அரசு உதவியில்லாமல் அரசுப் பள்ளிகளைக் காக்கும் ஆசிரியர்கள்!‘‘நாம நினைச்சா அரசுப் பள்ளிகளை உலகத் தரத்துக்குக் கொண்டு போகலாம். இப்போதுள்ள கல்விச் சூழலை தலைகீழா புரட்டிப்போட்டு மேம்படுத்தலாம். பிறகு  தமிழ்நாடும் பின்லாந்து போல கல்வியில மிளிரும். இதுக்கு அரசின் நேரடி உதவிகூட தேவைப்படாது...’’ நம்பிக்கை ததும்ப படபடவென பேச ஆரம்பித்தார்  ஆசிரியர் இராஜசேகரன். தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளை வசதிப்படுத்தி, ஓவியங்களால் அலங்கரித்து, கற்கும் சூழலை அழகாக்கும் பொருட்டு பல பணிகளைத்  தீவிரமாகச் செய்துவருகிறது ‘அரசுப் பள்ளிகளைக் காப்போம்’ என்கிற இயக்கம். இதன் ஒருங்கிணைப்பாளர் இவர்.

‘‘ஒவ்வொரு பெற்றோரும், ‘குழந்தைகளின் எதிர்காலம் நல்லாயிருக்கணும்’ என்கிற எண்ணத்துலதான் ப்ரைவேட் ஸ்கூல்ல சேர்க்கறாங்க. கடன உடன  வாங்கி, லட்ச லட்சமா பீஸ் கட்டறாங்க. ஆனா, எந்த செலவும் இல்லாம ப்ரைவேட் ஸ்கூலை விட சிறப்பான கல்வியை, சூழலை அரசுப் பள்ளிகளாலும் கொடுக்க  முடியும். இதுக்கான முன்மாதிரியை உருவாக்கும் நோக்கில்தான் நாங்க செயல்படறோம்...’’ சிந்தனையைத் தூண்டுகிற ஆசிரியர், ‘அரசுப் பள்ளிகளைக்  காப்போம்’ உருவான கதையையும், அதன் மூலம் இப்போது செய்துகொண்டிருக்கும் பணிகளையும் விவரித்தார்.

‘‘தேனி மாவட்டம், கே.கே.பட்டில உள்ள ஓர் அரசுப் பள்ளிக்கு நண்பர்களுடன் விசிட் அடித்தேன். நாங்க போனப்ப நல்ல மழை. அந்த ஸ்கூலோட மைதானம்,  வகுப்பறைகளுக்கு முன்னாடி இருக்குற காலி இடங்கள் எல்லாத்துலயும் முழங்கால் வரைக்கும் மழைத் தண்ணி தேங்கியிருந்துச்சு. வகுப்பறையைவிட்டு  யாராலும் வெளியில வர முடியல. அங்க ஆசிரியரா இருக்குற நண்பர் ஒருவர் மாணவர்களோட இணைஞ்சு மழைத் தண்ணியை அப்புறப்படுத்திட்டு இருந்தார். பள்ளிக் கட்டடங்களும் இடிஞ்சு போற மாதிரி மோசமா இருந்துச்சு.

இந்தப் பள்ளி மட்டுமல்ல, பெரும்பாலான அரசுப் பள்ளிகளோட நிலைமை இதுதான். இதைப் பத்தி கவலைப்படறதால எதுவும் மாறிடப் போறதில்ல. அதே  நேரத்துல இதை இப்படியே விட்டுட்டு நம்ம வேலையை மட்டும் பார்த்துட்டு போறதுல எந்த அர்த்தமும் இல்ல. ஏதாவது பண்ணணும்னு மனசு துடிச்சிட்டே  இருந்துச்சு. என்னை மாதிரியே நண்பர்களும் ஃபீல் பண்ணுனாங்க. மழைத் தண்ணியை அப்புறப்படுத்திட்டே இதைப்பத்தி பேசினோம். அப்ப உருவானது தான்  ‘அரசுப் பள்ளிகளைக் காப்போம்’ கான்செப்ட்.

ரொம்பவும் நலிவடைஞ்சு, மூடப்படும் நிலைல இருக்குற அரசுப் பள்ளிகளைப் புதுப்பிக்கறதுனு முடிவு செஞ்சோம். அதுக்கான செலவை ஆரம்பத்துல நாமே  ஏத்துக்கலாம்னு ஒரு மனசா தீர்மானிச்சோம். இப்ப எங்களுடன் 25 ஆசிரியர்களும், நண்பர்களும், பொதுமக்களும் இணைஞ்சிருக்காங்க. மட்டுமல்ல, பாண்டி,  முருகன், சித்தேந்திரன், சந்துரு, சசினு பல ஓவியர்கள் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காம எங்களோடு செயல்படறாங்க...’’மெலிதான குரலில் பேசிய  இராஜசேகரன் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார்.

