கோலி சோடா - 2



சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையை கூறு போட்ட மூன்று வில்லன்களை பழிக்குப் பழி வாங்க   புறப்பட்ட மூன்று இளைஞர்களின் கதையே ‘கோலி சோடா - 2’.அந்த இளைஞர்கள் தப்பிக்க காரணமாக இருந்ததாக  சந்தேகப்படும் சமுத்திரக்கனியை போலீஸ் அதிகாரி கௌதம் மேனன் பிடித்து விசாரிக்க... நீள்கிறது முழுநீளக்கதை.  பரத் சீனி ஒரு தாதாவிடம் கார் டிரைவர். சுபிக்‌ஷாவுடன் காதல். பார்க்கிற வேலையை விட நினைக்கிறார்.  இன்னொருவர் இசக்கி பரத். கூடைப்பந்தாட்டத்தில் விருப்பமானவர். வெற்றி பெற்றால் வேலை வரும் என  இருப்பவருக்கு கிரிஷாவுடன் காதல். வினோத், ஆட்டோ வாங்க கொடுத்த பணத்தை ஏமாற்றுகிற இன்னொரு தாதா. இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் எதிராளிகளை சுற்றி வளைத்து வேட்டையாடுவதே முழுக்கதை.

தாதாக்கள், அதிரடி அரசியல் பிரபலங்கள் புகுந்து புறப்பட்டுச் செய்கிற பிரிவினைகள், குழப்பங்கள், தகிடுதத்தங்கள்  எல்லாம் அப்படியே நிகழ்கின்றன. எதையும் எடுத்துக்கூட்டி செய்யாமல் அப்படியே இயக்குநர் விஜய் மில்டன் உலவ  விடுவது அழகு. அடர்த்தியும், அழுத்தமும் தேவைப்படும் வேடங்களில் கூட அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்களை  வைத்து வேகம் ஊட்டுவதும், நம்மை பாத்திரங்களில் கொண்டு போய் சேர்ப்பதும் மில்டனின் கைவரிசை.பரத் சீனி நம்பிக்கையூட்டுகிறார். கண் பார்வையில்லாத சிறுமியிடம் நெகிழ்ச்சியாய் இரக்கப்படுவது, அவளைக்  காப்பாற்ற ஆத்திரமும், வேகமுமாய் விஸ்வரூபம் எடுப்பதுமாக உடல் மொழியில் ஃபிட்.

இசக்கி பரத் இன்னும் இளைஞனாய் நல்ல துடிப்பு. அதே மாதிரி வினோத்தும். கதாநாயகிகளில் சுபிக்‌ஷா வசீகரம்.  தன்னை மீறி தாதாவின் காரை சீனி ஓட்டிக்கொண்டு போகும்போது ஆற்றாமையும், கோபமுமாகத் தடுமாறுவது ரசனை.  கிரிஷா தனி அறையில் சாதி வெறியர்களால் பூட்டப்பட்டவுடன், தொடர்ந்த ஆவேசமும், ஆக்ரோஷமும் கதையோடு  ஒன்ற வைக்கிறது.வரிசையாக கிளாஸில் மதுவை ஊற்றி வைத்து அவரே அருந்துவதாக அறிமுகமாகும் சமுத்திரக்கனி  படம் முழுவதும் அமளிதுமளி. அரசை துல்லியமான வார்த்தைகளில் கண்டிப்பதாகட்டும், நடப்புகளை கூட்டிக் குறைத்து  வார்த்தைச் சூடு வைப்பதிலாகட்டும் மனிதர் கலகலப்பு.

ரோகிணியும், ரேகாவும் அம்மாக்களாக வந்து, அனுபவத்தை வைத்து கேரக்டரை நிறுத்துகிறார்கள். கொஞ்சமே  வந்தாலும், ஸ்டைலும், வார்த்தைப் பிரயோகத்தில் அழகுமாக கௌதம் மேனனின் உடல்மொழி கண்ணில்  நிற்கிறது.பின்னணி இசையை முன்னிலைப்படுத்தி அச்சு ராஜாமணி, அப்பாவின் பெயரைக் காப்பாற்றுகிறார். படம்  முழுவதும் நெருக்க உணர்வைத் தருகிறது மில்டனின் கேமிரா. படத்தில் குறைகள் உண்டு. ஆங்காங்கே கேள்விகள்  எழுகின்றன. முன்பகுதியில் வாழ்வைக் காட்டும் திரைக்கதை, பின்பகுதியில் அடிதடியை நம்புகிறது. என்றாலும் இவை எல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்கிறது படத்தின் படுவேக ஃப்ரெஷ் ட்ரீட்மென்ட்.எளிய மனிதர்களின்  கோபத்தை, காதலை, மனிதத்தைப் பேசுவதால் ஈர்க்கிறது ‘கோலி சோடா-2’.

- குங்குமம் விமர்சனக்குழு