ஷங்கரால 2 நாட்கள் விஜய்யை கட்டிப் பிடிச்சேன்!- திலீபன் புகழ்

அறுபதுகளின் இறுதியில் கும்பகோணம் சன்னதித் தெருவில் இருக்கும் உணவகத்துக்கு வருவான் அந்தச் சிறுவன். கை கழுவும் இடத்தில், இலையை வீசும்  பாதை வழியாகப் பார்த்தால் கோயில் கோபுரம் பிரமாண்டமாகத் தெரியும். தன் அப்பாவுக்கு நான்கு இட்லி, ஒரு டிகிரி காபியை பார்சல் வாங்கிக் கொண்டு, தானும்  சாப்பிட்டுவிட்டு கோயில் கோபுரத்தைப் பார்த்து வணங்குவான். டிகிரி காபி போடுபவரைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்துவிட்டு செல்வான். பத்து வருடங்கள்  நாள் தவறாமல் இப்படித்தான் நடந்தன. அதன் பிறகு 30 வருடங்கள் அந்தப் பக்கம் அச்சிறுவன் வரவேயில்லை.

நாற்பது வருடங்கள் கழித்து கும்பகோணம் சன்னதித் தெருவில் இருக்கும் அந்த உணவகத்துக்கு ஒரு மனிதர் வருகிறார். காபி போடுபவரைப் பார்த்துச் சிரித்தபடி  அவர் அருகில் செல்கிறார். ‘‘நான் இன்னார் மகன். சின்ன வயசுல உங்க கையால சாப்பிட்டிருக்கேன்...’’ என்கிறார் அந்த மனிதர். காபி போடுபவர்,  ‘அப்படியா’ என்று கேட்கவில்லை. மாறாக, ‘‘நீ சினிமா இயக்குநர்ல... உன் படங்களை எல்லாம் பார்ப்பேன்...’’ என பாராட்டி ஆசீர்வாதம் செய்கிறார். சில  வருடங்களுக்குப் பின் அதே மனிதர் கும்பகோணம் வருகிறார். தனக்கு அன்னமிட்ட அந்த காபி போடுபவரை சென்னைக்கு அழைத்து வருகிறார்.

தான் இயக்கும் படத்தில் நடிக்க வைக்கிறார். இந்தச் சம்பவத்தில் இடம்பெற்ற அந்தச் சிறுவன் / மனிதர் / இயக்குநர்... வேறு யாருமல்ல... பிரமாண்ட  இயக்குநரான ஷங்கர்தான்! அந்த காபி போடுபவர், கும்பகோணம் மங்களாம்பிகா மெஸ் சுப்ரமணியம்! ‘‘சின்ன வயசுல இருந்தே ஷங்கரைத் தெரியும். 2005ம்  வருஷம் திடீர்னு ஒருநாள் கடைக்கு வந்தார். ‘நான் சண்முகத்தோட பையன்’னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார். பழசை மறக்காம இருக்காரேனு  ஆச்சர்யப்பட்டேன். அப்ப எனக்கே தெரியாம என்னை போட்டோ எடுத்திருக்கார். அப்புறம் 2010ல கும்பகோணம் வந்தார்.

கடைல நான் இல்லை. என் போட்டோவைக் காட்டி விசாரிச்சிருக்கார். உடல்நலம் சரியில்லாம நான் வீட்ல இருக்கேன்னு தெரிஞ்சு என்னைப் பார்க்க வந்துட்டார்.  சந்தோஷமா இருந்தது. அப்ப நான் ஆஞ்சியோ ஆபரேஷன் முடிச்சுட்டு ரெஸ்ட்டுல இருந்தேன். பேசிட்டிருந்தோம். அப்ப, ‘ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். நீங்க  நடிக்கணும்’னு சொன்னார். என்னதான் சின்ன வயசுல நான் பார்த்த பையன்னாலும் இப்ப உலகமே அண்ணாந்து பார்க்கிற இயக்குநர். அப்படிப்பட்டவர் என்னைத்  தேடி வந்து கேட்கறார். எப்படி மறுக்க முடியும்? சம்மதிச்சதும், ‘இந்தி த்ரீ இடியட்ஸ்’ படத்தை ரீமேக் பண்றேன்.

