கத்தரி வெயிலில் கருகிக் கொண்டிருந்த சென்னை, திடீரென குளிர்ப் பிரதேசமானது சில மணி நேரங்களுக்கு! 2011 மிஸ் இந்தியா போட்டியில் கிரீடம் வென்ற கனிஷ்தா தன்கர், ஹஸ்லீன் கவுர் மற்றும் அங்கிதா ஷோரே என மூன்று அழகுப் புயல்களும் ஒரே இடத்தில் மையம் கொள்ள, சிலிர்த்துத்தான் போனது சிங்காரச் சென்னை!
அழகிகள் அட்டென்டென்ஸ் கொடுத்த இடம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருக்கும் ‘டிஸாட்’ கைக்கடிகார விற்பனையகம்.
இடுப்பை ஒடித்து போஸ் கொடுப்பதில் தொடங்கி, ‘சீஸ்’ சொல்லி சிரிப்பது வரை மிஸ் இந்தியா ஃபிளாஷ் வெளிச்சப் பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை மூவரும்.
சொல்லி வைத்தமாதிரி சென்னை புகழ் பாடி முடித்த மூவரிடமும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒரு காம்போ பேட்டி...
‘‘ஒரே ராத்திரில இவ்ளோ பாப்புலர்... உலகமே எங்களைப் பார்த்திட்டிருக்கு. திரும்பின பக்கமெல்லாம் கேமராவோடவும் மைக்கோடவும் மீடியா ஆட்கள்... செம த்ரில்லிங்கா இருக்கு. அழகுக்கு இவ்ளோ அங்கீகாரமா! இந்தப் பேரையும் புகழையும் வச்சு நிச்சயமா நம்ம நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம்’’ & காந்தியின் எள்ளுப் பேத்திகள் மாதிரிப் பேசுகிற மூவருக்கும் ஒரே கனவு... நடிகையாகவும் பிரபலமாவது!
‘‘மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ்னு பாலிவுட்டை ஆண்டுக்கிட்டிருக்கிறதே முன்னாள் அழகிகள்தானே... எங்களுக்கும் அங்க நிச்சயம் ஒரு இடம் காத்திட்டிருக்கு...’’ & கனிஷ்தாவும் ஹஸ்லீனும் சொல்லி நிறுத்த, அவசரமாக இடைமறித்த அங்கிதா, தனது டோலிவுட், கோலிவுட் ஆசையை அப்பட்டமாக்கினார்.
‘‘சினிமால என்னோட என்ட்ரி சவுத் சைடுலேர்ந்து ஆரம்பிக்கணும்னு ஆசைப்படறேன். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கிறதுல உங்க ஆளுங்களை மிஞ்சவே முடியாதுங்க... டெக்னிக்கலாவும் எங்கயோ போயிட்டிருக்காங்க... இங்க ஜெயிச்சிட்டா, அதுவே பாலிவுட்டுக்குள்ள நுழைய பெரிய தகுதினு நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கேன்!’’
‘‘அட... நாங்க மட்டும் என்ன மாட்டோம்னா சொன்னோம்? எங்களுக்கும் சவுத் இந்தியன் லாங்குவேஜ் படங்கள்ல நடிக்கணும்னு ஆசைதான். உங்காளுங்க மாதிரியே எங்களுக்கும் ரஜினி சார்னா அவ்ளோ கிரேஸ்! அவரைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கோம். சார் படத்துல சான்ஸ் இருந்தா சொல்லுங்க... உடனே ஸைன் பண்ணிடலாம்...’’ & ஆசையைக் காற்றில் தூது விடுகிறார்கள் கனிஷ்தாவும் ஹஸ்லீனும்.
‘ஒரே படத்துல மூணு பேருக்கும் சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு வந்தா ஓ.கேவா?’ என்றால் பெரிதாக ‘ஓஓஓஓ...’ போடுகிறார்கள்.
‘‘மிஸ் இந்தியால கலந்துக்கிறதுக்கு முன்னாடியே மூணு பேரும் அறிமுகமாயிட்டோம். அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா நெருக்கமாகி, இப்ப நாங்க திக் ஃப்ரெண்ட்ஸ். ‘3 இடியட்ஸ்’ மாதிரி நல்ல ஸ்கிரிப்ட்டோட யாராவது வந்தா, நாங்க ரெடிப்பா...’’ - ஐடியா சொல்லி சிரிக்கிறார்கள் ‘3 ஸ்வீட்டீஸ்’!
ஆர்.வைதேகி
படங்கள்: புதூர் சரவணன்