கண்கள் வெளியில் பிதுங்கி நிற்கும் முகம்.
தொப்புள் வரை தொங்கும் நாக்கு.
சிதைந்து கிழிந்த தோல்.
புருவத்திற்கு மேலே புதிதாய் ஒரு கண்.
காது, மூக்கு இல்லாத பிறப்பு.
கழுத்து மட்டும் உள்ளிறங்கிவிட்ட உடல்.
பேய்க்கதைகளில்கூட இப்படி படித்திருக்க முடியாது. ஆனால் இது கதையல்ல; நிஜம். அழகும் ஆரோக்கியமான உடலும் தோலும் கொண்ட கேரள மக்களில்- காசர்கோடு மாவட்டத்தில்தான் இந்த அவலட்சண மனிதர்கள். அங்கு மட்டுமல்ல; அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தெற்குப் பகுதியிலும் இது உண்டு.
முந்திரி, தேயிலைத் தோட்டங்களைப் பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற கன்னாபின்னாவென்று பயன்படுத்தப்பட்ட ‘எண்டோசல்பான்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்துதான் இப்படி மனிதக்கொல்லியாக மாறியது. எண்டோசல்பான் கடுமையான விஷமென்று தெளிந்து, எழுபது நாடுகள் தடைசெய்துவிட்டன. இந்தியா தெரிந்தும் பயன்படுத்தியது.
பன்னாட்டு உர நிறுவனங்களோடு பண உறவாடும் முதலாளிகளும் அரசியல்வாதிகளுமான இந்தியாவின் ராஜதந்திரிகள்தான் இந்தப் பாவத்தை விதைத்திருக்கிறார்கள். பாவத்தின் சம்பளம் மரணம். இந்தத் தியாகிகள், அந்தச் சம்பளத்தையும் மக்களுக்கே பிரித்துக் கொடுத்துவிட்டார்கள்.
மரபணுவைச் சிதைத்து, மன நிலையைக் குலைத்து, தற்கொலை உணர்வைத் திணித்து, மனிதர்களை விலங்குகளாக்கி ராஜவேட்டையாடிய எண்டோசல்பான், கேரளாவின் தேர்தல் களத்தில் இன்று அரசியலாக்கப்பட்டு ஓட்டுவேட்டையும் ஆடியிருக்கிறது. முப்பதாண்டுக்கும் மேலான பயன்பாட்டுக்குப் பிறகு வேறுவழியின்றி எண்டோசல்பானை இந்தியா தடைசெய்திருக்கிறது. பதிலியாக வேறொரு பூச்சிக்கொல்லி ஆலோசனையும் நடக்கிறது. இது ‘கத்தி போயி வாளு’ வந்த கதையாகி விடக்கூடாது. ஏற்கனவே இங்கு நூற்றுக்கணக்கான பூச்சிக்கொல்லிகள் உண்டு.
எந்தப் பூச்சிக்கொல்லியும் பூச்சிகளைக் கொல்வதில்லை. மாறாக, பூச்சிகளை உட்கொள்ளும் பறவைகளைக் கொன்று, அதன் தொடர்ச்சியாக மண்ணை, மனிதர்களை, இயற்கையைத்தான் அது சீரழிக்கிறது. ரேச்சல் கார்சன் என்கிற அமெரிக்கப் பெண் விஞ்ஞானி எழுதிய ‘மௌன வசந்தம்’ (ஷிவீறீமீஸீt ஷிஜீக்ஷீவீஸீரீ) என்ற புத்தகம்தான் இதை முதன்முதலில் (1962) அம்பலப்படுத்தியது.
அமெரிக்காவின் வசந்தத்தை ராபின் பறவைகள்தான் முதன் முதலில் இசை கூட்டி வரவேற்கும். அன்றைய செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் அவை சிறகடிக்கும். இன்று இவை இல்லை. ராபின்கள் எல்ம் மரங்களோடு உறவாடுபவை. அந்நாளில் அம்மரங்களுக்கு ஏற்பட்ட நோய் தீர, பூச்சிக்கொல்லி மருந்து தூவப்பட்டது. ரசாயனம் இலைகளை நஞ்சாக்கியது. மக்கி உதிரும் இலைகளைப் பிரியமாய் உண்ணும் மண்புழுக்கள் மடிந்தன. மண்புழுக்களை உட்கொள்ளும் ராபின்கள் இறந்தன. வசந்தம் மௌனமாகிவிட்டது. இதைச் சொன்னதற்காக அந்த விஞ்ஞானப் பெண்ணை பெருமுதலாளிகள் மிரட்டினார்கள்; பைத்தியம் என்று சொல்லெறிந்தார்கள். ஆனால் அவரது புத்தகம் பூமியைப் புரட்டிப் போட்டது.
