சொடக்கு மேல சொடக்கு போடுது கரகாட்டம் டூ சினிமா... ஒரு பாடகரின் பயணம்கிராமத்திலிருந்து சினிமாவுக்கு வந்து சாதனை புரிந்த முதல் தலைமுறை கலைஞர் அந்தோணிதாசன். ‘வண்டியில நெல்லு வரும்...’ என ஆட்டம் போட  வைக்கும் கிராமத்து ஹிட்டாகட்டும், ‘சொடக்கு மேல சொடக்கு போடுது...’ என மெட்ரோ சிட்டி குழந்தைகளும் துள்ளும் மாஸ் ஸாங் ஆகட்டும்,  அத்தனையிலும் அள்ளுகிறார்.

சமீபத்தில் கன்னடத் திரையுலகிலும் இவரது பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஷிவராஜ்குமார் நடித்த ‘டகாரு’ படத்தின்  ஓபனிங் ஸாங் இவர்தான். இப்போது தமிழில் ‘வைரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புரொமோஷன் ஆகியிருக்கிறார் அந்தோணிதாசன். ‘‘தஞ்சாவூர் பக்கம் ரெட்டிபாளையம் கிராமம்தான் பொறந்து வளர்ந்த ஊரு.

அப்பா ஞானமுத்து, நாதஸ்வரக் கலைஞர். அம்மா இந்திரா, கட்டட வேலைக்குப் போற சித்தாள். வருமானத்துக்காக ரெண்டு பேரும் விவசாயக் கூலி வேலைக்கும்  போவாங்க எனக்கு ஒரே அக்கா. நான் படிச்சது வெறும் ஆறாம் வகுப்புதான். எங்க வீட்டு பக்கம் ஒரு சர்ச் இருக்கு. அங்க ஏசப்பா பாடல்கள் பாடுவேன். 

கிறிஸ்துமஸ், ஈஸ்டர் டைம்ல சினிமா பாட்டு வரிகளை மாத்தி ஏசப்பா பாடல்களா பாடிட்டு இருப்பேன். இடைல அப்பா, நாதஸ்வரக் கச்சேரிகளுக்கு போறப்ப  சுருதிப்பெட்டி தாளத்துக்காக நானும் போவேன். இப்படி குடும்பமா உழைச்சாலும் எங்க கஷ்டம் தீரலை. வருமானமும் போதலை.

அப்பா கூட நிகழ்ச்சிகளுக்கு போறப்ப கரகாட்டக்காரங்க அறிமுகம் கிடைச்சது. பத்தாவது வயசுல கரகாட்ட பஃபூன் வேஷம் கட்டினேன். கோமாளியாவே கொஞ்ச  வருஷம் தொழில் ஓடுச்சு. அப்புறம் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி குறவன் வேஷம் போட ஆரம்பிச்சேன்...’’கடகடவென்று பேச ஆரம்பித்த அந்தோணிதாசன்,  நிமிர்ந்து உட்கார்ந்தபடி தன் மனைவி ரீட்டாவைப் பற்றி பேசத் தொடங்கினார்.‘‘கோயில் விழால கரகாட்டம் ஆடறப்பதான் ரீட்டாவை சந்திச்சேன். அவங்க  அப்பா குளத்தூர் கலியபெருமாள், பெரிய ஆட்டக்காரர். அவங்க பரம்பரை ஆட்டக்காரங்க. என்னை மாதிரி பஞ்சத்துக்கு ஆட்டக்காரன் ஆனவங்க இல்ல.

ரீட்டாவை பார்த்ததும் புடிச்சுப் போச்சு. எங்க கல்யாணம் பெரியவங்க முன்னாடி நடந்தது. ஜோடியா திருவிழாக்கள்ல குறவன், குறத்தியா ஆடினோம்.  ரீட்டா என் வாழ்க்கைல வந்தபிறகுதான் ஏற்றமே கிடைச்சது. எனக்காக அவங்க பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்ல...’’ சொல்லும்போதே அந்தோணி தாசனின்  கண்களில் நீர் திரள்கிறது. சமாளித்தபடி ஃப்ளாஷ்பேக்கை தொடர்ந்தார்.  ‘‘தஞ்சாவூர் முழுக்க எங்க குறவன் குறத்தி ஆட்டம் பிரபலம். அடுத்ததா நெல்லை  மாவட்டத்துக்கு வந்தோம். அங்கயும் எங்களுக்கு தனிக்கூட்டம் கூட ஆரம்பிச்சது. எந்த ஊர்ல ஆடப்போறோமோ அங்குள்ள பெரியவங்க, ஊர்த் தலைவர்கள் பத்தி  பாடச் சொல்வாங்க.

