காட்ஃபாதர் போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 48

என்னதான் மக்கள், நம்ம காட்ஃபாதருக்கு விசுவாசமாக இருந்தாலும்... போலீசிலும், இராணுவத்திலும் பாப்லோவின் உளவாளிகள் இருந்தாலும்... அவ்வப்போது  அவருடைய மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்கள் தடாலடியாக கைது செய்யப்படுவது நடந்துகொண்டுதான் இருந்தது. பாப்லோவின் நெருங்கிய நண்பர்கள்  பலரும் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்கதை ஆகிக் கொண்டிருந்தது. அம்மாதிரி கைதானவர்களிடம் அமெரிக்க போலீஸ், டீலிங்  பேசும். “இதோ பார். உன்னை கோர்ட்டுக்கு கொண்டு போனா ஆயுசுக்கும் வெளியே வராத மாதிரி சிறைத்தண்டனை கொடுப்பாங்க.

ஆனா, எங்களுக்கு கொஞ்சம் ஒத்துழைச்சி பாப்லோவை சிறை பிடிக்க உதவுனேன்னு வெச்சுக்கோ, சுதந்திரப் பறவையா உலகத்துலே எங்கே வேணும்னாலும்  போகலாம். கணிசமா காசும் தருவோம்...”ஒருவர் கூட இந்த டீலிங்குக்கு ஒத்துவரவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு தர ஒப்புக்கொண்டதாக தகவல் தெரிந்தால் போதும். உலகின் எந்த மூலையில் போய் பதுங்கி இருந்தாலும் தேடி வந்து சுடுவார்  பாப்லோ. மற்றொரு காரணம், பாப்லோவின் மீது இருந்த அளவுகடந்த பக்தி.

கொலம்பியர்கள் பலருக்கும் பாப்லோ, அந்த காலக்கட்டத்தில் கடவுளுக்கு நிகராக இருந்தார். அதனால்தான் அவருடைய நண்பர்கள், பணியாளர்கள், அவரால் பயன் பெற்றவர்கள் அத்தனை பேருமே அவர் மீதான விசுவாசத்தில் நேர்மையாக இருந்தார்கள். அமெரிக்க அதிகாரிகளுக்கு ஆரம்பத்தில் இந்த விசுவாசம், ஆச்சரியமாக  இருந்தது. அமெரிக்க அதிகாரத் தரப்பைப் பொறுத்தவரை பணத்தைக் கொடுத்தால் உலகில் யாரையும் விலைக்கு வாங்கிவிடலாம். அல்லது உயிர் பயத்தைக்  காட்டினால் எதையும் சாதித்துவிடலாம். இவை இரண்டும்தான் அவர்களது ஏகாதிபத்தியத்தைத் தாங்கும் கோட்பாடுகள்.

இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் அடங்காத கொலம்பியர்கள், அவர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். கூடவே ஆத்திரமூட்டினார்கள். கொலம்பிய அரசுக்கு  தொடர்ச்சியாக அச்சுறுத்தல், கொலம்பிய போலீஸ் மற்றும் ராணுவத்தில் தங்கள் சிஐஏ ஆட்களை ஊடுருவச் செய்தது போன்ற நடவடிக்கைகளால் பாப்லோவை  மிகச் சுலபமாக முடித்துவிடலாம் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். அவர்களது வேட்டையில் அவ்வப்போது கெண்டை மீன்கள்தான் மாட்டினவே தவிர,  பாப்லோ போன்ற சுறாக்களும், திமிங்கலங்களும் தொடர்ந்து தப்பித்துக் கொண்டிருந்தன.

கார்டெல் ஆட்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து மடக்க போலீஸ் ஒரு புராதனமான வழிமுறையைக் கையாண்டு வந்தது. இப்படிப்பட்ட வழிமுறையை  போலீஸ் யோசிக்கும் என்றே கார்டெல் ஆட்களுக்கு யோசனை வராத அளவுக்கு மிகவும் பழமையான டெக்னிக் அது. அதாவது கார்டெல் விஐபிகள் யாராவது ஒரு  விழாவுக்கோ, பார்ட்டிக்கோ அல்லது சந்திப்புக்கோ செல்வதென்றால் அவர்களுடனேயே பத்து இருபது பாடிகார்டுகள் செல்வார்கள். ஒவ்வொரு விஐபியின்  வாகனத்துக்குமே இதுபோன்ற எஸ்கார்ட்டுகளின் பாதுகாப்பு உண்டு. சம்பந்தப்பட்ட விஐபி சந்திப்பில் இருக்கும் நேரத்தில், அந்த இடத்தைச் சுற்றி இந்த  பாதுகாவலர்கள் பரவலாக நின்று கொள்வார்கள்.

அந்தப் பக்கமாக போகிற வருகிறவர்களை அச்சுறுத்தலான பார்வையால் ஊடுருவுவார்கள். யார் மீதாவது சந்தேகம் எழுந்தால், சட்டென்று இழுத்துப் பிடித்து ஒரு  அறைவிட்டு விசாரிப்பார்கள். இம்மாதிரி அல்லக்கைகள் நடமாட்டம் நகரில் எங்கெங்கு நடக்கிறது என்பதைக் கண்காணிக்க போலீஸ் ஒரு குழு அமைத்திருந்தது.  இந்தக் குழுவைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் மஃப்டி உடையில் நகர் முழுக்க ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். எங்காவது திடீர் பரபரப்பு ஏற்பட்டால்  தலைமையகத்துக்கு தகவல் சொல்வார்கள். உடனே போலீஸின் ஒரு பெரும் படை கிளம்பி வந்து அந்தப் பகுதியைச் சுற்றி வளைக்கும்.

