ஆகஸ்ட் 20 அன்று இன்ஃபோசிஸ் நிறுவனர் சேர்மன் நாராயணமூர்த்திக்கு 66&வது வயது தொடங்குகிறது. கம்பெனி நெறிமுறைகளின்படி அவர் அன்று பதவி விலக வேண்டும். அவருக்குப்பின் நிறுவனத்தை வழிநடத்தப்போவது யார்?
பல வாரங்களாகவே பிசினஸ் உலகத்தை இந்தப் பரபரப்புக் கேள்வி சுற்றிக்கொண்டிருந்தது. காரணம், நாராயணமூர்த்திக்குப்பிறகு இன்ஃபோசிஸின் தலைவராகக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நந்தன் நிலேகனி இப்போது அங்கே இல்லை. இன்னொரு பெரும்புள்ளியாகிய மோகன்தாஸ் பாய் சமீபத்தில் விலகிவிட்டார். சாஃப்ட்வேர் துறையில் சறுக்கல்கள் குறைந்து மீண்டும் ஏற்றநிலை வந்துகொண்டிருக்கும் நேரத்தில், சரியான தலைமை இல்லாமல் இன்ஃபோசிஸ் என்ன ஆகும்?
பரபரப்பான இந்தக் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது: ‘கே.வி.காமத்’.இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகிய ஐசிஐசிஐயின் சேர்மனாக இயங்கி வருகிறவர் காமத். இப்போது இன்ஃபோசிஸின் தலைமையையும் ஏற்கவிருக்கிறார். ‘‘மிஸ்டர் மூர்த்தியின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது. ஏதோ என்னால் முடிந்ததைச் செய்யப்பார்க்கிறேன்’’ என்கிறார் தன்னடக்கத்துடன். காமத் சிறந்த வங்கியாளர். ஆனால், இன்ஃபோசிஸ் போன்ற ஒரு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு பொருத்தமானவரா?
உண்மையில், கே.வி.காமத்தை வெறும் நிதித்துறை நிபுணராகப் பார்ப்பதே தவறு. ஐசிஐசிஐயில் அவர் செய்த மிக முக்கியமான மாற்றமே, அந்நிறுவனத்தைக் கணினிமயமாக்கியதுதான்.
வங்கித்துறையில் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கமுடியும் என்று இந்தியாவில் முதன் முதலாக நிரூபித்தவர் அவர்.
காமத் இப்போதே இன்ஃபோசிஸ் இயக்குனர்களில் ஒருவராகப் பணியாற்றி வருகிறவர்தான். அவரது தொழில்நுட்பப் புரிதலும் மேலாண்மை அனுபவமும் இன்ஃபோசிஸின் வளர்ச்சிக்கு உதவும்.
நாராயண மூர்த்தியைவிட இரண்டு வயது சிறியவரான காமத், மங்களூர் பக்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் இருவரும் அரசியல், சமூக சேவை ஆர்வம் கொண்டவர்கள். பலரும் நினைப்பதுபோல் காமத் நிதித்துறைப் பட்டதாரி அல்ல, மெக்கானிக்கல் எஞ்சினியர். கல்லூரியில் படித்துக்கொண்டே குடும்பத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையைக் கவனித்துக்கொண்டிருந்தார். எஞ்சினியரிங் முடித்தபிறகு அகமதாபாத் ஐஐஎம்மில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தார். அங்கேதான் அவருக்கு நாராயணமூர்த்தி அறிமுகமானார். ‘குந்தாபுர் வாமன காமத்’ என்ற அவருடைய பெயரைச் சுருக்கி ‘வாமனா’ என்று செல்லமாக அழைத்தார் நாராயணமூர்த்தி.
‘‘பெயர் மட்டும்தான் வாமனா. நிஜத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிற உயரமான மனிதர்’’ என்கிறார் நாராயணமூர்த்தி. உருவத்திலும் சரி, திறமையிலும் சரி, மற்றவர்கள் அவரை எட்டிப் பிடிப்பது ரொம்பச் சிரமம்!
ஐஐஎம் படிப்பை முடித்து அவர் வெளியே வந்த நேரம், அப்போது சிறிய அளவில் இருந்த ஐசிஐசிஐ வங்கி தனது நிர்வாகத்தில் இள ரத்தம் பாய்ச்ச நினைத்தது. 24 வயது காமத் அங்கே இணைந்தார். சுறுசுறுப்பாகப் பணியாற்ற ஆரம்பித்தார்.
ஐசிஐசிஐயில் காமத் சந்தித்த முதல் பெரிய சவால்: அப்போது எல்லா வங்கிகளும் காகிதத்தை நம்பியே வாழ்ந்துகொண்டிருந்தன. கம்ப்யூட்டர் அறிமுகமானால் தங்களுக்கு வேலை போய்விடும் என்கிற பயத்தில் ஊழியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களைச் சமாளித்து, இதனால் வரக்கூடிய நன்மைகளைச் சொல்லி, படிப்படியாக ஐசிஐசிஐயை முற்றிலும் கணினிமயமாக்கினார் காமத்.
அதன்பிறகு, கொஞ்ச நாள் ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றிய காமத் 1996&ல் மீண்டும் ஐசிஐசிஐயில் இணைந்தார். இந்தமுறை, அதன் தலைவராக! இந்த செகண்ட் இன்னிங்ஸில் காமத் கொண்டுவந்த மாற்றங்கள் இன்றைக்கும் பிரமிப்போடு பார்க்கப்படுகிறவை. ஒருபக்கம் ஏடிஎம் இயந்திரங்கள், டெலிபோன், இன்டர்நெட் என்று அதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்காத வங்கிச்சேவைகளை அறிமுகப்படுத்தி ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களை அசத்தினார்.
இன்னொரு பக்கம் ஊழியர்களைத் தரவரிசைப்படுத்துவது, திறமைசாலிகளுக்கு அதிக வாய்ப்புகள், சம்பளம், மற்ற வசதிகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துவது என வங்கிப் பணியாளர்களையும் உற்சாகமாக வைத்துக்கொண்டார்.காமத் தலைமையில்தான் ஐசிஐசிஐ வங்கி மிகப்பெரிய உயரங்களைத் தொட்டது. இப்போது இன்ஃபோசிஸிலும் அதேபோன்ற ஒரு தாக்கத்தை அவரால் உருவாக்கமுடியுமா? அடுத்த வருடம் இந்நேரம் இந்தக் கேள்விக்கு விடை தெரிய ஆரம்பித்திருக்கும்!
என்.சொக்கன்