பருவத்தே பயிர் செய்!



நியூஸ் வியூஸ்

அது ஒரு காலம்.ஆட்சி மொழி சட்ட மசோதா ஒன்றினை 55 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இந்திய அரசு கொண்டு  வந்து ஜனவரி 26, 1965 முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியே இருக்குமென்று அறிவித்தது.

மொழியைக் காக்க உயிராயுதம் ஏந்தியவன் தமிழன். இந்திய அரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து அரசியல் கட்சியினரின்  போராட்டங்கள் தமிழகமெங்கும் இந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமடைந்தன.மத்திய அரசின் கெடுநாள் நெருங்கிக்  கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பம். தமிழகமெங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள்  மொழியுரிமையைக் காக்க ஜனவரி 15, 1965 முதல் காலவரையற்ற போராட்டங்களில் குதித்தனர்.அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தில் நடந்த ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து மாணவர் ஒருவர் பலியானார். இதையடுத்து  போராட்டம் தீவிரமானது. போலீசின் துப்பாக்கிக்கு எதிராக தங்கள் நெஞ்சை நிமிர்த்துக் காட்டினர் தமிழக மாணவர்கள்.

மாணவர்களை அடக்க இயலாமல் காவல்துறை திணற, ராணுவம் தமிழகத்துக்குள் நுழைந்தது. ராணுவத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ஏராளமான இளைஞர்கள் பலியாகினர்.இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை அப்போது  ஆரம்பித்திருந்த அறிஞர் அண்ணாவால் கூட மாணவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. அவரது வேண்டு  கோளை நிராகரித்து ‘தமிழ்நாடு மாணவர் இந்தித் திணிப்பு எதிர்ப்புக் குழு’வினர் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.மாணவர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அப்போது மத்தியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள்  தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.

தமிழக மாணவர்களின் தொடர்ச்சியான ஐம்பது நாள் போராட்டங்களின் விளைவாக, இந்தியோடு, ஆங்கிலமும் ஆட்சி  மொழியாகத் தொடரும் என்று சமரசத்துக்கு வந்தது மத்திய அரசு.மத்தியிலும், மாநிலத்திலும் அப்போது ஆட்சியிலிருந்த  கட்சி அடுத்து வந்த மாநிலத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. அப்போது இழந்த ஆட்சியை இன்றும் அக்கட்சியால் மீட்க  முடியவில்லை. தம்முடைய மொழிக்காக, உரிமைகளுக்காக இராணுவத்தை எதிர்கொண்ட சாதனையை இதுநாள் வரை  உலகளவில் வேறெந்த மாணவ சமுதாயமும் செய்ததில்லை. தமிழக மாணவர்களின் வீரம் செறிந்த வரலாறு  அத்தகையது.

இன்று?சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே மாணவர்களிடமிருந்து பட்டாக் கத்திகள் பறிமுதல்  செய்யப்பட்டிருக்கின்றன. பக்கத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை ‘எதிர் கொள்ள’ இந்த கத்திகளை தயார்  செய்து வைத்திருக்கிறார்களாம் நம் மாணவர்கள். எல்லோருமே 20 வயதுக்கு உட்பட்டவர்கள்தான்.இதுநாள் வரை  உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது பட்டாக்கத்திகளுக்கு மாறியிருக்கிறார்கள். ஆயுதங்களால் மோதிக் கொள்ளும் அளவுக்கு இந்த இளைஞர்களுக்குள் அப்படிஎன்ன அரசியல், சமூக சித்தாந்த  மோதல்?அதெல்லாம் ஓர் இழவும் இல்லை. வீட்டிலிருந்து கல்லூரிக்கு தாங்கள் பயணிக்கும் பேருந்தில் ‘எந்த செட்டு  கெத்து?’ என்று காட்டுவதற்காக ஏற்பட்ட சண்டைதான் ஆயுதக் கலாசாரமாக உருவெடுத்திருக்கிறது.