இந்திய வேளாண்மையில் டிராக்டரை அறிமுகப்படுத்தலாமா என 1930களில் விவாதிக்கப்பட்டது. ‘டிராக்டர் நல்லாத்தான் உழும். ஆழமாகக்கூட உழும். ஆனால் சாணி போடாதே’ என்றார் ஜே.சி.குமரப்பா. இவர் காந்தியின் பொருளாதார ஆலோசகர்.
இன்று இந்தியா ஒரு விவசாய நாடு என்று அடித்துச்சொல்ல முடியாது. பூவா தலையா போட்டுப் பார்க்கலாம். தலை விழுந்தால் அது விவசாயியின் தலையாக இருக்கும். பூ விழுந்தால் அது அவனது மனைவியின் கூந்தலில் இருந்து விழுந்த பூவாகத்தான் இருக்கும். நமது மண்வளம், நீர்வளம் இவற்றோடு உழவனின் மனவளத்தையும் பசுமைப்புரட்சி காயடித்துவிட்டது. எல்லாம் எந்திர மயம். எல்லாம் சந்தை மயம். நமது மரபுப்பயிர்களின் இடத்தில் பணப் பயிர்கள்.
இங்கே பல்வேறு வானிலையில், இடத்துக்கேற்ற வகையில் விளையும் ஆயிரக்கணக்கான அரிசிகள் இருந்தி ருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்த அரிசிகளுக்கெல்லாம் வாய்க்கரிசி போட்டுவிட்டன. இன்று ஐந்தாறு வகை அரிசிகள் மட்டுமே தமிழகத்தில் விளைகின்றன.
மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான சர்க்கரை, காபி, தேனீர், புகையிலை, பருத்தி, பூங்கொத்து மலர்கள் இவற்றின் விளைநிலமாக நமது நிலம் நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்டது.
வீடு கட்டும் கொத்தனார்கள், வெள்ளையடிப்பவர்கள், திருப்பூரில் பனியன் தைப்பவர்கள், சாயப்பட்டறைக்காரர்கள், பிரபல ஜவுளிக்கடைகளின் விற்பனையாளர்கள் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
வறுமைக்குப் பயந்து இன்றைய விவசாயிகள் தங்களைத் தாங்களே அறுவடை செய்துகொள்கிறார்கள். மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, சத்தீஷ்கர், கர்நாடகத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் எகிறுகிறது.
மாடுகளை விற்று கலப்பைகளை வாங்கினார்கள். கலப்பைகளை விற்று விதைநெல்லை வாங்கி னார்கள். விதைநெல்லை விற்று விஷத்தை வாங்கினார்கள். சாவதற்கும்கூட அவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைத்தான் வாங்க வேண்டியிருக்கிறது.
எண்டோசல்பானால் பயனடைந்தவர்கள் உச்சத்தில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் இருக்கிறார்கள்? இந்தக் கேள்விதான் நமது சிந்தனையை, பகுத்தறிவைக் கொன்று கொண்டிருக்கிறது.
சீனாவில் அதிகம் வயதானவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில்தான் இளைஞர்கள் இருக்கிறார்கள். நமது நீர், நிலம், காற்று மூன்றும் விஷமான சுற்றுப்புறச்சூழலில் எத்தனை இளைஞர்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்?