இப்படி யோசிச்சு எழுதி, எழுதி சொந்தமா பாட்டு எழுத கத்துக்கிட்டேன். நிறைய பாட்டு ஹிட்டாச்சு. அதையெல்லாம் ‘ஆத்தூர் அஞ்சலையே’ங்கிற பெயர்ல  கேசட்டா போட்டேன். அதுல உள்ள ‘ஓடக்கர ஓரத்திலே...’ பாட்டு என்னை பட்டி தொட்டிக்கு எல்லாம் கொண்டு போச்சு.‘நாக்க முக்க...’ பாடின  சின்னப்பொண்ணு அக்கா, என் ரிலேட்டிவ்தான். தன் கச்சேரிகள்ல எனக்கும் பாட வாய்ப்பு கொடுத்தாங்க...’’ என்று சொல்லும் அந்தோணிதாசனுக்கு மொத்தம்  மூன்று பிள்ளைகள். ‘‘மூத்த மகன் லெனின், விஸ்காம் முடிச்சுட்டு ஒரு டிவி சேனல்ல வேலை பார்க்கறான். அடுத்ததா மக ஜான்சி, பிஈ முடிச்சிருக்கா.  அவளுக்கு கல்யாணமாகிடுச்சு.

சந்தோஷமா இருக்கா. கொழந்தையும் பொறந்திருக்கு. மூணாவதும் மகதான். தெரசா. பத்தாவது படிக்கறா...’’ என்று சொல்லும் அந்தோணிதாசன் சென்னைக்கு  வந்த கதை வித்தியாசமானது. ‘‘2006ல ‘சென்னை சங்கமம்’ல ‘நாக்க முக்க’ சின்னப்பொண்ணு அக்கா என்னை பாட வச்சாங்க. சென்னை சங்கமத்தோட  இசையமைப்பாளர் பால்ஜேக்கப் சார், அங்க டிரம்ஸ் வாசிச்ச தர்புகா சிவா நட்பு கிடைச்சது. சின்னப்பொண்ணு அக்காவும் மாமாவும் கருணாஸ் அண்ணனை எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சாங்க. அப்ப காஸ்மோபாலிட்டன் கிளப்ல அண்ணன் கச்சேரி பண்ணிட்டிருந்தார். அந்த ட்ரூப்ல நானும் ரெண்டு பாட்டு பாடினேன்.

ஊருக்குப் போறப்ப அவர் நம்பரை வாங்கினேன். ஒரு வருஷம் தொடர்ந்து அவருக்கு போன் செஞ்சு ‘சினிமால பாட வாய்ப்புத்தாங்கணே’னு கேட்டு டார்ச்சர்  பண்ணினேன். நான் மட்டுமில்ல... என் புள்ளைங்களையும் ‘எங்க அப்பாவுக்கு உங்க படத்துல பாட சான்ஸ் கொடுங்க அங்கிள்... அவர் தொல்லை தாங்க  முடியலை’னு சொல்ல வைப்பேன்! கருணாஸ் அண்ணன் சிரிச்சுகிட்டே ‘கண்டிப்பா வாய்ப்பு தரேன்’னு சொல்லுவார். அதேமாதிரி ‘திண்டுக்கல் சாரதி’  படத்துல ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு...’ பாட்டுப் பாட சான்ஸ் கொடுத்தார்! அந்தப் பாட்டுல குறவன், குறத்தியா டான்ஸ் ஆடினது நானும் என்  மனைவியும்தான்!

இதுக்கு இடைல சென்னை சங்கமத்துல அறிமுகமான தர்புகா சிவா கூடவும் டச்ல இருந்தேன். ரெண்டு பேரும் சேர்ந்து ‘லா பொங்கல்’ மியூசிக் பேண்ட்  ஆரம்பிச்சு இண்டிபெண்டன்ட் ஸாங்ஸ் பாடினோம். அங்கதான் சந்தோஷ் நாராயணன் சார், பாடகர் பிரதீப், கிடாரிஸ்ட் கெபா ஜெரோமியா, ஷான் ரோல்டன்னு  நிறைய பேரோட நட்பு கிடைச்சது. அப்புறமா ‘அந்தோணி பார்ட்டி’னு தனி ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிச்சேன். நாட்டுப்புற / மேற்கத்திய இசைக்கருவிகளை ஒண்ணா  இணைச்சு நிகழ்ச்சிகள் பண்ணினேன். வெளிநாடுகள்லயும் வரவேற்பு கிடைச்சது...’’ என்று சொல்லும் அந்தோணி தாசன், சினிமாவில் தனக்கான இடத்தைப்  பிடித்தது தனிக்கதை.

