அபார்ட்மென்ட் என்கிற அடுக்குமாடிக் குடியிருப்பில் ஃபிளாட் வாங்க விரும்பினால் ஆயிரம் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என சற்றே மிகையாகச் சொல்வதுண்டு. ஆமாம்... மாநகராட்சி அல்லது உள்ளாட்சி நிர்வாகத்தில் முறையாக அனுமதி வாங்கி எழுப்பப்படும் சில அடுக்குமாடிகளிலும்கூட எதிர்பாராத ஒரு சிக்கல் வரக்கூடும்.
ஒரு உதாரணம்... பில்டர் அனுமதி வாங்கியே கட்டியிருக்கிறார். ஆனால், அனுமதி வாங்கியது 10 ஆயிரம் சதுர அடி (மொத்தப் பரப்பளவு) கட்டிடம் எழுப்புவதற்கு. கட்டியதோ 12 ஆயிரம் சதுர அடி. அப்படியென்றால்? இந்த இடத்தில் பிறழ்வு என்கிற ‘டீவியேஷன்’ ஏற்பட்டிருக்கிறது. இது சிக்கல்தான்.
இன்னும் சில உதாரணங்கள்...
தரைத்தளமும் முதல் தளமும் கட்ட அனுமதி வாங்கிவிட்டு, அதற்கு மேலே ‘ஒரே ஒரு அறைதான்’ கட்டினாலும் பிறழ்வுதான். 1+1 அனுமதி வாங்கிவிட்டு, 1+2 எனக் கட்டப்பட்ட குடியிருப்புகள் பல உண்டு.
மூன்றாவது மாடியில் ஒரு ஃபிளாட் வாங்குகிறோம். 800 சதுர அடிக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் கூடுதலாக 200 சதுர அடியும் கட்டப்பட்டிருக்கிறது. ‘பெரிதாக இருக்கும்... அனுமதி பெறாத 200 சதுர அடிக்கு டிஸ்கவுன்ட் தருகிறோம். ஒரு பிரச்னையும் இல்லை. வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று பில்டர் ஆசை காட்டுவார். அல்லது உண்மையைச் சொல்லாமலே விற்கக்கூடும். ஆனால், இதுவும் பிறழ்வுதான்.
அபார்ட்மென்ட்டை சுற்றி காலியாக விட வேண்டிய இடத்தின் அளவு குறைந்தாலும் தவறுதான். இது ‘செட் பேக்ஸ்’ என்று சொல்லப்படும்.
பொதுவாக, அபார்ட்மென்ட் கட்டுவதற்கு எந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது?
சாலையின் அகலம், நிலத்தின் பரப்பு ஆகியவற்றைப் பொறுத்தே எத்தனை தளங்கள் கட்டலாம் என நிர்ணயிக்கப்படுகிறது. மொத்தக் கட்டிடத்தின் பரப்பும் இதைப் பொறுத்தே அமையும். நாலாபக்கமும் விடவேண்டிய காலி இடத்தின் அளவும் கணக்கிடப்படும். இதை ‘ஃப்ளோர் ஸ்பேஸ் இன்டக்ஸ்’ (சுருக்கமாக திஷிமி) என்பார்கள்.
60 அடி அகலம் உள்ள சாலையில், இரண்டரை மடங்கு அளவு கட்டிடத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 30 ஆயிரம் சதுர அடி இடம் இருக்கிறது என்றால், அங்கே அதைப்போல இரண்டரை மடங்கு அளவுக்கு கட்டிடம் எழுப்பலாம். அதாவது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மொத்தப் பரப்பு 75 ஆயிரம் சதுர அடி வரை இருக்கலாம்.
40 அடி அகலம் உள்ள சாலையில் ஒன்றரை மடங்கு கட்டிடத்துக்கே அனுமதி அளவு. 4800 சதுர அடி நிலம் இருந்தால் 7200 சதுர அடி அளவு கட்டிடம் கட்டலாம்.
இப்படி அனுமதி, அங்கீகாரம் வாங்கிக் கட்டப்படுவதில் சிறுபிழை எழுந்தாலும் அது பிறழ்வுதான்!
முன்பெல்லாம் ‘முறைப்படுத்துதல்’ என்ற ரெகுலரைசேஷன் திட்டத்தின்படி, கூடுதல் பணம் செலுத்தி இதுபோன்ற பிறழ்வுகளுக்கும் அங்கீகாரம் பெற வழி இருந்தது. இப்போது நீதிமன்றம் விதிமீறல்களை கடுமையாக அணுகுவதால் முறைப்படுத்துவது எளிதல்ல. அதனால், பில்டர் அனுமதி வாங்கி அபார்ட்மென்ட் கட்டுகிறார் என்பதிலேயே திருப்தி அடைந்துவிடாமல், அனுமதி மீறாமல் கட்டிடம் எழும்புகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு ‘அனுமதியில் உள்ளபடி கட்டி முடிக்கப்பட்டது’ என்று கட்டிட அனுமதி வழங்கிய அமைப்பு, ‘கம்ப்ளீஷன் சர்ட்டிஃபிகேட்’ அளிக்கும். இந்தச் சான்றிதழையும் பில்டரிடம் கேட்டு வாங்க வேண்டும். வங்கிக்கடனுக்கும் இந்த ஆவணங்கள் அவசியம்.
பரம்பரைச் சொத்து வைத்திருப்போம். கட்டிடமும் பழசாகியிருக்கும். இந்நிலையில் அந்த இடத்தில் அபார்ட்மென்ட் கட்ட விரும்பும் பில்டர் ‘ஜாயின்ட் புரொமோஷன்’ திட்டத்துக்கு உங்களை அழைப்பார். ‘கண்ணா, ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா? வீட்டுக்குப் பதிலாக ஃபிளாட் கிடைக்கிறது... கை மேல் காசும் கிடைக்கிறது... அப்புறம் என்ன தயக்கம்’ என நமக்கும் யோசனை ஆரம்பிக்கும்.
தவறில்லைதான். ஆனால், ‘நீ அரிசி கொண்டு வா... நான் உமி கொண்டு வரேன்... ஊதி ஊதி தின்னலாம்’ என்கிற கதையாகி விடக்கூடாதில்லையா?
அதனால்...
ஜாயின்ட் புரொமோஷன் ஆவணத்தில் கையெழுத்திடும் முன் இடம், அன்றைய மதிப்பு, திட்ட மதிப்பு, கட்டி முடிக்கப்படும்போது ஏறக்கூடிய மதிப்பு, ஃபிளாட்களின் விற்பனை மதிப்பு, நிலத்துக்காக பில்டர் அளிக்கப்போகும் பணம் மற்றும் ஃபிளாட் மதிப்பு ஆகியவற்றைத் தெளிவாக அலசி, அதற்கேற்ப பேரம் பேச வேண்டும். சிலர் நிலத்துக்குப் பணம் தராமல் ஃபிளாட்களாக தருவதாகக் கூறுவதுண்டு. அப்படியானால் அவற்றின் மதிப்பு என்ன என பாருங்கள்.
பில்டரே சட்ட வல்லுனரை அழைத்து வந்தாலும், நம் தரப்பில் வழக்கறிஞரோடு ஆலோசித்த பிறகே ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும்.
‘தனியாரே வேண்டாம்... அரசுக்கே ஆதரவளிப்போம். வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கத்தான் எனக்கு ஆசை’ என்பவரா நீங்கள்? அது பற்றி... அடுத்த வாரம்!
(கட்டுவோம்!)