‘எனது தேசத்தில் செய்தித்தாள்கள் ஊமையாகப் பிறக்கின்றனவானொலிகள் செவிடாகதொலைக்காட்சிகள் குருடாகஆரோக்கியமாகவும் சுதந்திரமாகவும்இவை பிறக்கவேண்டுமெனஎன் தேசத்தில் விரும்புகிறவர்கள்ஊமையாக்கி அதைக் கொல்கிறார்கள்செவிடாக்கி அதைக் கொல்கிறார்கள்குருடாக்கி அதைக் கொல்கிறார்கள்இதுதான் எங்கள் நாட்டில் நடக்கிறது’ ஸெர்கே பேகஸ்
ஈராக்கிய குர்தீஷ் பெண் கவி
தமிழில்: யமுனா ராஜேந்திரன்
வன்முறையின் காதலர்கள்அமெரிக்காவின் தேசிய சின்னம் கழுகு. அதற்காக உலக வரைபடத்தில் உள்ள நாடுகளை எல்லாம் அது மாமிசத் துண்டுகளாகப் பார்க்கக்கூடாது. வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, பாகிஸ்தான் என்று நினைக்கிற இடங்களில் எல்லாம் அது மூக்கை நுழைக்கிறது.
தன் ஆதரவு நாடுகளை தனது ஜீன்ஸ் பாக்கெட்டில் சிகரெட் பெட்டியைப் போல வைத்துக்கொண்டு, ஆயுதப் புகையை ஆகாயமெங்கும் ஹாயாக ஊதித்தள்ளுகிறது. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவால் பற்றவைக்கப்பட்ட சிகரெட்தான் ஒசாமா பின்லேடன். சிகரெட் தனக்கெதிரான கொள்ளிக்கட்டையாக மாறியபோது போட்டுத்தள்ள முடிவெடுத்தது.
பின்லேடனை கொன்ற அமெரிக்க ராணுவம் அவனது உடலைக் கடலில் எறிந்திருக்கிறது. அவனது உடலைத் தின்னும் மீன்கள் திமிங்கலங்களாக உருமாறி அமெரிக்கக் கடற்கரையை ஆக்கிரமிக்க வந்தாலும் வரலாம். கத்ரீனா, ரீட்டா, வில்மா போன்ற சூறாவளிகள் மட்டும் இல்லையென்றால் அமெரிக்கா, கடல் நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்து அவனைக் கண்டுபிடித்துவிடும்.
பயங்கரவாதத்தால் பின்லேடன் பலி வாங்கிய உயிர்கள் அதிகம்தான். ஆனால், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்கிற பெயரில் அமெரிக்கா பலிவாங்கிய அப்பாவி உயிர்கள் அதைவிட அதிகம். பின்லேடனின் உடலைக் கடலில் வீசுவது சரியென்றால் அமெரிக்க ஜனாதி பதிகளின் உடல்களை?
கோபுரம் போல ஓர் உறவுதஞ்சை கோபுரத்தின் நிழல் மண்ணில் விழாது என்பார்கள்.
‘தன் நிழலைத்தானே சுமக்கும்தஞ்சை கோபுரம்போலஉன்னை நான் சுமப்பேன்’ என்று காதல் கவிஞன் தபூசங்கரும் அந்த நிழலை விழுந்து விடாமல் தாங்கிக் கொண்டிருந்தான்.
கணபதி ஸ்தபதியை திலகவதி ஒரு பேட்டி எடுத்திருந்தார். அதில்தான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது.‘‘தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் பிரமாண்டமான விமானக் கட்டுமானப் பணியின்போது, அதனைப் பார்வையிட்ட பலர் விமானம் விழுந்துவிடுமோ என அச்சப்பட்டதாகக் கூறுவதுண்டு. அப்போது அதை நிர்மாணித்த குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் பெருமையாக, ‘விமானத்தின் நிழல்கூட விழாது’ என்று கூறுவாராம். அந்தப் பேச்சு காலப்போக்கில் இப்படி வடிவம் கொண்டிருக்க வேண்டும்’’ என்கிறார் ஸ்தபதி.
சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர், தஞ்சை பல்கலைக்கழகம், பூம்புகார் கலைக்கூடம், மதுரை தமிழ்த்தாய் சிலை & கணபதி ஸ்தபதி கல்லில் இட்ட கையெழுத்துகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்! எனக்கு அவரிடத்தில் ஒரு தனிப்பட்ட பெருமை உண்டு. என் அப்பாவின் நண்பரான அவர், என்னைத் தத்துக் கேட்டார். அம்மா தரவில்லை. ஆனால், எனது திருமணம் அவரது தலைமையில்தான் நிகழ்ந்தது. அவரை நினைவாலேயே நான் ஒரு சிலை செய்து வைத்திருக்கிறேன்.
(சலசலக்கும்...)
பழநிபாரதி