‘‘‘திண்டுக்கல் சாரதி’க்கு அப்புறம் பிரேக் கிடைக்கலை. நிறைய பேரு அதை கருணாஸ் அண்ணனே பாடினதா நினைச்சாங்க. ரெண்டு வருஷங்கள் வாய்ப்புகளுக்காக போராடினேன். இந்த நேரத்துல சந்தோஷ் நாராயணன் சார் ‘சூது கவ்வும்’ல ‘காசு பணம் துட்டு மணி மணி...’ பாட்டுல கானா பாலா சாரோட  சேர்ந்து நடிக்க வச்சார். அவரால கார்த்திக் சுப்புராஜ் சார் அறிமுகம் கிடைச்சது. ‘ஜிகர்தண்டா’ல ‘பாண்டிய நாட்டுக் கொடியின் மேலே’ மூலமா  பாடலாசிரியராவும், நடிகராவும் பயணப்பட ஆரம்பிச்சேன். அதே படத்துல ரீட்டாவும் ‘கண்ணம்மா கண்ணம்மா...’ பாடினது கூடுதல் சந்தோஷம்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல சிவகார்த்திகேயன் சாரோட சேர்ந்து ‘ஊர காக்கும்...’ பாடலை பாடினேன். மறுபடியும் சிவா சார் படம், ‘காக்கிச் சட்டை’ கிடைச்சது. அனிருத் சார் இசைல ‘கட்டிக்கிட்டா...’ செம ஹிட். போதாதா? சினிமால பிசியானேன். சின்னப்படம், பெரிய படம்... தெலுங்கு,  மலையாளம், கன்னடம்னு இதுவரை 110 பாடல்கள் பாடியிருக்கேன். ‘ஜிகர்தண்டா’வுக்குப் பிறகு ‘தாரை தப்பட்டை’ல நடிச்சேன். இப்ப பாபி சிம்ஹாவோட  ‘வல்லவனுக்கு வல்லவன்’ல நடிச்சிருக்கேன். ஷூட்டிங் சமயத்துல அப்பப்ப மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட் வாசிப்பேன்.

இதைப் பார்த்த டைரக்டர் விஜய் தேசிங்கு சார், அவரோட அடுத்த படமான ‘வைரி’க்கு என்னையே மியூசிக் போட சொல்லியிருக்கார்! இதுல நானும், என்  மனைவி ரீட்டாவும் சேர்ந்து நடிச்சிருக்கோம். பாடல்களை சோனி நிறுவனம் வாங்கினதுல ரொம்பவே சந்தோஷம். ஏன்னா சோனிக்காக 25 இண்டிபெண்டன்ட்  ஸாங்ஸ் பாடறேன். அதோட ரெக்கார்டிங் ஒர்க் நடந்துட்டிருக்கு...’’ என்ற அந்தோணி தாசன், இப்போது கன்னடத்திலும் பிசி. ‘‘தெலுங்கு, மலையாளம்,  கன்னடம்னு எல்லாத்துலயும் தமிழ்ல எழுதித்தான் பாடறேன். ‘சொடக்கு மேல...’ பாட்டைக் கேட்டு நண்பர் மதன் மூலமா ‘டகரு’ வாய்ப்பு வந்தது.

‘டகரு’ ஹிட்டுக்குப் பிறகு அங்க நாலு பாட்டு பாடிட்டேன்!’’ என்று சொல்லும் அந்தோணிதாசன், தான் இசையமைக்கும் ‘வைரி’யில் இரு கிராமியக்  கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறார். ‘‘கரகாட்ட ஆட்டக்காரனா இருந்தப்ப நிறைய பேருக்கு தொழில் கத்துக் கொடுத்தேன். மியூசிக் ஆல்பம் பண்றப்பவும்  நிறைய பேரை உருவாக்கினேன். பல பேரோட முதல் கேசட்டுக்கு மியூசிக் போட்டிருக்கேன். இதெல்லாம் பெருமை இல்ல. கடமை! நம்ம பாரம்பரிய கலைகளும்,  கலைஞர்களும் நல்ல நிலைக்கு வர என்னாலான முயற்சியைத் தொடர்வேன்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் அந்தோணிதாசன்.

- மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்