இவர் தான் பினராயி விஜயன் !



இளங்கோ கிருஷ்ணன்

கடவுளின் தேசம் தண்ணீரில் மிதந்து கண்ணீரில் தத்தளித்துக் கொண்டி ருக்கிறது. அண்டை மாநிலங்கள் உட்பட எட்டு திசைகளில்  இருந்தும் உதவிக் கரங்கள் நீண்டு மானுடம் மரிக்கவில்லை என அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பேரிடர் காலத்தில் எல்லோர்  கவனத்தையும் ஈர்த்த ஒரு பெயர் பினராயி விஜயன். கேரளத்தின் முதல்வர். நீரில் மூழ்கிய கன்றுக்குட்டியைப் பாசமிகு இடையன் தாவிக்  குதித்து தூக்கி வருவது போல் தன் மாநிலத்தை இரு கைகளிலும் ஏந்தி மார்போடு அணைத்து மீட்டுவருகிறார். தலைநகரில் உள்ள  முதல்வர் அலுவலகமே வெள்ள மீட்புப் பணிகளின் தலைமையிடம் போல் 24X7 பம்பரமாகச் சுழன்று கடமையாற்றுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுகிறார். கட்சி பேதமின்றி மீட்புப்  பணியாளர்கள், ஆர்வலர்கள் திரளவேண்டும் என்று திறந்த மனதுடன் கோரிக்கை வைக்கிறார். மீனவர்கள்தான் எங்களின் ராணுவம் என்று  பெருமிதமாக அறிவித்ததோடு மீட்புப் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு மீனவருக்கும் தினசரி மூன்றாயிரம் ரூபாய் தொகையையும், படகுகள்  சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டையும் அரசு வழங்கும் என்று அறிவிக்கிறார்.

யார் இந்த பினராயி விஜயன்?

2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றி மூலம் கேரளாவின் 12வது முதல்வராகப் பதவியேற்றுள்ள பினராயி விஜயன்,  மலபார் மாவட்டத்தில் பினராயி என்ற ஊரில் 1945ல் பிறந்தவர். கல்லூரிக் காலத்திலேயே கேரள மாணவர் சங்கத்தின் துடிப்புமிகு  இளைஞராக கையில் செங்கொடி ஏந்தியவர். மாணவர் சங்கப் பொறுப்பாளராக இருந்தவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  தலைமையை நோக்கி உயர்ந்தார்.
எமர்ஜென்சி காலக் கொடுமைகளை அனுபவித்தஇந்தியத் தலைவர்களில் பினராயி விஜயனும் ஒருவர்.  1970ல் முதன் முதலில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். கேரளத்தின் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவரான ஈ.கே.நாயனார்  தலைமையிலான அரசில் மின்சாரம் மற்றும் கூட்டுறவுத் துறையின் அமைச்சராக இருந்தார். 2002ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கேரள மாநில செயலாளராகத் தேர்வானார்.

கடந்த தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி என்ற கூட்டணிக்குத் தலைமை வகித்து வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்று ஆட்சியைக்  கைப்பற்றினார் பினராயி விஜயன். இந்தியாவில் மக்களுக்கு எதிரான கொள்கை முடிவுகள் எப்போது எழுந்தாலும் முதல் ஆளாகக் குரல்  கொடுப்பவர் இவர்தான். ஒருமுறை தேசிய நெடுஞ்சாலைத் துறை சாலை போடுவதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்றபோது  அதற்கு ஒப்புக்கொள்ளாதவர். நல்ல தலைவர்கள் வாய்க்கும்போது எப்படிப்பட்ட இடர்ப்பாடுகளில் இருந்தும் ஒரு தேசம் மீளும். கேரளம்  மீளட்டும்.