எபிசோட் எழுதறதுக்கு முன்னாடி மனைவிகிட்டயும் கார் டிரைவர்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணுவேன்!
ரைட்டர் சேக்கிழாரின் சக்சஸ் ஃபார்முலா
‘‘கிராமத்துல பிறந்தவன். அங்கிருந்து சென்னை வர்றப்பவே சினிமாவுல கதாசிரியராகணும்... கலைஞர் கையால விருது வாங்கணும்னு லட்சியத்தோடுதான் வந்தேன்!ஏவிஎம் தயாரிச்ச ‘வைர நெஞ்சம்’ தொடர்ல அந்த ஆசை நிறைவேறிச்சு. தினமும் கலைஞர் ஒவ்வொரு எபிசோடையும் பார்த்து ரசிப்பாராம். ஏவி.எம்.சரவணன் சார் சொல்லி சந்தோஷப்படுவார். அந்தத் தொடருக்காக கலைஞர் கையால கலைமாமணி விருதும் வாங்கினேன்! ’’மகிழ்ச்சியில் பூரிக்கிறார் சேக்கிழார். ‘வள்ளி’, ‘ரோஜா’ தொடர்களின் கதை, திரைக்கதையாசிரியர். ‘‘சினிமால முயற்சி செஞ்சு அது கைகூடாத பலருக்கு நிச்சயமா சீரியல்தான் வரப்பிரசாதம். ஏன்னா, சீரியலும் ஒரு சினிமாதான். அது நாடகம் இல்ல!’’ அழுத்தமாகச் சொல்லும் சேக்கிழாரின் குடும்பம் சிவபக்தி நிரம்பியது.
‘‘சித்தப்பா பலருக்கும் நாயன்மார்களின் பெயர்கள்தான். அந்த வகைலதான் எனக்கும் சேக்கிழார்னு பெயர் வைச்சாங்க. பூர்வீகம் அந்தியூர் பக்கம் சொக்கநாதர்மலை கிராமம். அப்பா சோமசுந்தரம், பஞ்சாயத்து போர்ட் கிளர்க். அம்மா அலமேலு, இல்லத்தரசி. கோபிசெட்டிபாளையத்துல பி.காம் படிச்சப்ப நிறைய கதைகளை நண்பர்கள்கிட்ட சொல்லுவேன். அந்தந்த கேரக்டராகவே மாறி கதை சொல்றது என் பலம்னு நண்பர்கள் சொன்னாங்க. டிராமாக்கள் நிறைய போட்டிருக்கோம்.
அப்ப கோபிசெட்டிபாளையத்துல எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும். அப்படித்தான் ஒருமுறை பாக்யராஜ் சார் படப்பிடிப்பைப் பார்த்தேன். சினிமா ஆசை தீவிரமானது அப்பதான். உடனே சென்னை புறப்பட்டு வந்தேன்.இங்க எங்க ஊர்க்காரரும் நண்பருமான சதாசிவம் (‘ரோஜா’ தொடரின் இயக்குநர்) சினிமாவுக்கு முயற்சி பண்ணிட்டிருந்தார். இன்னொரு நண்பர் நவ்ஷத் கேமராமேனா இருந்தார். நாங்க மூணு பேரும் ஒண்ணா முயற்சி செஞ்சுட்டு இருந்தோம். ஒரு கட்டத்துல சொந்தமா படம் எடுக்கவும் தீர்மானிச்சோம். ஆனா, சில சூழல்களால அது டேக் ஆஃப் ஆகலை...’’ பெருமூச்சு விடும் சேக்கிழார், கதாசிரியராக பாலிவுட்டில் கெத்து காட்டியிருக்கிறார்.
