‘‘உங்கள் தாய்மொழி எது..?’’ என்று கேட்கலாம். ‘‘உங்கள் தந்தை மொழி எது..?’’ என்று கேட்க முடியுமா? ப்ரியா ஆனந்திடம் கேட்கலாம். அவருக்குத் தாயின் மொழி தமிழ். தந்தையின் மொழி தெலுங்கு. எனவே தாய்ப்பால் தந்த தமிழும், ரத்தத்தில் ஊறிய தெலுங்கும் சரளமாக வருகின்றன ப்ரியாவுக்கு. சொல்லி வைத்தாற்போல் தமிழில் ‘புகைப்படம்’, ‘வாமனன்’ என்றும் தெலுங்கில் ‘லீடர்’, ‘ராம ராம கிருஷ்ண கிருஷ்ண’ என்றும் இரண்டு படங்களில் நடித்து முடித்தவர், இப்போது ‘180’ என்று தமிழிலும், தெலுங்கிலும் தயாராகியிருக்கும் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
‘‘இருந்தாலும் உங்களுக்குத் தமிழ் பிடிக்குமா, தெலுங்கு பிடிக்குமான்னு கேட்டுடாதீங்க. ‘அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா..?’ங்கிற மாதிரி அபத்தமா தோணுது அந்தக் கேள்வி...’’ என்கிற ப்ரியா, சென்னை டூ ஹைதராபாத், ஹைதராபாத் டூ யு.எஸ்., யு.எஸ் டூ சென்னை... என்று விமான சர்வீஸ் போல பறந்து பறந்து வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அம்மாவுக்கு சென்னை, அப்பாவுக்கு ஹைதராபாத் என்றிருக்க, இருவரும் வேலை விஷயமாக அமெரிக்கா பறக்க, அங்கே கம்யூனிகேஷன்ஸ் டிகிரி முடித்த பொண்ணு மீண்டும் ‘வாழ’ வந்திருக்கிறது சென்னைக்கு.
‘‘இன்னது பண்ணணும் னெல்லாம் எனக்குத் திட்டமில்லை. இருந்தாலும் சினிமாவில ஏதாவது பண்ணணும்னு இருந்தேன். முதல்ல ஷங்கர்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டராக ஆசை இருந்தது. அவர்கிட்ட வேலை செய்தா சினிமாவைக் கத்துக்கலாம்னு இருந்தேன். ஆனா சென்னை வந்ததும் கிடைச்ச மாடலிங் வாய்ப்பு, சினிமாவிலயும் நடிகையா ஆக்கிடுச்சு...’’ என்று சிரிக்கும் ப்ரியாவைப் பார்த்தால் எங்கேயோ சந்தித்த அனுபவம் நிழலாடுகிறது. அப்படியொரு ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ ஸ்நேகம்.
தமிழில் வெளியான இரண்டு படங்களும் சொல்லிக்கொள்கிற வெற்றிப்படங்களாக இல்லாது போனாலும் ப்ரியாவை கவனிக்க வைத்தன. ஆனால் தெலுங்கில் நடித்த இரண்டு படங்களுமே வசூலில் பின்ன, அடுத்து ‘180’ஐ தெலுங்கில் ஹேட்ரிக்காகவும், தமிழில் முதல் வெற்றிப்படமாகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ப்ரியா. காரணம், படத்தின் இயக்குநர் ஜெயேந்திரா.
‘‘விளம்பரத்துறையில எத்தனை சாதனை புரிஞ்ச மனிதர் ஜெயேந்திரா. அவரோட ஞானம் இந்தியாவுக்கே பெருமை சேர்க்கிறது.
அவர் படத்தில நான் நடிக்கிறேன்னு சொன்னதும் எல்லார்கிட்டேர்ந்தும் வந்த பதில், ‘நீ அதிர்ஷ்டக்காரி...’ங்கிறதுதான். படம் செய்தா இந்தக்கதையைத்தான் செய்யணும்னு அவர் போற்றி வச்சிருந்த கதை இது. இதில ரெண்டு ஹீரோயின்னாலும், ஒரு ஹீரோவுக்கு நிகரா எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கார். இதில எனக்கு என்னைப்போலவே ஒரு என்.ஆர்.ஐ கேரக்டர். நம்ம நாட்டுக் கலாசாரத்தை மறந்து மேலை நாட்டு மோகத்தில இருக்கிறவங்க என்.ஆர்.ஐகள்ங்கற தவறான எண்ணத்தை உடைக்கிற கேரக்டர். உண்மையும் அதுதான்.
இன்னொரு ஹீரோயின் நித்யா மேனனுக்கும் மலையாள இண்டஸ்ட்ரில நல்ல அனுபவம் இருக்கு. அழகான முகத்துக்கு நித்யாவோட முகம்தான் உதாரணம்...’’ என்று சக ஹீரோயினையும் பெரிய மனத்துடன் புகழும் ப்ரியா கேட்காமலேயே முக்கிய விஷயத்துக்கு வந்தார்.
‘‘படத்தில ஹீரோ சித்தார்த். வாவ்... தெலுங்கில சித்தார்த்துக்கு இளம்பெண்கள் வட்டாரத்தில அப்படியொரு கிரேஸ் இருக்கு. தமிழ்லயும், தெலுங்கிலயுமா நான் அவரோட ஜோடியானதுக்கும் டைரக்டருக்குதான் நன்றி சொல்லணும். சித்தார்த் ஒரு ஹீரோ மட்டுமில்லை. மணிரத்னத்தோட அசிஸ்டன்ட்டாவும் இருந்திருக்கிறதால, அவருக்குத் தெரியாத விஷயங்கள் எதுவுமே இல்லையோன்னு தோணுது. அவர்கூட நடிக்கிறது தெரிஞ்சதும் நான் நடிகையா இருக்கிறதைப் பற்றி அக்கறையில்லாம இருந்த ஃபிரண்ட்ஸ் கூட, ‘எப்படிப் போகுது படம்..? எங்கே இன்னைக்கு ஷூட்..?’ன்னெல்லாம் கேட்டாங்க. அதெல்லாமே சித்தார்த்தை மீட் பண்ண வழிஞ்சதுன்னு எனக்குத் தெரியாதா என்ன? ஆனா நல்லவேளை என்னோட ஷூட்டெல்லாம் யு.எஸ்லயும், மலேசியாவிலயும்தான் நடந்தது...’’ தோளைக் குலுக்குகிறார் ப்ரியா.
டியர் யங் லேடீஸ்... உங்க எதிரி வெளியில எங்கேயும் இல்லை..!
வேணுஜி