கவிதை வனம்



மொழி

நான் சூடாத பூக்களும்
வாடிடும் வேளைகளில்
மிஞ்சியிருக்கும்
மெளனம்
எங்கோ இடறி
விழுந்துவிட்டது
கோயில் மணி சத்தத்திலும்
கடல் அலைகளின்
ஓலத்திலும்
குழந்தையின்
அழுகையிலும்
வண்டுகளின்
ரீங்காரத்திலும்
கண்டெடுத்த
பெரு மெளனங்களை
காலத்தில் புதைந்துபோன
காதலுக்கெல்லாம்
பரிசளித்துவிட்டேன்
கொஞ்சம் வார்த்தைகள் கொடு
தொலைந்த
என் மெளனத்தைத்
தேடிக்கொள்கிறேன்.

- நவீனா

காத்திருப்பு


இப்போது பெய்த
மழையின்
இறுதித் துளியைக்
காட்டி
இதோ என்
காதல் என்கிறாய்
நான் என்
காதலைக் காட்ட
அடுத்து
பெய்ய இருக்கும்
மழையின்
முதல் துளிக்காகக்
காத்திருக்கிறேன்.

- ஆர்.ஜே.ஸ்டீபன்