‘‘என் நண்பர் மூலமா விஜயா புரொடக்ஷன்ல மேனேஜரா இருந்த வீரராகவன் சார் நட்பு கிடைச்சது. தர்மேந்திரா நடிப்புல ‘பேட்டிக்கா லடிகி’ இந்திப் படத்தை பாதி வரை அவர் தயாரிச்சு வைச்சிருந்தார். மீதிப் பாதி கதையை எழுத கதாசிரியரைத் தேடிட்டு இருந்தப்பதான் அவரை சந்திச்சேன். இரண்டு இட்லி கூட வாங்கி சாப்பிட முடியாத சூழல்ல அப்ப இருந்தேன். நல்ல பசி. முகத்தைப் பார்த்ததுமே புரிஞ்சு கிட்டவர், முதல்ல சாப்பிட வைச்சார். அப்புறம் ‘அஞ்சாயிரம் ரூபா கொடுங்க. நல்ல கதை சொல்றேன்’னு சொன்னேன். ஆச்சர்யமா, ‘அவ்வளவு பணம் எதுக்கு?’னு கேட்டார்.
‘கைலயும் பைலயும் பணமிருந்தாதான் திமிர் வரும்’னு சொன்னேன். சிரிச்சுகிட்டே பணத்தை எடுத்துக் கொடுத்துட்டு, எடுத்து வைச்சிருந்த பாதிப் படத்தைப் போட்டுக் காட்டினார். பார்த்துட்டு அதோட மீதிக் கதையை அந்த ஸ்பாட்லயே சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. இன்னும் கூடுதலா ஐந்தாயிரம் ரூபா கொடுத்தார்! அதோட ‘படகோட்டி’ இயக்குநர் டி.பிரகாஷ்ராவின் மகன் பிரஷாந்த் சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். அப்ப பிரஷாந்த் சார் மிதுன் சக்கரவர்த்தியை வைச்சு இந்தில நிறைய படங்களை இயக்கிட்டு இருந்தார். ‘ஊட்டில மிதுன் சார் ஷூட் இருக்கு. நாளை வந்துடுங்க’னு சொல்லி கைல அம்பதாயிரம் ரூபாய்க்கு செக் போட்டுக் கொடுத்தார்!
வாழ்க்கைல முதல் தடவையா அவ்வளவு பணத்தைப் பார்த்ததும் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம். அதுவும் கதை, சீன்ஸ் கேட்காமயே அந்தத் தொகையைக் கொடுத்தது நெகிழ வைச்சது. ஆனா, செக்கா கொடுத்ததுல சின்ன வருத்தம். அப்ப வங்கில எனக்கு கணக்கே இல்ல! இதையெல்லாம் சொல்லக் காரணம், அப்ப ரைட்டருக்கு அப்படி ஒரு மதிப்பும் மரியாதையையும் இருந்தது...’’ சிரிக்கும் சேக்கிழாருக்கு இந்தக் காலகட்டத்தில்தான் திருமணமாகி இருக்கிறது. ‘‘கைலதான் பணமிருக்கேன்னு வீட்ல பெண் பார்க்கச் சொல்லிட்டேன். கோபிலதான் கல்யாணம் நடந்தது. தாலி கட்டி முடிச்சுட்டு மனைவியோடு கார்ல ஊர்வலம் வந்துட்டு இருந்தோம். வழில பெட்டிக் கடைல தொங்கிட்டிருந்த நியூஸ் பேப்பர் போஸ்டரைப் பார்த்தேன். ‘சினிமா ஸ்டிரைக் தொடங்கியது...’னு இருந்தது.அவ்வளவுதான். உலகமே இருண்ட மாதிரி இருந்தது. கண் கலங்கிடுச்சு. காரை விட்டு இறங்கினதும் எஸ்டிடி பூத்துக்கு ஓடி எங்க டைரக்டர் பிரஷாந்த் சாருக்கு போன் பண்ணினேன். அவர் நிதானமா ‘இந்திப் பட உலகுல பிரச்னை இல்ல... கூல்’னு சொன்னார். அப்புறம்தான் நிம்மதியாச்சு.
