கட்டுப்பாடு



செய்தி: பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதியில் ஆண்டுக்கு இருமுறை தரிசன கட்டுப்பாடு. இதுபோல் நம் அன்றாட வாழ்வில் மூக்கை நுழைத்து வேறு  எது எதற்கெல்லாம் அரசியல்வாதிகள் கட்டுப்பாடு விதிப்பார்கள்? எவை எவை ஒர்க் அவுட் ஆகும்? ரூம் போட்டு யோசித்ததில் இருந்து..!  

தியான கட்டுப்பாடு
குடும்ப மற்றும் கட்சி விரிசல்களை குறைக்க, வீட்டிலும், நாட்டிலும் எவரும் வருடத்துக்கு ஒரு முறைக்கு மேல் தியானம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் வரலாம்.  இதனால் மவுன விரதம் அதிகரிக்கும். சைகை மூலம் உரையாடுவது ஃபேஷனாகும். மவுன விரத ட்யூஷன் சென்டர்கள் எல்லா இடங்களிலும் முளைக்கும். தியானம் செய்து செய்து மனம் பக்குவப்படும். எவ்வளவு வரிகள் விதித்தாலும் மக்கள்  ஜென் நிலையில் இருப்பார்கள்!

‘பல்’நோக்கு கட்டுப்பாடு
தண்ணீர் செலவைக் குறைக்க, குடிமக்கள் அனைவரும் வாரம் ஒரு முறைதான் பல் துலக்க வேண்டும்! இந்தக் கட்டுப்பாட்டுக்குப் பின் பல் வியாதிகள்  அதிகரிக்கும். பல் டாக்டர்களை நோக்கி படையெடுக்கும் சூழல் உருவாகும். ஒருவரோடு ஒருவர் பேசும்போது துர்நாற்றம் வீசும் என்பதால் பேச்சு குறையும்  அல்லது தள்ளி நின்று உரையாடும் சூழல் உருவாகும்!

இதனால் சாலையில், டீக் கடையில், தண்ணீர் லாரி முன்பு சண்டை சச்சரவுகள் குறையும். டென்டல் படிப்புக்கான டொனேஷன், ஃபீஸ் அதிகரிக்கும். பல் துலக்க  வரி விதிக்கப்படும். ஜிஎஸ்டி தனி! சிகரமாக ஆதார் எண்ணுடன், பற்களின் புகைப்படமும் இணைக்க வேண்டி வரும்!

சீரியல் கட்டுப்பாடு
தாய்க் குலங்களின் இதயம் வேகமாக பலவீனமடைய முக்கிய காரணம் அவர்கள் கண்ணீர் சிந்துவதுதான் என ஏதேனும் ஒரு சர்வே மூலம் கண்டறிந்து இதற்கு  நிவாரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு சீரியல் மட்டுமே பார்க்கலாம் என கட்டுப்பாடு விதிக்கப்படலாம்! இதனால் தாய்க் குலங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.  பொழுதுபோக கணவருடன் முன்னிலும் அதிகமாக சண்டையிட்டு தெறிக்க விடுவார்கள். சண்டையிடுவதற்காகவே கணவரை சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லி  கொஞ்சுவார்கள்!

பீதியடையும் கணவர்கள் வீட்டுக்கு வருவதையே தவிர்க்கலாம். குடும்பத் தகராறுகள் நீதிமன்றம் செல்லலாம். குடும்ப வழக்குகள் மலை போல் தேங்கலாம்.
இதனால் நீதிபதிகள் மிரட்சியடைந்து ‘இனி தினமும் எல்லா சீரியல்களையும் எல்லா தாய்க் குலங்களும் பார்க்க வேண்டும்; அரசியல்வாதிகள் இதை  கட்டுப்படுத்தக் கூடாது...’ என தீர்ப்பு எழுதலாம்! இதன் மூலம், சீரியலுக்கு கட்டுப்பாடு விதிக்கவே முடியாது என்பதை அரசியல்வாதிகள் உணரலாம்!

சினிமா கட்டுப்பாடு    
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே ஒவ்வொருவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம் என்ற கட்டுப்பாடு வரலாம். இதன் மூலம் திரையுலகை மேலும்  அரசியல்வாதிகள் பழி வாங்கலாம். பேச்சு வார்த்தைக்குப் பின் ஆறு மாதங்களுக்கு இரு படங்கள் என தளர்த்தப்படலாம்! ஆனால், ஒவ்வொரு முறை  திரையரங்கில் டிக்கெட் வாங்கும்போதும் ஆன்லைனில் புக் செய்யும்போதும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டி வரும்!

படத் தயாரிப்புகள் குறையும். நடிக்க வாய்ப்பின்றி தவிக்கும் நடிகர்கள் அரசியலில் குதித்து அரசியல்வாதிகளை பழிக்குப் பழி வாங்க முற்படுவார்கள் அல்லது  செல்ஃபோனில் மோனோ ஆக்டிங் செய்து, வீடியோவில் பதிவேற்றி சுற்றுக்கு விட்டு ரசிகர்களைத் தெறிக்க விடுவார்கள். இதற்கு பயந்தே பழைய நோக்கியா  செல்லுக்கு பலரும் மாறுவார்கள்! கெட்டதிலும் நல்லது நடக்கும்!

- எஸ்.ராமன்