‘அரசுப் பள்ளிகளைக் காப்போம்’ இயக்கத்தின் சார்பாக தேனி, திருப்பூர், விழுப்புரம் பகுதிகளில் உள்ள ஏழு பள்ளிகளை இதுவரை புதுப்பித்திருக்கிறார்கள்.  இப்போது அந்தப் பள்ளிகள் புதுப்பொலிவுடன் காண்போரை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கின்றன. மாணவர்களின் சேர்க்கையையும் அதிகரித்திருக்கிறது.‘‘எந்தப்  பள்ளிக்குப் போனாலும் முதல்ல அங்கிருக்கிற கழிப்பிடங்கள் மற்றும் தண்ணி வசதி சரியா இருக்கானுதான் சோதிப்போம். திருப்தியா இல்லைன்னா உடனே  அதை சரி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

பிறகு பில்டிங்குகளை செக் பண்ணுவோம். மோசமான நிலைல, பயன்படுத்தாம இருக்குற வகுப்பறைகளுக்கு முன்னுரிமை தந்து அதை புனரமைப்போம்.  சுவர்களில் குழந்தைகளை ஈர்க்கும் விதமா ஓவியங்களைத் தீட்டுவோம். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஓர் இடமா பள்ளியை மாற்ற என்னென்ன  வேலைகள் இருக்கிறதோ அதையெல்லாம் படிப்படியா செய்வோம். பள்ளிகளோட தேவைகளைப் பொறுத்து செலவு முன்ன பின்ன ஆகும். 40 ஆயிரத்துல முடிஞ்ச  பள்ளிகளும் இருக்கு. ஒன்றரை லட்சம் வரைக்கும் செலவு வச்ச பள்ளிகளும் இருக்கு.

எங்க பணியைத் தொடர்ந்து செய்யணும்னா நிதி தேவை. அதனால இப்ப மூணு விதமா ஃபண்ட் கலெக்ட் பண்றோம். முதல்ல நாங்க புதுப்பிக்கப் போகும்  பள்ளியின் ஆசிரியர்கள்கிட்ட பேசுவோம். ‘உங்களால எவ்வளவு கொடுக்க முடியும்...’னு நேரடியா கேட்போம். இவ்வளவு கொடுக்கணும்னு கட்டாயம் எல்லாம்  இல்ல. அவங்க கொடுக்கறதை வாங்கிப்போம். அப்புறம் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளி இருக்கும் ஊர்ல வசிக்கும் மக்களிடம் கேட்போம்.  கடைசில எங்க குழு உறுப்பினர்களும் ஒரு தொகையைப் பகிர்ந்துப்போம்.

பெரும்பாலும் பணமா வாங்கறதில்ல. பெயின்ட், சிமெண்ட், டாய்லெட்டுக்கான கோப்பைனு பொருளாத்தான் வாங்கறோம். இப்ப ஃபேஸ்புக் வழியா பலரும்  தொடர்புகொண்டு உதவ முன்வர்றாங்க. குழுவுல இருக்குற எல்லோருமே வேலைல இருக்கிறதால விடுமுறை நாட்கள்ல இந்தப் பணியை செய்றோம். குறிப்பா  தேர்வுகால விடுமுறை நாட்களைத்தான் அதிகமா பயன்படுத்துறோம்...’’ என்கிறவர் தங்களுக்குக் கிடைத்த வரவேற்புகளைப் பற்றியும் சொன்னார். ‘‘சமீபத்துல கோனேரிக்குப்பத்துல உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறைச் சுவர்கள்ல ஓவியங்களைத் தீட்டினோம்.

குழந்தைகள் அந்த ஓவியங்களைப் போய் கட்டிப்பிடிக்கறாங்க. வகுப்பறையே குதூகலமா மாறியிருக்கு. மட்டுமல்ல, எங்களோட குடும்பத்துல உள்ளவங்களையும் நாங்க போற பள்ளிகளுக்கு கூட்டிட்டுப் போறோம். இதன் மூலமா எங்க குழந்தைகளுக்கும் நாங்க செய்ற விஷயத்தை கடத்தறோம்...’’  என்கிறவர் வருங்காலத் திட்டத்தையும் பகிர்ந்தார்.‘‘மே மாசத்துல அஞ்சு பள்ளிகளைப் புதுப்பிக்கப் போறோம். மாவட்டம்தோறும் ஒரு கிளையைத் தொடங்கி  அங்கிருக்கிற ஆசிரியர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்றோம்.

திருப்பூர்ல ஒரு குழு தொடங்கிட்டோம். இது பரந்துபட்டதா இருக்கணும். அப்பதான் இந்த முயற்சி முழுமை பெறும். அதேமாதிரி வண்ணமயமான, அழகான பள்ளிச்  சூழல் குழந்தைகளைக் குதூகலப்படுத்தினாலும், கற்றல் முறைலயும் புதுமை செய்யணும். அதுக்கான பயிற்சிகள், ஓவிய வகுப்புகள், கதைகள், விளையாட்டுனு  மாற்றுக் கல்விக்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்...’’ என்கிறார் இராஜசேகரன்.      

- த.சக்திவேல்