மறுநாளே சென்னை வந்துட்டேன். தொடர்ந்து பல வருஷங்கள் அவருக்கு உதவியாளரா, இந்திப் படங்களுக்கு சீன்ஸ் சொல்லிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல அந்த லைஃப் போரடிச்சது. இயக்குநர் சசிமோகன் சார்கிட்ட சேர்ந்தேன்.‘பிரியங்கா’ல என் சின்னத்திரை பயணம் ஆரம்பமாச்சு. என் நல்ல நேரம் பிரஷாந்த் சாரே, பாலாஜி டெலிஃபிலிம்ல பொறுப்புக்கு வந்தார். சன் டிவிக்காக அவங்க தயாரிச்ச ‘கேளுங்கள் மாமியாரே நீங்களும் மருமகள்தான்’ சீரியல்ல கவனிக்கப்பட்டேன். தொடர்ந்து அவங்க தயாரிப்புல ‘கணவருக்காக’, ‘கஸ்தூரி’, ‘கலிசுந்தரம்ரா’, ‘கல்யாணி’ (தெலுங்கு) இப்படி ‘கே’ வரிசைத் தொடர்கள் நிறைய எழுதினேன். இடைல சசிமோகன் சாரோட ‘ஜூட்’டுக்கும் ஸ்கிரிப்ட் செஞ்சேன்.
ஏவிஎம் மேனேஜர் விஸ்வநாதன் சார் மூலமா அந்த நிறுவனத்துக்குள்ள நுழைஞ்சேன். அவங்க தயாரிப்புல தெலுங்கில் ‘ஜானகி’ தொடருக்கு கதை, திரைக்கதை எழுதினேன். என் கதை சொல்லும் பாணி, சரவணன் சாருக்கு பிடிச்சுப் போச்சு. அதுக்குப் பரிசா எனக்கு ஒரு வாய்ஸ் ரெக்கார்டர் வாங்கிக் கொடுத்தார். இப்பவும் அது எனக்கு உதவியா இருக்கு. ‘நிம்மதி’, ‘பாசம்’, ‘வைரநெஞ்சம்’, ‘உறவுக்கு கைகொடுப்போம்’னு பத்தாண்டுகளுக்கும் மேலா அவங்களோடு பயணிச்சேன். ஏவிஎம் ஸ்டூடியோவுல எனக்கும் ஓர் அறை ஒதுக்கிக் கொடுத்து நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. சொந்தமா ஃப்ளாட் வாங்க முடிஞ்சது. கிரகப்பிரவேசத்துக்கு குடும்பத்தோடு சரவணன் சார் வந்து ஆசீர்வதிச்சார்...’’ நெகிழும் சேக்கிழார் இதன் பிறகு சீரியலில் பிசியாகி இருக்கிறார்.
‘‘சீரியல் தயாரிக்கறதை ஏவிஎம் குறைச்சதும் மத்த நிறுவனங்களுக்கு எழுத ஆரம்பிச்சேன். சுரேஷ்கிருஷ்ணா தயாரிப்புல ‘லட்சுமி வந்தாச்சு’, ‘உணர்வுகள்’, ‘அரங்கேற்றம்’; சரிகமவுக்காக மூன்று தொடர்கள், அப்புறம், ‘பாசமலர்’, ‘வசந்தம்’, ‘கங்கா’, இப்ப ‘வள்ளி’, ‘ரோஜா’.தென்னிந்திய மொழிகள்ல 15க்கும் மேற்பட்ட தொடர்கள்; 20 ஆயிரம் எபிசோடுகளுக்கு மேலனு சின்னத்திரை பயணம் தொடருது. திரைக்கதை ட்ரீட்மென்ட்ல எப்பவும் காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கறதுதான் என் பாணி. ஓவர் சென்டி மென்ட் இருக்காது. அழுகை சீன்ஸ் வைக்க மாட்டேன். மனைவி அனிதா, எனக்குக் கிடைச்ச வரம். பக்கபலமா இருக்காங்க. எபிசோட்ஸ் எழுதறதுக்கு முன்னாடி அனிதாகிட்டயும் என் கார் டிரைவர்கிட்டயும் ஷேர் பண்ணுவேன். அவங்க சொல்ற ஆலோசனைகளைக் கேட்டு மெருகேத்துவேன். ‘கணவருக்காக’ உட்பட பல டைட்டில்களை எனக்கு முன்மொழிஞ்சது அனிதாதான்...’’ என்கிற சேக்கிழாருக்கு, சினிமாவிலும் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற விருப்பமிருக்கிறது. இந்தத் தம்பதியினருக்கு நந்தீஸ்வரன் என்ற மகனும், நந்திதா என்ற மகளும் இருக்கிறார்கள்.l
-மை.பாரதிராஜா படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
|