குறிப்பிட்ட விஐபி, போதைக் கடத்தல் கார்டெல்லைச் சேர்ந்தவர் என்றால் உடனே கைது செய்யப்படுவார். அடுத்த விமானத்திலேயே அமெரிக்காவுக்கு  விசாரணைக்கு அனுப்பப்படுவார். இப்படித்தான் தன்னுடைய சகாக்கள் பலரையும் பாப்லோ இழந்திருந்தார். பொதுவாக பாப்லோ, இந்தக் காலக்கட்டத்தில் நிறைய  ரகசியச் சந்திப்புகளைத்தான் மேற்கொண்டு வந்தார். முடிந்தவரையில் பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாகத்தான் திக்விஜயம் செய்து கொண்டிருந்தார்.  எனவேதான் அதுநாள் வரையில் அவரை கொலம்பிய போலீஸால் நெருங்க முடியவில்லை.

இந்த அதிரடி கைதுகளை தவிர்க்க பாப்லோ  ஒரு ‘கவர்ச்சியான’ வழிமுறையை உருவாக்கினார். இன்றுவரை உலகளவில் பல டான்களும், தாதாக்களும் இந்தப் பாதுகாப்பு முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.அதாவது ஐரோப்பாவில் பாலியல் தொழில் செய்து வந்த அழகிகள், மாடலிங் தொழிலில் ஈடுபட்டு  அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காமல் வறுமையில் வாடிக் கொண்டிருந்தவர்கள் போன்றோர் கொலம்பியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு  கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட சண்டைப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. நவீனரக துப்பாக்கிகளைக் கையாளுவதற்கும் கற்றுத் தந்தார்கள்.

ஒவ்வொரு அழகியும் தயாரான பின்பு விஐபிக்களின் பாதுகாவலர்களாக பணிக்கு அமர்த்தப்படுவார்கள். கவர்ச்சியான உடையில் முழு மேக்கப்போடு ஹோட்டல்  மற்றும் விழாக்களில் இதுபோன்ற அழகிகள் வலம் வந்ததை எந்த போலீஸ்காரனாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க இயலவில்லை. இவர்களின் பாதுகாப்போடு வந்த விஐபி, தான் வந்த சுவடு தெரியாமலேயே வந்த வேலையை முடித்துக் கொண்டு கமுக்கமாக திரும்ப முடிந்தது. இந்த புதிய செக்யூரிட்டி முறையை  பாப்லோ அறிமுகப்படுத்திய பிறகு, கொலம்பியாவில் மட்டுமின்றி தென்னமெரிக்கா முழுமைக்குமே அழகிகள் தேவை அதிகரித்தது.

ஐரோப்பாவில் மாடலிங் துறையில் ரிட்டையர்டு ஆன அழகிகள் பலரும் தென்னமெரிக்காவுக்கு படையெடுத்தார்கள். இவர்களுக்கு கணிசமான சம்பளம்  கிடைத்ததோடு, சமூகத்தில் நல்ல மரியாதையும் ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில்தான் கொலம்பிய போதை உலகம் அழகிகளால் நிரம்பத் தொடங்கியது.  சரக்குகளைக் கைமாற்றுவதற்கும் அழகிகள் உதவினார்கள். மேல்மட்ட அதிகாரிகள் பலருடனும் இந்த அழகிகள் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு கார்டெல்களின் பணிகளைச் சிக்கலின்றி செய்துக்கொள்ள உதவத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இந்த அழகிகளின் வருகை ஏற்பட்டபோது, பாப்லோ எஸ்கோபார் பலவிதமான  கட்டுப்பாடுகளைத் தன்னுடைய ஆட்களுக்கு விதித்திருந்தார்.

தம்முடைய பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அழகிகளோடு கார்டெல் ஆட்கள் வேறு ‘எந்தவிதமான’ சில்மிஷமும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில்  கண்டிப்பாக இருந்தார். ஏனெனில், போலீஸ் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக உருவான இந்த புதிய ‘அழகிகள் செக்யூரிட்டி சர்வீஸ்’ முறையே, ஒரு  கட்டத்தில் கார்டெல்களின் பலவீனமாக மாறிவிடக்கூடிய ஆபத்து இருந்ததையும் அவர் யூகித்திருந்தார். பாப்லோ எஸ்கோபார், முற்றிலும் உணர்ந்த ஞானி. அவர்  எதிர்பார்த்ததைப் போலவே அவரது காலத்துக்குப் பின்னர் போதை கார்டெல்களுக்குள் சிஐஏ அனுப்பிவைத்த அமெரிக்க மாடலிங் அழகிகள் பலரும் நுழைந்தார்கள்.  முக்கிய புள்ளிகள் பலரையும் தம் வசப்படுத்தி, முக்கியமான நேரத்தில் போட்டும் தள்ளினார்கள்.

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்