நூற்றாண்டு கடந்த நூல்கள்!-  ப்ரியா

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள அந்த வீட்டை நோக்கி குறுகிய மாடிப்படிகளில் ஏறும்போதே பழமையான காகித வாசனை நம்மைத் தழுவுகிறது. புன்னகையுடன் கைகுலுக்கி நம்மை வரவேற்ற ஹென்றி வின்சென்ட்டுக்கு வயது 48. தாமதிக்காமல் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். பூட்டைத் திறந்ததும் விரிந்த காட்சியில் வாயைப் பிளந்தோம். கண்முன்னே விரிகிறது மாடிப்படி போல் அமைந்த அலமாரிகள். துறைவாரியாக பிரிக்கப்பட்டு புத்தகங்கள் அங்கே அடுக்கப்பட்டிருக்கின்றன. குறுகிய அந்த அறையில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. இப்படி சேகரிக்கப்பட்ட நூல்களில் பல, நூறாண்டுகளுக்கு முன் அச்சடிக்கப்பட்டவை என்பதுதான் ஹைலைட்!

தன் புத்தகங்களுக்காகவே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறார் ஹென்றி. ‘‘16 வயசுலேந்து புத்தகங்கள் படிச்சுட்டு இருக்கேன். கைச்செலவுக்கு வீட்ல தர்ற பணத்தை எல்லாம் சேமிச்சு புத்தகங்களா வாங்குவேன். வனவிலங்குகள் சார்ந்த புத்தகங்கள்னா ரொம்ப பிடிக்கும். விலங்குகளோட குணாதிசயம், வரலாறுகளை தேடித் தேடி விரும்பி படிப்பேன். ஒரு கட்டத்துல 400 புத்தகங்களுக்கு மேல விலங்குகள் தொடர்பானதா சேகரிச்சுட்டேன்...’’ சிரிக்கும் ஹென்றி, இதன் பிறகு குறிக்கோளுடன் புத்தகங்களை வாங்கத் தொடங்கியுள்ளார்.‘‘பழமையான, அரிய நூல்களை வாங்கி சேகரிக்கலாம்னு திடீர்னு ஒருநாள் தோணுச்சு.

1800கள்ல வந்த புத்தகங்கள், அந்தக் காலத்துல வெளியான முதல் பதிப்பு, கையெழுத்து பதிப்பு, சிறப்பு பதிப்பு, பழைய தினசரிகளை தேடறதுனு 25வது வயசுல பயணப்பட ஆரம்பிச்சேன். தனியார் நிறுவனத்துல சேல்ஸ் & மார்க்கெட்டிங் துறைல வேலைபார்த்து வந்தேன். அதனால பல இடங்களுக்கு பயணப்பட்டேன். சென்னைல நான் சுத்தாத இடமில்லை. காலைல பைக்ல வேலைக்கு கிளம்பினா வீடு திரும்பறப்ப குறைஞ்சது இரண்டு புத்தகங்களாவது வாங்கிட்டுதான் வருவேன். வேலை நேரம் போக மத்த பொழுதுகள்ல ஊர்ல இருக்கிற எல்லா பழைய பேப்பர் / புத்தகக் கடைகளுக்கும் போவேன். எல்லாருக்குமே என் வண்டி சத்தம் பரிச்சயம். புதுசா என்ன வந்திருக்குனு போனதுமே சொல்லி எடுத்துக் காட்டிடுவாங்க...’’

என்ற ஹென்றி, இடையில் தபால் தலைகளையும் சேகரித்திருக்கிறார். ‘‘ஸ்கூல் டேஸ்ல ஏதாவது செய்னு அம்மா சொன்னதால ஸ்டாம்ப் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன். ஒரு காலகட்டத்துல இதுல ஆர்வம் குறைஞ்சு புக்ஸ் மேல காதல் வந்தது. இப்ப மறுபடியும் ஸ்டாம்ப் கலெக்ட் பண்ணத் தொடங்கியிருக்கேன்...’’ சற்றே வெட்கத்துடன் சொல்பவர், புத்தகக் கடை ஒன்றையே விலைக்கு வாங்கியிருக்கிறார். ‘‘கோவிந்தராஜுனு ஒருத்தர் அடையார்ல புத்தகக் கடை வைச்சிருந்தார். சில பல காரணங்களால அவரால புக்ஸை விற்க முடியலை. நண்பர் மூலமா இந்த விஷயம் தெரிஞ்சுது. உடனே அங்க போனேன். ஆக்சுவலா நான் போனது எனக்கான புக்ஸ் அங்க இருக்குமானு பார்க்கத்தான்.

