மனிதனின் இயக்கம் அனைத்தையும் வாழும் மண்ணே தீர்மானிக்கிறது. அதனால்தான் நம் மூதாதைகள், நிலத்தை வைத்து வாழ்க்கையை வகுத்தனர். ஒவ்வொரு இனக்குழுவுக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ற கேளிக்கைகள் இருந்தன. குகையில் வாழ்ந்தவன் கற்களைத் தட்டிக் களித்தான். காட்டில் வாழ்ந்தவன் ருசித்தெறிந்த எலும்புகளை முனைமுறித்து ஊதி கொண்டாடினான். கேளிக்கைகளில் வெளிப்பட்ட வெற்று ஒலியில் மொழியைக் கோர்த்தபோது பாடல் பிறந்தது. மண்ணைப் போலவே பாடல்களுக்கும் மிகப்பெரும் வசியம் இருந்தது.
மண்ணையும் பாடலையும் மருந்துகளாகவே நம்பும் பழங்குடிகள் இன்றும் நம்மோடு வாழ்கிறார்கள். நோயாளியை நிலத்தில் கிடத்தி, சுற்றிலும் அமர்ந்துகொண்டு, அவர்களுக்கே உரித்தான இசைக்கருவிகளோடு பாடலை இசைக்க, அந்தச்சூழலே ரசாயன மாற்றத்துக்கு உள்ளாகிறது. எங்கோ ஒளிந்திருக்கிற நோயின் மையப்புள்ளியை அந்த இசையின் உக்கிரம் சுட்டுப் பொசுக்குகிறது. நோயாளி எழுந்து அமர்கிறான்.
பேயோட்டுதல், திருஷ்டி கழித்தல் என கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கும் நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஒரு அறிவியல் சார்ந்த உளவியல் சுழன்று கொண்டிருக்கிறது. அம்மன் கோயிலின் உடுக்கைச் சத்தம், உள்ளுக்குள் உறங்கும் அதீத சக்தியொன்றை உசுப்பி எழுப்புவதன் பின்னணி அந்த உளவியல்தான்.
இசை, எல்லாம் வல்ல இயற்கையின் குழந்தை. வறண்டு கிடக்கும் மனதில் உற்சாகம் விதைக்கும்; மகிழ்வைச் சொரியும்; சோகத்தை இரட்டிப்பாக்கும்; தாலாட்டும்; தூக்கம் கலைக்கும். சிதைக்கும். வளர்க்கும். அதுபோன்ற வல்லமை பொருந்திய இசைக்கருவிகளில் ஒன்றுதான் பவுனி!
தர்மபுரி மாவட்டம் பொம்மிடிக்குப் பக்கத்திலுள்ள நடூர் கிராமத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் பவுனி, அருந்ததியர் சமூகத்தின் சடங்கிசைக் கருவி. இப்போது கோவிந்தன் என்ற ஒரு கலைஞனிடம் மட்டுமே காணக்கிடைக்கிறது.
மத்தளம் போன்ற உருண்ட வடிவத்தில் உடுக்கையைவிட பெரிதான இக்கருவியின் ஒருதலை சிறுத்தும், மற்றொன்று பெருத்தும் காணப்படுகிறது. சிறுத்த தலைப்பகுதியில் உடும்புத்தோல் போர்த்தப்பட்டுள்ளது. பெருத்த தலைப்பகுதி திறந்தநிலையில் இருக்கிறது. தோலின் மையப்பகுதியில் சிறிய ஓட்டையிட்டு, அதில் ஒரு நரம்பால் முடிச்சிட்டு, அதன் எதிர்நுனி திறந்த தலைப்பகுதி வழியாக வெளியில் வருகிறது.
இடதுகையால் அந்த நரம்பை இறுக்கமாக இழுத்துப் பிடித்துக்கொண்டு, வலதுகையின் விரலால் அந்த நரம்பைச் சுண்ட, அந்த அதிர்வு தோலில் எதிரொலித்து, உடுக்கையை மீறிய உக்கிரமான நாதம் வெளிப்படுகிறது. மற்றொரு விரலில் சிறு சலங்கையை மாட்டிக்கொள்வதால் அந்தக் கலவையிசை அப்பகுதியில் அருளைச் சுரக்கிறது.
கோவிந்தனுக்கு இப்போது 90 வயது. இவரது மூதாதையருக்கும் பவுனி இசைப்பதுதான் தொழில். பல தலைமுறைகளாகப் பயன்படுத்திய மரத்தாலான பவுனியை பூஜையறையில் வைத்திருக்கிறார். இப்போது இவர் வைத்திருப்பது பித்தளைப் பவுனி.
‘‘ஆரம்பத்தில் மூங்கிலாலேயே இக்கருவி செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் புளி, வேம்பு மரங்களில் செய்துள்ளார்கள். இப்போது கோவிந்தன் வைத்திருக்கும் பித்தளைப் பவுனி 142 ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்டது’’ என்கிறார் இசை ஆய்வாளர் பல்லடம் ப.க.பொன்னுச்சாமி.
இந்த பவுனியின் மேற்பரப்பில் அதுபற்றிய தகவல்கள் செதுக்கப்பட்டுள்ளன. கி.பி.1869ல், தயைய கவுண்டர், தம்பா கவுண்டர் ஆகியோர் இதைச்செய்து மருக்கம்பட்டி காமதன்றன், மூக்கன், சிட்டுக்கான் ஆகியோருக்கு வழங்கியதாகவும், இசைப்போரின் ஜீவனத்துக்கு மாட்டுப்பட்டி, கொலுகாறன்பட்டி, பெதறம்பட்டி, மூக்கனூர் பகுதி மக்கள் தலா 2 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு கொடுக்காவிட்டால் கங்கையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் சூழும் என்றும் எழுதப்பட்டுள்ளது.
இப்போது திருமணத்துக்கு வாசிக்கும் வழக்கம் ஒழிந்துவிட்டது. பொம்மிடியைச் சுற்றியுள்ள கோயில் திருவிழாக்களுக்கு கோவிந்தனை அழைக்கிறார்கள். கருவறை முன் அமர்ந்து பவுனியை இசைத்தபடி சாமியழைக்கிறார் கோவிந்தன்.
‘ஆயி மகமாயி...
ஓம்கார புவனேஸ்வரி...
உத்தமியே பத்தினியே
உலகத்தை ஆண்டவளே...
யாரு குறை வச்சாலும்
ஆயி குறை ஆகாது...
யாரு பகை வச்சாலும்
தாயி பகை ஆகாது...’
தள்ளாத மழலைக்குரலில் கோவிந்தன் பாட, அப்பகுதியில் அனல் பறக்கிறது. பலர் அருள் வந்து ஆடுகிறார்கள். இதுதவிர, பேயோட்டுதல் கோவிந்தனுக்கு உபதொழில்.
‘‘கோவிந்தனுக்கு பவுனி வாசிப்பே தொழில். அதனால் வறுமை அவரை வாட்டுகிறது. முதிய கலைஞர்களுக்கு வழங்கப்படும் அரசு உதவித்தொகை கிடைத்தால் இவரது பட்டினி கலையும். கோவிந்தனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தும் யாரும் இதைக் கற்கவில்லை. கோவிந்தனைப் போலவே இக்கருவியும் எதிர்காலம் இழந்து நிற்கிறது’’ என்கிறார் பொன்னுச்சாமி.
வெ.நீலகண்டன்
படங்கள்: செல்வன்