அதுல ஜீவாவுக்கு அப்பாவா நடிக்கணும். எப்பனு சொல்றேன்’னு சொல்லிட்டு போயிட்டார். அங்க இங்கனு அலைஞ்சு ‘த்ரீ இடியட்ஸ்’ டிவிடி வாங்கிப்  பார்த்தேன். படுத்த படுக்கையா இருக்கிற கதாபாத்திரம்! ‘நண்பன்’ பூஜை போட்ட கொஞ்ச நாள்ல கூப்பிட்டாங்க. ஒரு மாசம் தங்கி நடிச்சுக் கொடுத்தேன். பத்து  நாட்கள் வரை ஷங்கரை பார்க்கவே முடியலை. பிசியான ஆள் இல்லையா... உதவி இயக்குநரான அட்லீயும், முரளி மனோகரும் கூடவே இருந்து என்  தேவைகளை கவனிச்சுகிட்டாங்க.

படத்துல ஒரு காட்சி வரும். ஆம்புலன்ஸ் வர லேட் ஆகும். வீட்ல இருக்கிற புடவையை எடுத்து என்னை தன்னோட சேர்த்து வைச்சு விஜய் கட்டுவார். பின்னாடி  இலியானாவையும் ஏத்திட்டு ஆஸ்பிடல் போவார். ஒன்பது கஜ புடவைல எங்க ரெண்டு பேரையும் இறுக்கி கட்டினாங்க. நான் விஜய் தம்பியை இறுக்கி  கட்டிப்புடிச்சுகிட்டே 2 நாட்கள் நடிச்சேன்! படம் வெளிவந்ததும் ஒரு மேடைல கார்ட்டூனிஸ்ட் மதன், ‘கும்பகோணத்துல சைக்கிள்ல போய் சுப்பிரமணியத்தோட  தோசையும், காபியும் சாப்பிடுவேன். அப்படிப்பட்டவரை திரைல பார்க்க சந்தோஷமா இருக்கு.

சுப்பிரமணியத்தை நடிக்க வைக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு’னு ஷங்கர்கிட்ட கேட்டார். ‘காபி போட்டு அதை எடுத்துட்டு அவர் வரும்போதெல்லாம்  கேரக்டர் ஆர்டிஸ்ட்டை பார்க்கிறா மாதிரியே இருக்கும். சரியான கதை கிடைக்கிறப்ப அவரை பயன்படுத்திக்கணும்னு நினைசேன். அந்த ஆசை ‘நண்பன்’ல  நிறைவேறிடுச்சு’னு சொன்னார்...’’முகமெல்லாம் மலர பகிர்ந்து கொண்ட சுப்பிரமணியம் ஐயாவிடம், விஜய்யுடன் நடித்த அனுபவத்தைப் பற்றிக்  கேட்டோம்.‘‘ஹீரோயினுக்கு இணையா எனக்கும் விஜய்க்கும் நெருக்கமான காட்சிகள் இருந்துச்சு!

நிறைய பேசுவோம். ‘ஷங்கர் சார் உங்களைப் பத்தி நிறைய சொல்லுவார்’னு விஜய் தம்பி சொன்னார்.  மகிழ்ச்சியா இருந்தது. தம்பி என்னை மறக்கலை.  ‘கத்தி’ பண்ணும்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்கிட்ட என்னைப் பத்தி விஜய் சொல்லியிருக்கார். என் நம்பரைத் தேடிப் பிடிச்சு தொடர்பு கொண்டாங்க.  என்னாலதான் நடிக்க முடியலை. 88 வயசாகுது இல்லையா...’’நிறைவுடன் புன்னகைக்கிறார் சுப்பிரமணியம்.            

படங்கள்: சுந்தர்