காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 63

ஆம். காட்ஃபாதர் சரணடைந்தார்.பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு இடையிலும் பாப்லோ விவகாரத்தில் கொலம்பிய  அதிபர் சீஸர் கவேரியா, முள் மேல் விழுந்த சேலையைப் பிரித்தெடுக்கும் கவனத்தோடு ஈடுபட்டார்.அமெரிக்காவின்  வாயை சதாம் உசேன் பிரச்னையை கையிலெடுத்து அடைத்தார்.உள்ளூரில் காலி கார்டெல், போலீஸ், இராணுவம்  மற்றும் அதிகார மட்டத்தில் இருந்த பாப்லோ எதிர்ப்பாளர்களை கண்டிப்போடு ஒடுக்கினார். குறிப்பாக பாப்லோவை பரம  எதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஜெனரலாக இருந்த மாஸாவை, தண்ணீr  இல்லாத காட்டுக்கு இடம் மாற்றினார்.

“பாப்லோ எஸ்கோபார் சரணடைந்தால், கொலம்பியா வில் இனி குண்டுவெடிப்பே நடக்காது. ஆள் கடத்தல் அராஜகம்  அறவே ஒழியும். தேவையற்ற மரணங்களைத் தவிர்க்கலாம்...”அதிபர் சொன்னதை பெரும்பாலானோர்  மகிழ்ச்சியுடன்ஏற்றுக் கொண்டார்கள்.பல மாதங்களுக்கு நீடித்த பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு  வந்தது.தன்னுடைய இராணுவத்தையும் படிப்படியாக பாப்லோ சரணடைய வைத்தார். ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டன.  பெரும்பாலான சொத்துகளை அரசு வசம் ஒப்படைக்க சம்மதித்தார்.மெதிலின் நகரிலேயே பாதுகாப்பான ஒரு  சிறைக்கூடத்தில் பாப்லோவை வைக்க அதிபரின் ஆலோசனையின் பேரில் அரசு திட்டமிட்டது.

ஆனால், அப்படியொரு சிறைக்கூடமே இல்லை. இதற்கான செலவையும் பாப்லோவே ஏற்றுக்கொள்ள ஒப்புக்  கொண்டார்.அதாவது உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு கைதி, தனக்கான சிறையை உருவாக்கிக்  கொண்டார்.மெதிலின் நகருக்கு வெளியே ஒரு மலையின் உச்சியில் இருந்த தன்னுடைய சொந்த கட்டடத்தை  சிறைச்சாலையாக பாப்லோவே மாற்றிக் கட்டினார். ‘லா கதீட்ரல்’ என்கிற பெயர் கொண்ட அந்தக் கட்டடம்  பார்வைக்கு பள்ளிக்கூடம் மாதிரி இருக்கும். மறுவாழ்வு மையமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அந்தக் கட்டடத்தைச்  சுற்றிலும் மின்சார வேலி அமைக்கப்பட்டது.

அது பாப்லோவுக்கு சொந்தமான கட்டடம் என்பது அரசுக்கும், பாப்லோ தரப்புக்கும் மட்டும்தான் தெரியும். அவருடைய  பினாமி ஒருவரின் பெயரில் இருந்த இந்தச் சொத்து முறைப்படி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.பல்வேறு  இடங்களைப் பரிசீலித்து, மிகக் கவனமாகவே தனக்கான சிறைச்சாலையாக லா கதீட்ரலை பாப்லோ தேர்ந்தெடுத்தார்.
கடல் மட்டத்திலிருந்து ஏழாயிரம் அடி உயரத்தில் இருந்த இங்கிருந்து மெதிலின் நகரை முழுமையாகப் பார்க்கலாம்.  பாப்லோவை சிறையிலேயே முடித்துவிடலாம் என்று யாராவது திட்டம் தீட்டினால்கூட மிக எளிதாக இந்த  மலையுச்சிக்கு வரமுடியாது.

ஏனெனில், மலையைச் சுற்றிலும், அரசின் பாதுகாவலர்களைத் தவிர்த்து நூற்றுக்கணக்கான தனியார் படை வீரர்கள்  ஆயுதங்களோடு இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள்.அவர்களுக்கு சம்பளம்?  அரசு சார்பாக பாப்லோதான் கொடுத்தார். அந்தக் காலத்து லேட்டஸ்ட் எலெக்ட்ரானிக் பாதுகாப்புக் கருவிகள் எல்லா  இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. அத்துமீறி யாரேனும் உள்ளே நுழைய முயற்சித்தால் மலையே அதிரும்வண்ணம்  அலாரம் அடிக்கும். அடர்த்தியான வனத்தைக் கடந்துதான் மலையடிவாரத்துக்கே வரமுடியும். அந்தக் காட்டில்  அந்நியர்கள் ஊடுருவினால், அவர்களைக் ‘கவனிக்க’ போதுமான ஏற்பாடுகள் தயாராகி இருந்தன. எல்லாவற்றுக்கும்  மேலாக, அந்த மலையை எப்போதும் பனி மூடியவாறே இருக்கும். எனவே, வான் மார்க்கமாகவும் தாக்குதல் நடத்துவது  சிரமம்.

