ஆன்லைன் ஆர்மி!



தலைப்பு தலைசுற்ற வைக்கிறதா? விஷயமும் அப்படித்தான். போர் என்றால் வெறும் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு எதிரி நாட்டுக்குள் நுழைந்து  ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவிப்பது மட்டுமல்ல.

அதெல்லாம் அந்தக் கால யுத்தங்கள். எல்லாமும் மாறிப்போன இந்த நவீன யுகத்தில் போரின்  அடிப்படைகளும் மாறிவிட்டன. கத்தியின்றி ரத்தமின்றி எதிரி நாடுகளைச் சிதைக்க நோய் பரப்பும் நுண் கிருமிகளை பகை நாட்டில் ஏவிவிட்டு சில நாடுகள் கிருமி  யுத்தம் நடத்துகின்றன. வேறு சில நாடுகள், எதிரி நாட்டின் கணிப்பொறி டேட்டாபேஸை ஊடுருவி இணைய வைரஸ்கள் அனுப்பி பொருளாதாரத்தையும்  பாதுகாப்பையும் சிதறடிக்கின்றன.

இப்படியான பல்வேறு வெர்ச்சுவல் யுத்தங்கள்தான் இந்த நூற்றாண்டின் ஸ்பெஷல்! தென்கொரியாவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டி கூட ஃபேன்சி பியர்  உள்ளிட்ட சைபர் குழுக்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்ற எதார்த்தம் நமக்கு சொல்லும் உண்மை இதுதான்.

இதிலிருந்து நாட்டை  பாதுகாக்கும் வழியைத்தான் இஸ்ரேல் இன்று உலகுக்கு கற்பித்து வருகிறது. தானியங்கி முறையில் ஸ்மார்ட் கிரிட் தொழில்நுட்பத்தில் மின் பட்டுவாடா  இஸ்ரேலில் இயங்கிவந்தது. அதாவது, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் ஏதேனும் பிரச்னை எழுந்தால் தானாகவே அதனைச் சரிசெய்யும்  தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தது இஸ்‌ரேல் எலக்ட்ரிக் கார்ப்பொரேஷன் (IEC).

போதாதா? ஹேக்கர்கள் புகுந்து விளையாட ஆரம்பித்தார்கள். IECஐ செயலிழக்கச் செய்தார்கள். இதனை தடுக்கத்தான் ‘நேஷனல் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி  அத்தாரிட்டி’ (NISA) நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் பணியாளர்கள் 2013ம் ஆண்டு ஹெஃப்ட்ஸிபா பண்ணை வளாகத்தில் சைபர் ஜிம் நிறுவனத்தைத்  தொடங்கினார்கள். 49 ஆயிரத்து 440 கோடி மதிப்பு கொண்ட ஐஇசி நிறுவனத்தின் இணை நிறுவனமாக சைபர் ஜிம் பொறுப்பேற்று நிர்வகித்து வருகிறது. ‘‘மின்சார நிறுவன ஊழியர்கள் இணைய ஹேக்கர்களுக்கு எதிராக  போராட நாங்கள் பயிற்சி அளிக்கிறோம்...’’ என்கிறார் சைபர் ஜிம்மின் இயக்குநரான ஆஃபிர்  ஹாசோன்.

நீலம், சிவப்பு, வெள்ளை என மூன்று நிறங்களைக் கொண்ட கட்டடத்தில் சைபர் ஜிம் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மற்றும் பிற சைபர் பாதுகாப்புப் பிரிவு ஜாம்பவான்கள் சிவப்பு நிற கட்டடத்தில் உள்ள யூனிட் 8200ல் பணிபுரிகிறார்கள்.  இது அமெரிக்காவின் NSA (National Security Agency)க்கு நிகரானது என கிசுகிசுக்கிறார்கள்.நீலநிற பில்டிங்கில் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்,  புதியவர்கள் என இரு பிரிவினரும் வேலை செய்கிறார்கள். விமான நிலையங்கள், மின் நிலையங்கள், குடிநீர், தொழிற்சாலைகள் ஆகியவற்றைக் காப்பதுதான்  இவர்களின் கடமை.

