‘கெமிஸ்ட்ரி’ இந்த வார்த்தையை உபயோகிக்காத இடமே இல்லை என்கிற அளவுக்கு சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் பிரபலமாக இருக்கிறதே... அது என்ன கெமிஸ்ட்ரி? உடலில் சுரக்கும் கெமிக்கலா? ஜி.இளவரசு, சென்னை-11.
பதில் சொல்கிறார் ஈரோடு பாலியல் மருத்துவ நிபுணர் ஆர்.குமாரசுவாமிசமீபகாலமாக பிரபலமாகியிருக்கிற வார்த்தை ‘கெமிஸ்ட்ரி’. ஏதோ நேற்று முளைத்த வார்த்தை அல்ல. காலங்காலமாக இருக்கிற விஷயம்தான். இரு நபர்கள் இணைந்து ஒரு செயலைச் செய்கிறபோது, அவர்களுக்குள் ஒருமித்த கருத்து, முரண்பாடின்மை, நிறை குறைகளை ஏற்றுக்கொள்கிற மனோபாவம், உணர்ச்சி, புரிதல் என எல்லாவற்றிலும் ஒருமித்த இயல்பு இருந்தால், அவர்கள் செய்கிற செயல் நல்லவிதமாக வெளிப்படும். அந்த இணக்கத்தையே கெமிஸ்ட்ரி என்கிறோம்.
மீடியாவில் பெரும்பாலும் இந்த வார்த்தை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிகழ்கிற சம்பவங்களின்போது மட்டுமே உபயோகப்படுத்தப்படுவதால், இது ஏதோ காதலர்கள் சம்பந்தப்பட்டது என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. அம்மா&மகள், அப்பா-மகன், வாத்தியார்-மாணவர் என யாருக்கிடையில் வேண்டுமானாலும் இந்த இணக்கம் வெளிப்பட்டு, கெமிஸ்ட்ரி பிரமாதமாக அமையலாம்.
சோடியம் என்கிற கெமிக்கலும் குளோரின் என்கிற கெமிக்கலும் தனித்தனி. இரண்டும் இணைந்து சோடியம் குளோரைடாக மாறி, ‘சாப்பாட்டு உப்பு’ என்கிற அருமையான விஷயம் நமக்குக் கிடைப்பதில்லையா? அது போன்றதுதான் ‘கெமிஸ்ட்ரி’யும்!
மைசூரில் வேலை செய்தபோது ‘பேன்கார்டு’ வாங்கினேன். இப்போது சென்னை வந்துவிட்டேன். இதனால் இன்னொரு பேன் நம்பர் வாங்க வேண்டுமா?- ஆர்.நரசிம்மன், சென்னை-91.
பதில் சொல்கின்றனர் என்எஸ்டிஎல் அமைப்பினர் PAN என்பதன் விரிவாக்கம் ‘பெர்மனன்ட் அக்கவுன்ட் நம்பர்’. இந்தப் பெயரே சொல்வதுபோல பேன் எண் ஒருபோதும் மாற்றமடையாது. எப்போதும் எந்த ஊரிலும் அதே எண்ணையே பயன்படுத்த வேண்டும்.
வேறு ஊருக்கு இடம் பெயர்ந்தாலும், வீடு அல்லது அலுவலகம் மாறினாலும் பேன் நம்பர் மாறாது. பேன் கார்டில் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி ஆகிய விவரங்கள் மட்டுமே இருக்கும். முகவரி இடம் பெறுவதில்லை.
ஆனால், உங்கள் முகவரி மாற்றத்தை வருமானவரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதற்கு என்எஸ்டிஎல் அல்லது யுடிஐஐடிஎஸ்எல் சேவை அமைப்பு வழியாக பேன்கார்டு விவரம் திருத்தும் படிவத்தை, அதற்குரிய ஆதாரங்களோடு அளிக்க வேண்டும். உங்கள் பேன் நம்பரில் எந்த மாற்றமும் இல்லாமல், திருத்த வேண்டிய விவரங்கள் மட்டும் சரிசெய்யப்படும். புதிய பேன் கார்டும் வழங்கப்படும். இதற்குக் கட்டணம் ரூ.94.
ஒருவரே பல பேன் எண்கள் வைத்திருப்பது குற்றம்.
நாய் என நினைத்து நரியை வளர்த்த ஒருவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். வீட்டில் எந்தெந்த விலங்குகளை வளர்க்கக்கூடாது? ஆர்.ராமநாதன், ஈரோடு.
பதில் சொல்கிறார் கோவை ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் துணைத்தலைவர் கணேஷ்.வனவிலங்குகளைப் பாதுகாக்க 1972&ல் சட்டம் இயற்றப்பட்டது. இதில், அழிந்து வரும் விலங்கினங்களைக் காக்கும் பொருட்டு, மிகவும் அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினம், அருகி வரும் விலங்கினம் என்ற அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் அதிக விலங்குகள், பறவைகள் அடங்கும். வளர்த்தால், பட்டியலில் அந்த விலங்கினம் எந்த இடத்தில் உள்ளது என்பதற்கு ஏற்ப குறைந்தபட்சம் ஓராண்டு முதல் ஏழாண்டு வரை சிறைத்தண்டனை. குற்ற நடவடிக்கைக்குத் தகுந்தாற்போல ரூ.50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ் போன்ற, வனவிலங்குகள் பட்டியலில் இடம்பெறாத செல்லங்களை வளர்க்கத் தடை இல்லை!