போனா... பெரிய கடலே இருந்தது! 1960கள்ல வெளியான பல தமிழ்ப் பத்திரிகைகள் அங்க இருந்தது. சிலது கலெக்‌ஷனா. அதாவது 1960ம் ஆண்டு ‘ஆனந்த விகடன்’ல வெளிவந்த சிறுகதைகளை மட்டும் கிழிச்சு பைண்ட் செய்திருந்தாங்க. போதாதா... 7 டன் புத்தகங்களை மொத்தமா வாங்கினேன்...’’ கண்கள் விரிய பேசும் ஹென்றி, புத்தகங்களை வைப்பதற்காகவே வாடகைக்கு வீடுஎடுத்திருக்கிறார். ‘‘பேச்சுலரா இருந்தப்ப கவலை இல்லாம இருந்தேன். வீடு முழுக்க இண்டு இடுக்கு விடாம புத்தகங்களா இருக்கும். புக்ஸ் இல்லாத இடங்கள்ல ஸ்டாம்ப்ஸ். கல்யாணமானதும் புக்ஸை எல்லாம் பரண்ல, கட்டிலுக்கு அடியில கட்டி வைக்க வேண்டியதாகிடுச்சு.

மனைவி தனியார் பள்ளில சயின்ஸ் டீச்சரா இருக்காங்க. அவர் வேலைக்கு போனதும் புதுசா வாங்கிட்டு வந்த புக்ஸை பழசோட கலந்து வைச்சுடுவேன். ஒரு கட்டத்துல புத்தக எண்ணிக்கை அதிகமாச்சு. முதல்ல ஒரு ரூமை ஒதுக்கிக் கொடுத்தாங்க. புத்தகக் கடையையே நான் வாங்கின பிறகு வீட்ல வைக்க இடமே இல்லாமப் போச்சு. அப்பதான் தனியா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம்...’’ என்ற ஹென்றியிடம் இருக்கும் கலெக்‌ஷன்ஸ் அசர வைக்கிறது. பழைய என்சைக்ளோபீடியா, பல்வேறு அகராதிகளின் முதல் பதிப்புகள் போட்டோகிராஃபி சம்பந்தப்பட்ட நூல்கள், பழைய நேஷனல் ஜியாகிரஃபி, பழங்கால நிலப்படம் (maps), சினிமா - நாடகம் தொடர்பான நூல்கள், அந்தக்கால நடிகைகளான சாவித்திரி, ஜெயமாலினி, ராஜசுலோசனா படம் போட்ட லக்ஸ் விளம்பரங்கள்... என பட்டியல் நீள்கிறது.

‘‘இந்தியா சுதந்திரம் வாங்கினதும் வந்த முதலாண்டு வெளியான சுதந்திர தின சிறப்பு தினசரியை (‘த இந்து’, ‘த மெயில்’) பொக்கிஷமா வைச்சிருக்கேன். 1930 முதல் 1960 வரை வெளியான ‘த இந்து’ என்கிட்ட இருக்கு. மகாத்மா காந்தி 1941ல எழுதின ‘எகனாமிக்ஸ் ஆஃப் காதி’ முதல் பிரதி, 1924ல வெளிவந்த சமஸ்கிருத-ஆங்கில அகராதி, 1935ல வெளியான ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ முதல் பதிப்புனு பலதையும் சேகரிச்சிருக்கேன். அவ்வளவு ஏன்... இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் இறந்தப்ப அவரோட இறுதிச் சடங்குக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழும் என்கிட்ட இருக்கு...’’ பரவசத்துடன் அடுக்கிக் கொண்டே செல்கிறார் ஹென்றி வின்சென்ட். மெய்மறந்து, அடுக்கி வைக்கப்பட்ட நூல்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். அடுக்குகளுக்குள்தான் எவ்வளவு அடுக்குகள்!

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்