மனைவிக்காக வேலையை ராஜினாமா செய்த கணவர்! கணவருக்காக ஆங்கில நூல்களை எழுதும் மனைவி!- ப்ரியா

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில்தான் அந்தக் காரியத்தை வித்யா பவானி, சுரேஷ்  தம்பதியர் செய்தார்கள். ஆம். கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நல்ல வேலையை இருவரும் ராஜினாமா செய்துவிட்டு கடந்த 16 வருடங்களாக  ‘ஸ்கந்தா பதிப்பகம்’ நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பரதம், கர்நாடக சங்கீதம் என நடனம் சார்ந்த அனைத்து நூல்களையும் ஆங்கிலத்தில் வெளியிட்டு  வருகிறார்கள். சுரேஷ், வழக்கறிஞர். எழுத்து மேல் தீராத ஆர்வம். போதாதா? ஆங்கில நாளிதழில் வேலைக்குச் சேர்ந்து பத்திரிகையாளராக இருந்தார்.

வித்யா, 12 வருடங்கள் பரதம் பயின்றவர். 16வது வயதில் அரங்கேற்றம் செய்தவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இது இருவரது பழைய டேட்டா.  இதிலிருந்து எப்படி இன்றைய நிலைக்கு வளர்ந்தார்கள்? புன்னகையுடன் பேச ஆரம்பித்தார் வித்யா பவானி.‘‘நடன நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தறப்பதான்  ஒரு விஷயம் புரிஞ்சுது. பரதக்கலை தெரிஞ்சு வர்றவங்க கொஞ்ச பேர்தான். மீதிப் பேர் விவரம் தெரியாமதான் நிகழ்ச்சிக்கு வர்றாங்க. அதனாலயே ஒவ்வொரு  நிகழ்ச்சி செய்யறப்பவும் தொடக்கத்துல இன்ட்ரோ கொடுக்கறேன்.

நடனம் வழியா அந்த நிகழ்ச்சில நான் என்ன செய்யப் போறேன் / சொல்லப் போறேன்னு ஆடியன்ஸுக்கு தெளிவுபடுத்தறேன். ஆனா, இது மட்டுமே போதாது  இல்லையா? மக்கள் மத்திலயும் நடனம் பத்தின விழிப்புணர்வு ஏற்படணும் இல்லையா? அதுக்காகவே ‘அப்ரிஷியேட்டிங் பரதநாட்டியம்’ என்ற தலைப்புல  செமினார்ஸ் நடத்த ஆரம்பிச்சேன்...’’ என்றவர் திருமணத்துக்குப் பிறகே புத்தகம் எழுத ஆரம்பித்திருக்கிறார். ‘‘ஒரு பக்கம் வேலை, இன்னொரு பக்கம் நடன  நிகழ்ச்சி, செமினார்ஸ்னு என்னை முழுமையா ஈடுபடுத்திட்டு இருந்தேன். அப்பதான் சுரேஷோடு திருமணம் நடந்தது. பெற்றோர்களால நிச்சயிக்கப்பட்ட  கல்யாணம்.

ரியலி நான் கொடுத்து வைச்சவ. கணவருக்கு பரதம் பத்தி தெரிஞ்சிருக்கணுமேனு நினைச்சேன். சுரேஷ் அதுல எக்ஸ்பர்ட். ஒருமுறை செமினாருக்கு வந்தவர்,  நான் பேசறதையும், மக்கள் கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல்றதையும் பார்த்தார். செமினார் முடிஞ்சதும், ‘பேசறதையே புத்தகமா எழுது’னு சொன்னார்.  நூல் எழுதற அளவுக்கு நமக்கு திறமை இருக்கானு சந்தேகப்பட்டேன். அவர்தான் உற்சாகப்படுத்தி, ‘உன்னால முடியும்’னு எழுத வைச்சார். பத்திரிகைத் துறைல  அவர் இருக்கறதால நிறைய டிப்ஸ் கொடுத்தார். ‘அப்ரிஷியேட்டிங் பரதநாட்டியம்’ இப்படித்தான் முதல் நூலா உருவாச்சு.

இதுக்காகவே ‘ஸ்கந்தா பதிப்பகத்தை’ ஆரம்பிச்சோம்...’’ என்ற பவானி, இதன் பிறகே வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். ‘‘முதல் புத்தகத்துக்கு நல்ல  வரவேற்பு. தொடர்ந்து எழுதுனு சொன்னார். எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. ரெண்டு பேரும் 2000ல ஒரே நேரத்துல எங்க வேலையை ராஜினாமா செஞ்சோம். மாதச் சம்பளத்துல பழகினவங்க இல்லையா... ஆரம்பத்துல கொஞ்சம் சிரமப்பட்டோம். ஆனா, ரெண்டு பேருமே இலக்குல தெளிவா இருந்ததால கஷ்டங்களை  பெருசா நினைக்கலை. ஒவ்வொரு புத்தகம் எழுதறதுக்கு முன்னாடியும் நிறைய பயணம் செய்வோம்.

டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுவோம். ஒடிசி நடனத்துல தலைக்கு சிறப்பு அலங்காரம் செய்வாங்க. வெள்ளை நிற பூக்கள்ல கோபுரம் மாதிரி அமைப்பு. இதை செய்யறவங்களை சந்திக்கறதுக்காகவே பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு போனோம். அங்கதான் விசேஷமா இதை செய்யறாங்க. அதேமாதிரி கதகளிக்காக  கேரளா முழுக்க ரெண்டு மாசம் பயணம் செய்தோம். கலைஞர்களை நேர்ல சந்திச்சு பேசினோம். இதுக்குப் பிறகுதான் ‘கதகளி மற்றும் குச்சுப்புடி’ புத்தகத்தை  எழுதினேன். பரதநாட்டியத்துல அணியற நகைகள் முக்கியம். இதை டெம்பிள் நகைகள்னு சொல்வாங்க. நாகர்கோவில், வடசேரில இதை குடிசைத் தொழிலா  செய்யறாங்க.

அவங்களை நேர்ல பார்த்துப் பேசி என் நூல்ல பதிவு பண்ணினேன். ஆக்சுவலா நாட்டியம் பத்தி பேசறது ஈசி. ஆனா, எழுதறது கஷ்டம். சின்ன பிழை கூட ஏற்படக்  கூடாது...’’ என்று சொல்லும் பவானி, இசைக்கும் கணக்குக்கும் இருக்கும் தொடர்பு குறித்தும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். ‘‘கர்நாடக இசை, நாட்டியம்  எல்லாமே தாளம், ஜதிகளைக் கணக்கிட்டுத்தான் பாடப்படுது / ஆடப்படுது. சப்தஸ்வரங்களான ச, ரி, க, ம, ப, த, நி... எப்படி உருவாச்சு... இதுல இருந்து 175  தாளங்கள் எப்படி பிறந்ததுனு ‘மேத்ஸ் இன் மியூசிக் அண்ட் டான்ஸ்’ நூல்ல விவரிச்சிருக்கேன். வருடத்துக்கு ஒரு நூல், அப்புறம் என் நடன நிகழ்ச்சினு எங்க  வேலையை அமைச்சிருக்கோம்.

ரெண்டு பேருக்குமே மாத சம்பளம் இல்லாததுனால முதல் இரண்டு வருஷங்கள் சிரமப்பட்டோம். ஆனா, நம்பிக்கையோட எங்க பதிப்பகத்தை, நாங்க வெளியிடற  இசை சார்ந்த நூல்களைப் பத்தி மக்கள் மனசுல பதிய வைச்சோம். இந்த நேரத்துல நான் இரண்டாவது முறை கருவுற்றேன். டாக்டர் செக் பண்ணிட்டு  டுவின்ஸ்னு சொன்னார். கொஞ்சம் பயமா இருந்தது. ஏற்கனவே ஒரு குழந்தை. இப்ப டுவின்ஸ். மொத்தம் மூணு குழந்தைகள். வருமானம் கிடையாது. சமாளிக்க  முடியுமானு கேள்வி எழுந்தது. ஒரு நொடிதான். அப்புறம் ரெண்டு பேருமே, நோ ப்ராப்ளம்... போராடலாம்னு முடிவு செஞ்சோம்.

எங்க பயணப்பட்டாலும் குழந்தைகளோடதான் போவோம். புத்தகங்களை மார்க்கெட் பண்ணும்போதும் அவங்க கூடவே இருப்பாங்க. தமிழக ஆளுநர்களும், கேரளா,  பாண்டிச்சேரி, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரா, கோவா முதல்வர்களும் எங்க நூல்களை வெளியிட்டிருக்காங்க. நாங்க செஞ்ச முக்கியமான விஷயம், எங்க  பணிகள்ல எங்க குழந்தைகளையும் ஈடுபடுத்தினதுதான். அதனாலதான் அப்துல் கலாமை சந்திச்சப்ப அவர் குழந்தைகளை வாரி அணைச்சுக்கிட்டார்.

‘உங்க வளர்ச்சிக்கு குழந்தைங்க தடையா இருப்பாங்க’னு யார் யாரெல்லாம் சொன்னாங்களோ அவங்க எல்லாரும் இப்ப ‘உங்க குழந்தைங்க இல்லைனா நீங்க  இந்தளவுக்கு வந்திருக்க மாட்டீங்க’னு சொல்றாங்க! பெரியவ, மஹிதா சிஏ பண்றா. ஹர்ஷிதா, நிபுன் ரெண்டு பேரும் டென்த் படிக்கறாங்க. இந்த வருஷம் ‘50  எவர்கிரீன் ராகாஸ் ஆஃப் கர்நாடிக் மியூசிக்’ புக்கை வெளியிட்டிருக்கோம். அடுத்த வருஷம் கதக் பத்தி எழுதற ஐடியா இருக்கு...’’ என்கிறார் வித்யா பவானி  சுரேஷ்.
 
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்