ஸ்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


ரிசல்ட் வந்தாச்சு... பிளஸ் 2 க்கு அடுத்து என்ன என்ற கேள்வி மாணவர்களோடு பெற்றோரையும் வதைக்கிறது. புதிது புதிதாக துறைகளும் கல்வி நிறுவனங்களும் உருவாகிவரும் நிலையில், எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பெரிய குழப்பம். இதிலிருந்து மீண்டு, எதிர்காலத்தை வளப்படுத்தும் படிப்பை தேர்வு செய்வது எப்படி என்று வழிகாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்!

‘‘இந்தப் படிப்புக்குத்தான் வேலை கிடைக்கும் என்று கணித்தோ, அடுத்த வீட்டுப்பையன் இந்த பாடத்தைத்தான் படிக்கிறான் என்று ஒப்பிட்டோ தேர்வு செய்யக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்திறமை, ஆர்வம் உண்டு. அதை உணர்ந்து அதுசார்ந்த படிப்பையே தேர்வுசெய்ய வேண்டும். இதில் மாணவர்களை விட பெற்றோருக்கே பொறுப்பு அதிகம். தங்கள் முடிவை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது’’ என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ.

‘‘டாக்டர், எஞ்சினியர்... இப்போது ஐ.ஏ.எஸ். இதுதான் பெரும்பாலான பெற்றோரின் கனவாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஏரோநாட்டிகல், மரைன் படிப்புகளில் ஆர்வம் காட்டுகிறார்கள். புதிதாக படிப்புகள் அறிமுகமாகும்போது, கல்வி நிலையங்களில் அந்தப் படிப்புக்குத் தகுந்த அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதையும், அதைப் படித்தால் நிச்சயமான வேலைவாய்ப்புகள் உண்டா என்பதையும் பார்க்க வேண்டும்.

பொறியியலில் வருடாவருடம் புதுப்புதுப் படிப்புகள் அறிமுகமாகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகமான காலத்தில் மாணவர்கள் அதையே விரும்பினார்கள். இடையில் சாஃப்ட்வேர் துறையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் கடந்த சில வருடங்களாக அந்த மோகம் குறைந்திருக்கிறது. உண்மையில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ படிப்புக்கு நிரந்தரமான எதிர்காலம் உண்டு. எல்லா தொழில்களுமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டது. சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனங்கள், பி.பி.ஓ, கே.பி.ஓ நிறுவனங்கள் புதிது புதிதாக முளைக்கின்றன. உலகளாவிய வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. எனவே தைரியமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்.

இதேபோல எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பு மீதும் மோகம் குறைந்துவிட்டது. இப் படிப்பை முடித்தவர்களுக்கு எப்போதும் தேவையிருக்கிறது. படிப்பை முடித்ததுமே வேலை கிடைக்க வாய்ப்புள்ள துறை இது. 

கடந்த பத்து வருடங்களாகவே சிவில், எலெக்ட்ரிகல் பாடங்கள் மீது மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நாளுக்கு நாள் கட்டுமானங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிற சூழலில், சிவில், எலெக்ட்ரிகல் எஞ்சினியர்களுக்கான தேவை மிக அதிகம். சிவிலில் பி.இ. முடித்து எம்.இ. படித்தால் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. டீச்சிங் துறைகளிலும் ஏராளமான காலியிடங்கள்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை&க்கு உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளில் ‘பி.எஸ்’ என்ற நான்கு வருடப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இது பி.இ&க்கு இணையானது. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோ சயின்ஸ், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், மின்னணுவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளைக் கொண்ட இப்படிப்பை முடித்துவிட்டு எம்.எஸ், எம்,டெக், எம்.இ. படிக்கலாம். நல்ல எதிர்காலம் உண்டு. பொறியியல் படிப்புக்கான செலவில் வெறும் 20 சதவீதத்திலேயே இப்படிப்பை முடித்து விடலாம்.

பயோபிராசஸிங், ஃபுட் பிராசஸிங் படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் தொடர்பான எந்தப் படிப்பையும் தைரியமாக தேர்வு செய்யலாம். ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஜெனிடிக் எஞ்சினியரிங் படிப்பும் முக்கியமானது. உலகளாவிய வாய்ப்புகள் உண்டு. ஆனால், ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே இப்படிப்பை தேர்வு செய்யவேண்டும்.