சிறைக்குள்ளே ‘எல்லா விதமான’ (சிற்றின்பம் உட்பட) வசதிகளும் பாப்லோவுக்கு கிடைக்கும். அவருடைய நெருங்கிய  சகாக்கள் மற்றும் சகோதரர்கள் என்று பன்னிரெண்டு பேரும் அந்த சிறையில் அவரோடு பொழுதுபோக்கலாம்.  சிறையென்று சொல்வதைவிட கூவத்தூர் ரெசார்ட் என்று லா கதீட்ரலைச் சொல்வதே சரியாக இருக்கும்!அதே நேரம்,  எல்லா போதை பிசினஸையும் நிறுத்திவிட்டதாக அரசிடம் பாப்லோ சொல்லியிருந்தாலும், மறைமுகமாக அவருடைய  பினாமிகள் கடை போட்டு கல்லா கட்டுவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கச்சிதமாகவே செய்திருந்தார்.

எந்தெந்த விஷயங்களில் தன் மீதும், தன்னுடைய சகாக்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்பதைக்கூட  பாப்லோதான் தீர்மானித்தார். ஒப்புக்குச் சப்பாணியாகத்தான் இந்த சரண்டர் வைபவமே நடந்தது.ஆனால், மக்களிடம்  “கொலம்பியாவின் அமைதிக்கான விலை நான்தான். கொலம்பிய மக்களுக்காக என்னுடைய, என் தோழர்களின்  சுதந்திரத்தை தியாகம் செய்கிறேன்...” என்று உருக்கமாகப் பேசினார். பேருக்கு கொஞ்சநாள் சிறையிலிருந்துவிட்டு,  வெளியே வரும்போது கறைபடியா கரங்களுக்கு சொந்தக்காரரான அரசியல்வாதியாக வெளிவருவது அவரது திட்டம்.
சரணடைய வேண்டிய நாளும் வந்தது.வழக்கமாக அதிகாலை வரை விழித்திருந்துவிட்டு தூங்கப் போவார் பாப்லோ.  பிற்பகலுக்கு மேல்தான் சோம்பல் முறித்து துயிலெழுவார். மாலைவரை மிகவும் மெதுவாகத்தான் காரியங்கள் நடக்கும்.  இரவு கவிழும் வேளையில்தான் பாப்லோவின் எஞ்சின் சூடு பிடிக்கும்.ஆனால், சரணடைவதாகச் சொன்ன அன்று காலை  ஏழு மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார். அம்மாவுடனும், குடும்பத்தினருடனும் சேர்ந்து காலை உணவு அருந்தினார். வழக்கமாக சாப்பிடும்போது தீவிரமான சிந்தனையில்தான் இருப்பார். அன்று ஜாலியாக ஜோக்கடித்துக் கொண்டே  சாப்பிட்டார்.நேரடியாக சிறைச்சாலை வாசலுக்கே பாப்லோ செல்வது மாதிரி ஏற்பாடு. சம்பிரதாயமாக அதிபர் முன்பாக  சரணடைவது போன்ற சடங்குகள் எதற்கும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

கொலம்பியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமுமே இந்த நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா மட்டும் நரநரவென்று பல்லைக் கடித்துக் கொண்டு வேறு வழியின்றி வேடிக்கை பார்த்தது.பாப்லோவின்  சொந்த ஊரான என்விகாதோவில் இருந்த கால்பந்து மைதானத்துக்கு காரில் ஊர்வலமாகச் சென்றார். வழிநெடுக மக்கள்  சாலையின் இருபுறமும் குவிந்து, ‘பாப்லோ எஸ்கோபார் வாழ்க..! ஏழைகளின் ஏந்தலே நூறாண்டு வாழ்க!’ என  கோஷம் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில ஆர்வக்கோளாறு பாப்லோ ரசிகர்கள், ஆங்காங்கே கட் அவுட்டும் வைத்து  கலக்கியிருந்தார்கள்.

ப்ளூ ஜீன்ஸ், வெள்ளை சட்டையில் சிம்பிளாக புன்னகை தவழும் முகத்தோடு மக்களைப் பார்த்து கை காட்டிக்கொண்டே  காரில் வந்தார் பாப்லோ.அவருக்காக ஹெலிகாப்டர் தயாராக இருந்தது. அதனுள் பாப்லோவின் அப்பாவும்,  பாப்லோவுக்கு மிகவும் நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவரும் இருந்தனர். தான், திறந்த மனதோடு சரணடைவதை  பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக அந்த பத்திரிகையாளரை ஏற்பாடு செய்திருந்தார் பாப்லோ. இந்த சரணடையும்  விழாவை எதிரிகள் குலைக்கலாம் என்கிற அச்சம் நிலவிக்கொண்டுதான் இருந்தது.

எனவேதான் பாப்லோ, சிறைக்குள் நுழையும் வரை மெதிலின் நகரின் வானில் ஒரு பறவை கூட பறக்கக்கூடாது என்று  பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்டளையிட்டிருந்தார். ஹெலிகாப்டர் சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருந்த  ஹெலிபேடில் பத்திரமாகத் தரையிறங்கியது. கம்பீரமாக சிங்கம் மாதிரி வெளிவந்தார் பாப்லோ. சிறைச்சாலை  வாயிலில் இருந்த காவலரிடம் தன்னுடைய பிஸ்டலை கையளித்தார்.1991ல் பாப்லோ சரணடைந்ததைத் தொடர்ந்து,  கொலம்பியாவில் அமைதி திரும்பி விட்டது என்றுதான் அரசாங்கம், மக்கள், கார்டெல்காரர்கள் என்று அனைத்துத்  தரப்பினருமே நம்பினார்கள்.நிஜமாகவே அமைதி திரும்பியதா?

(மிரட்டுவோம்)
ஓவியம்: ஸ்யாம்