பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை, பாகிஸ்தானுக்கு தகவல் சொல்லாமலே தன் ராணுவத்தை அனுப்பி அதிரடியாக சுட்டுக் கொன்றிருக்கிறது அமெரிக்கா. ‘அந்நிய நாட்டுக்குள் அவர்களுக்குத் தெரியாமல் ராணுவ நடவடிக்கை எடுத்ததற்கு நாங்கள் மன்னிப்பு கேட்கமாட்டோம். பாகிஸ்தானில் அடைக்கலம் புகுந்திருக்கும் மற்ற தீவிரவாதிகளைக் கொல்ல எதிர்காலத்தில் இதேபோன்ற தாக்குதல்களை நடத்தவும் தயங்க மாட்டோம்’ என அறிவித்திருக்கிறது அமெரிக்கா.
தீவிரவாத தாக்குதல் எங்கு நடந்தாலும் ஒன்றுதான். ‘இதேபோல மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை பாகிஸ்தானில் சென்று தாக்கும் திடம் இந்தியாவுக்கு உள்ளது’ என இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங்கும், விமானப்படைத் தளபதி பி.வி.நாயக்கும் சொல்லப்போக... பாகிஸ்தான் கொந்தளிப்பில் இருக்கிறது. ‘பலம் இருக்கிறது என நினைத்து எந்த நாடும் தப்புக் கணக்கு போடவேண்டாம்’ என்று பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீர் எகிற, இந்திய&பாகிஸ்தான் மோதல் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஒசாமா கொல்லப்பட்டதில் இருந்தே பல்வேறு முரண்பட்ட செய்திகள்... அந்த 38 நிமிட ஆபரேஷனில் உண்மையில் என்னதான் நடந்தது?
* அபோதாபாத்தில் இந்த வீட்டில் ஒசாமா இருப்பதை 8 மாதங்களுக்கு முன்பாகவே உறுதிசெய்துவிட்டது அமெரிக்கா. ஆளை தப்பவிடாமல் அடிக்க வேண்டுமே! விமானங்கள் மூலம் குண்டுபோட்டு மொத்தமாக காலி செய்ய ஒப்புக்கொள்ளவில்லை அமெரிக்க அதிபர் ஒபாமா. காரணங்கள் பல, வீட்டுக்குள் குழந்தைகள், பெண்கள் என பலரும் இறக்க நேர்ந்தால், வெறுப்பைச் சம்பாதிக்க நேரும். அதோடு, ‘குண்டு போட்டால் கொன்றதற்கு ஆதாரம் இருக்காது. உயிரோடோ, பிணமாகவோ பிடிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார் ஒபாமா.
* ஒசாமா தங்கியிருந்த வீடு போலவே ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் அருகே ஒரு செட் போட்டு பலமுறை தாக்குதல் ஒத்திகை பார்த்ததாக சொல்கிறார்கள். ஒத்திகையில் 30 நிமிடங்களில் முடிந்த ஆக்ஷன், நிஜத்தில் 38 நிமிடங்களுக்கு நீடித்தது.
* ஒசாமா மீதான இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள், 8 மாதங்களில் அமெரிக்க அரசியல்வாதிகள் 16 பேரிடம் பேசி இருக்கிறார்கள். யாரும் தகவலை கசிய விடவில்லை. ‘‘ஆனால் தாக்குதலுக்கு முந்தின நிமிடம்கூட பாகிஸ்தானிடம் சொல்லவில்லை. எங்காவது பிளான் லீக் ஆனால் எல்லாம் போய்விடும் என்ற பயம் இருந்தது’’ என்கிறார் சி.ஐ.ஏ. இயக்குனர் லியான் பனேட்டா.
* அமெரிக்க நேவி சீல்ஸ் வீரர்கள் இரண்டு ஹெலிகாப்டர்களில் தாக்குதலுக்கு வந்தனர். பின்லேடனையும் உறவினர்களையும் உயிரோடோ, பிணமாகவோ அள்ளிச் செல்வது அவர்கள் திட்டம். ஆனால் ஒரு ஹெலிகாப்டர் வீட்டு காம்பவுண்டில் மாட்டிப் பழுதானதால், இன்னொரு ஹெலிகாப்டரை வரவழைத்தனர். இந்தக் குழப்பத்தாலேயே பின்லேடனின் மனைவியையும் மகளையும் விட்டுச் சென்றனர்.
* தாக்குதல் நடத்தச் சென்ற நேவி சீல்ஸ் வீரர்களின் தலை ஹெல்மட்டில் கேமரா இருக்கும். இந்தக் கேமரா தாக்குதல் காட்சிகளை ஆடியோவோடு சேர்த்து படம் பிடித்தது. செயற்கைக்கோள் மூலம் இந்தப் படம் ராணுவ மையத்துக்கு வர... அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தபடி தாக்குதல் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒசாமாவை சுடும் நேரத்தில் மட்டும் பார்க்காமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார் என்கிறார்கள்.
* அமெரிக்க நேவி சீல்ஸ் விதிகளின்படி, அவர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் நபர், தன்னிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை என்பதை உணர்த்தும்விதமாக, ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணக் கோலத்தில் கைகளை உயர்த்தியபடி வரவேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள். இந்த விதிப்படியே ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டார்.
* ஒசாமா உடலை அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் கார்ல் வின்சனுக்குக் கொண்டுவந்து, அங்கேயே இறுதிச்சடங்குகள் செய்து கடலில் அடக்கம் செய்தார்கள். இறுதிச்சடங்கு செய்வதற்காக அரபு மொழி தெரிந்த ஒருவர் தயாராக காத்திருந்தார்.
* உலகம் எங்கும் டாலர் செல்லும் என்றாலும், பின்லேடன் தன்னிடம் வைத்திருந்தது யூரோ கரன்சிதான். ‘காட்டிக்கொடுத்தால் 230 கோடி ரூபாய்’ என தலைக்கு விலை இருந்தாலும், பின்லேடனிடம் இருந்தது வெறும் 500 யூரோதான்.
* அமெரிக்க அப்பச்சி பழங் குடித் தலைவரான ஜெரோனிமோ பெயரை வைத்து பின்லேடன் ஆபரேஷனை நடத்தியது பெரும் சர்ச்சையை அங்கு ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்கப் போரில் அப்பச்சி இனத்தவரும் 77 பேர் பலியாகி இருக்கின்றனர். ‘எங்களை அவமானப்படுத்துவதா’ என அவர்கள் கொதிக்க, ‘‘இந்த ஆபரேஷனுக்குப் பெயர் ‘ஜாக்பாட்’தான். ஆனால், ஜெரோனிமோ எகியா என்று சும்மா சொன்னார்கள்’’ என சமாளிக்கிறார்கள் அதிகாரிகள்.
* பின்லேடன் மறைவிடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து அல்கொய்தா நம்பர் டூவான அய்மான் அல் ஜவஹரியை பிடிக்க நினைக்கிறது அமெரிக்கா. ஆனால், ‘ஜவஹரிதான் பின்லேடனை காட்டிக் கொடுத்ததாக’ ஒரு தகவல் காற்றைவிட வேகமாகப் பரவுகிறது.
அகஸ்டஸ்