மரைன், ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. பல கல்வி நிறுவனங்களில் இப் படிப்புகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் பிரச்னை. தியரிட்டிக்கலாக போதிக்கப்படுவதால் படித்தாலும் உடனடியாக வேலை கிடைப்பதில்லை. திறமையான, முழுமையான தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு மட்டுமே அத்துறைகளில் இடம் கிடைக்கும். எனவே படிப்பை தேர்வு செய்யும் அளவுக்கு கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்வதிலும் கவனம் அவசியம்’’ என்று முடிக்கிறார்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார் கல்வியாளர் மணீஸ் நாரங். கல்வி ஆலோசகராகப் பணி புரியும் நாரங், ‘‘பிரான்ஸ். பிரேசில், இந்தோனேஷியா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்திய கேட்டரிங் பட்டதாரிகளை நல்ல சம்பளம் கொடுத்து சேர்த்துக்கொள்கின்றன. ஆனால், நல்ல கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்வது மிக முக்கியம்’’ என்கிறார். ‘‘விஸ்காம், ஃபேஷன் டிசைனிங் துறைகளில் ஆண்டுக்கு ஆண்டு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. தொடக்கத்திலேயே 25 ஆயிரங்களில் சம்பளம் வாங்க முடியும்’’ என்கிறார்.

அண்ணா பல்கலையில் வழங்கப்படும் ‘எம்.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் மீடியா’ படிப்பையும் மிகச்சிறந்ததாகக் குறிப்பிடுகிறார் நாரங். பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் நேரடியாக சேரலாம். இப்படிப்பை முடித்தால் விளம்பரம், இதழியல், பப்ளிக் ரிலேஷன், காப்பி ரைட்டிங், ரேடியோ, தொலைக்காட்சி, சினிமா, அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் இணையலாம். உடனடியாக வேலை நிச்சயம்’’ என்கிறார் நாரங். ‘‘நன்றாகப் பேசும் திறமையுள்ளவர்கள் தேசிய சட்டப்பள்ளிகளில், ஒருங்கிணைந்த 5 வருட பி.ஏ., எல்.எல்.பி சட்டப் படிப்பைத் தேர்வுசெய்யலாம். பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தா, ராய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இப்பள்ளிகள் இயங்குகின்றன. இதை முடித்தால் தேசிய அளவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

அறிவியலில் ஆர்வம் உள்ளவர்கள் இஸ்ரோ நிறுவனம் வழங்கும் ஒருங்கிணைந்த 5 வருட ‘ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்’ படிப்பில் சேரலாம். இதற்கும் நுழைவுத்தேர்வு உண்டு. சென்னை ஐ.ஐ.டி&யில் 5 வருட ‘எம்.எஸ்சி. ஹியூமானிட்டீஸ்’ படிப்பு உள்ளது. எந்தப் பிரிவினரும் படிக்கலாம். 30 சீட்தான். இதை முடித்தால் வெளியுறவுத்துறை, தேசிய நிர்வாகத்துறைகளில் பணிக்குச் செல்லலாம். பயாலஜி, பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி, பயோகெமிக்கல் படிப்புகளுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு’’ என்கிறார் நாரங்.

‘‘அறிவியலும் கம்ப்யூட்டரும் படித்தால்தான் நல்ல வேலை என்ற காலம் மலையேறிவிட்டது. இப்போது ஆர்ட்ஸ் குரூப் படித்த மாணவர்களை பல ஆயிரங்கள் சம்பளம் கொடுத்து கொத்திக்கொண்டு போக ஏகப்பட்ட நிறுவனங்கள் காத்திருக்கின்றன. பிளஸ் 2 முடித்த பிறகு 3&4 வருடங்கள் படிக்கமுடியாத சூழலில் இருக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு மிகுந்த ஏராளமான குறுகியகால படிப்புகள் இருக்கின்றன’’ என்கிறார் கல்வியாளர் வசந்தி ரெங்கநாதன்.
அதை அடுத்த வாரம் பார்ப்போம்...
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்