இதுவரை உலக நாடுகளைச் சேர்ந்த மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சைபர் தற்காப்பு பயிற்சியை சைபர் ஜிம் நிறுவனம் அளித்துள்ளது. செக், போர்ச்சுக்கல்,  லிதுவேனியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் கோச்சிங் பீஸ் ஜஸ்ட் 1 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரத்து 500  ரூபாய்! வெள்ளை நிற பில்டிங்கில் நிஷா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு நீலம் மற்றும் சிவப்பு படையை  ஒருங்கிணைக்கிறார்கள். ‘‘சிலர் கம்பெனியில் உள்ள கணினிக்கு சாப்ட்வேர்களை இன்ஸ்ட்டால் செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், ஊழியர்களுக்குப் பயிற்சி இருந்தால் மட்டுமே சைபர் தாக்குதல்களை சமாளிக்க முடியும். 2019ம் ஆண்டில் இந்தியாவில் எங்கள் சைபர் ஜிம்  நிறுவனத்தை தொடங்கும் திட்டமிருக்கிறது!’’ என்கிறார் ஆஃபிர் ஹாசோன். டீம் 8, ஐடிஎஃப் சைபர், சைபர் ஆர்க் ஆகிய பிற பாதுகாப்பு அமைப்புகளும் சைபர்  ஜிம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘‘இணையம் மக்களை எளிதாக இணைத்துள்ளதால் நான்காம் தலைமுறையாகத் தொடரும் இணையத்  தாக்குதல்களும் அதிகமாகிவிட்டன. ஈரானின் அணு ஆயுதம் மட்டும் எதிர்கால அபாயம் அல்ல.

இஸ்‌ரேல் அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் கணினிகளையும் அரசு தளங்களையும் ஈரானிய சைபர் திருடர்கள் தொடர்ந்து தாக்கி வருவதும் அபாயகரமானதுதான். இந்த சைபர் திருடர்களைத் தடுத்து நிறுத்த வேண்டியதே இன்றைய தேவை...’’ என்று பதறுகிறார் ஜெருசலேம் வென்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவன தலைவரான  எரல் என். மார்கலித். தொழிநுட்பம் ஒன்றுதான். அது அரசின் கைகளிலும் இருக்கிறது, தீவிரவாதிகளின் கையிலும் விளையாட்டுப் பொம்மையாக  காட்சியளிக்கிறது. ஒவ்வொரு அரசும் தன் பகை நாடுகளிடமிருந்து மட்டுமல்ல... தீவிரவாதிகளிடம் இருந்தும் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்;  கடமை. ஆக, ‘இந்தியாவுக்கு ஒரு சைபர் ஜிம் பார்சேல்’ என்று கூவ வேண்டிய காலம் இது                                      

அட்டாக் குழு!

Fancy Bear
2005ம் ஆண்டின் மத்தியில் இருந்து அதிரடியாகச் செயல்பட்டு வரும் ஃபேன்சி பியர் குழு, ரஷ்யாவின் GRU உளவுத்துறையின் சகோதர அமைப்பு. இதன் இதர  பெயர்கள் APT28, Pawn Storm, Sofacy Group, Sednit. டிமிட்ரி ஆல்பரோவிட்ச் என்ற விஞ்ஞானி கண்டறிந்த கோடிங் அமைப்பிலிருந்து  ஃபேன்சி பியர் உருவானது. பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து எனப் பாய்ந்து இப்போது தென்கொரியா வரை தாக்கியிருக்கிறார்கள்.

Lazarus Group
இந்த சைபர் அட்டாக் குழுவுக்கு Hidden Cobra என்று பெயர். 2009ம் ஆண்டிலிருந்து ஆக்டிவ்வாக உள்ள அமைப்பின் முதல் குறி தென் கொரியா. 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் இணையதளத்தின் மீதான தாக்குதல் லாசரஸ் குழுவைப் பிரபலமாக்கியது. போலந்து, மெக்சிகோ, வியட்நாம், ஈகுவடார் ஆகிய  நாடுகளின் வங்கி கணினிக்குள் ஊடுருவி பல லட்சம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்து  ரெக்கார்ட் செய்திருக்கின்றனர். இப்போது பிட்காயின் உலகை டார்கெட் செய்து தாக்கி வருகின்றனர்.

Comment Crew
2006ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு குடைச்சல் கொடுக்கும் சீனாவின் மக்கள் விடுதலைப் படை சைபர் குழு இது. இதன் பிற பெயர்கள்,  ஷாங்காய் க்ரூப், ஆப்ட்1. கோக்கோலா, லோகீட் மார்ட்டின் ஆகிய நிறுவனங்களை கமெண்ட் க்ரூ தாக்கியதாக அமெரிக்க அரசு விசாரணையில் தெரிய  வந்தபோதுதான் இந்த அமைப்புவெளிச்சத்துக்கு வந்தது.

Equation Group (TAO)
2015ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் அமெரிக்கா NSA உருவாக்கிய சைபர் டீம் இது. அட்டாக்கைக் கண்டுபிடித்த ரஷ்ய நிறுவனமான காஸ்பர்ஸ்கை சூட்டிய  பெயரே ஈக்குவேஷன். ஈரான் அணு உலை கணினிகளைத் தாக்கி சாதனை புரிந்த இக்குழு, பின்னாளில் ரஷ்ய ஹேக்கர்களிடம் (Shadow Brokers) தன்  கணினிகளை இழந்தது தனிக் கதை.    

- ச.அன்பரசு