இன்னொரு செய்தி.15 வயது சிறுவன் ஒருவன் சென்னையில் கொலை செய்யப்பட்டு, சுடுகாட்டில்  புதைக்கப்பட்டிருக்கிறான். செய்தவர்கள் 20 வயதுக்குட்பட்ட சக நண்பர்கள் சிலர்தான். சம்பவம் நடந்து ஆறு  மாதங்களுக்குப் பிறகுதான் இது தெரிய வந்திருக்கிறது. கொலைக்குக் காரணம், கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட  தகராறாம்.ஒரு காலத்தில் மொழிக்காகவும், இனத்துக்காகவும், சமூக முன்னேற்றத்துக்காகவும் பயன்பட்டுக் கொண்டிருந்த  இளைஞர் சக்தி, இப்போது இப்படி சில்லறைப் பிரச்னைகளுக்காக விரயமாகிக் கொண்டிருக்கிறதே?எங்கே தவறு  இழைத்திருக்கிறோம் நாம்?

‘விதைத்துவிட்டோம். வளர்ந்துவிடும்’ என்று செடியைப் போல குழந்தைகளை பெற்றோரால் வளர்த்துவிட முடியுமா  என்ன? கண்காணிப்பு அவசியமில்லையா?மாணவப் பருவத்தில் நம் குழந்தைகள் வீட்டில் இருப்பதைவிட பள்ளி /  கல்லூரிகளில்தான் அதிகப் பொழுதைச் செலவழிக்கிறார்கள். அவர்களுடைய ஆற்றலை சமூகத்துக்கு பயன்படும்படியான போக்கினில் திருப்பிவிட வேண்டியது ஆசிரியர்களின் கடமையல்லவா?எந்தவொரு சமூகத்திலும் இளையோர்  தடம் மாறுகிறார்கள் என்றால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் பெற்றோரும், ஆசிரியருமே.மாதா, பிதா,  குருவுக்குப் பிறகு தானே தெய்வமே வருகிறது?‘கல்வியும், அதைத் தொடர்ந்த வேலையும்தான் எதிர்காலம்’ என்கிற  சிந்தனையைக் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு விதைக்க வேண்டிய கடமை பெற்றோருக்குத்தான் இருக்கிறது. குடும்பங்களில் வன்முறைச் சூழலில் வளரக்கூடிய குழந்தைகள்தான் வன்முறை எண்ணம் கொண்டவர்களாக  உருமாறுகிறார்கள் என்பது உளவியல் பார்வை. சச்சரவில்லாத குடும்பம் என்கிற அமைப்பே, நல்ல குடிமகன்களை நாட்டுக்குத் தரமுடியும்.

பள்ளிகளில் கல்வியோடு மட்டுமின்றி, சமூகத்தைப் பற்றிய புரிதலையும், நம் வரலாற்றையும் பாடத்தோடு சேர்த்து  மாணவர்களுக்கு போதிக்க வேண்டியது ஆசிரியர்களின் வேலை. கல்விக்கூடங்களை விட்டு வெளியேறி உலகை  தரிசிக்கும் மாணவன், தன்னை தனியனாக உணரக்கூடாது. தான், எதிர்கொள்ள நேரும் பிரச்னைகளுக்கான தீர்வை,  பள்ளி / கல்லூரிகளில் ஆசிரியர்களிடம் பயின்றவற்றிலிருந்து இனம் காணவேண்டும். முன்னெப்போதும் இல்லாத  அளவுக்கு நம் இளைய சமூகத்தினரின் இலக்கை தடம் மாறச் செய்யக்கூடிய நவீன சாதனங்களும், கருத்துகளும்  புழங்கும் காலம் இது. பெற்றோரும், ஆசிரிய சமூகத்தினரும்தான் இந்த ஆபத்திலிருந்து நம் குழந்தைகளைக் காக்க  வேண்டும். சமூக வயலில் பயிர்களாக அவர்கள் செழித்து வளரவேண்டுமே அன்றி, பிடுங்கப்பட வேண்டிய களைகளாக  உருமாறிவிடக் கூடாது!

- யுவகிருஷ்ணா