காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 44

பாப்லோவின் நெருங்கிய நண்பரும், சக கார்டெல் உரிமையாளருமான ஜார்ஜ் ஓச்சோ உள்ளிட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்களைக் கைது செய்த ஸ்பெயினுக்கு அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் தங்கள் மீதி வாழ்நாள் மொத்தத்தையுமே அமெரிக்க சிறையில்தான் கழிக்க வேண்டும் என்கிற நிலை ஏற்படும். மாறாக கொலம்பியாவுக்கு அனுப்பப்பட்டால் ஏதோ ஒரு தொகையை அபராதமாக செலுத்திவிட்டு பழையபடி தொழிலை நடத்தலாம். எனவேதான், கொலம்பிய அரசில் தனக்கிருந்த செல்வாக்கினைப் பயன்படுத்தி ஸ்பெயினில் கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியாவுக்குத்தான் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்கிற நெருக்குதலை கொஞ்சம் உறுதியாகவே முன்வைத்தார் பாப்லோ.

கொலம்பியாவின் தலைசிறந்த வக்கீல்கள் ஸ்பெயினுக்கு பயணமாகி அங்கே இதற்கான வேலைகளை செய்து வந்தார்கள். ஸ்பெயினின் அரசு மட்டத்திலும் பாப்லோவின் பணமழை தாறுமாறாகப் பொழிந்தது. ஆனால் -எதுவுமே எளிதாக நடந்துவிடவில்லை. ஒருவேளை ஓச்சோ உள்ளிட்டவர்களை அமெரிக்கா வெற்றிகரமாகக் கைப்பற்றி விட்டால், அடுத்து தன்னையும் பிடித்து உள்ளே தள்ளுவது சுலபமாகி விடும் என்று பாப்லோ கருதினார். கொலம்பியாவின் உரிமையை(!) எக்காரணம் கொண்டும் இந்த விஷயத்தில் விட்டுவிடக் கூடாது என்று கர்ஜித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம் ஸ்பெயினை இடமும் வலமுமாக அமெரிக்காவும், கொலம்பியாவும் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தன.

அப்போதைய ஸ்பெயின் பிரதமரை சரிக்கட்டும் முயற்சிகள் பாப்லோ தலைமையிலான போதை கார்டெல்களால் முன்னெடுக்கப்பட்டன. விளைவாக குற்றவாளிகள் அனைவரும் அமெரிக்காவின் விருப்பத்துக்கு மாறாக கொலம்பியாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்கள். இங்கே ஒப்புக்குச் சப்பாணியாக அவர்கள் மீது விசாரணை நடந்து, ஏதோ ஒரு கணக்குக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது. கோர்ட் சொல்லும் தொகையைக் கட்டினால் அந்த தண்டனையும் இல்லை. இவர்களிடம் என்ன பணத்துக்கா பஞ்சம்? தொகையை கட்டிவிட்டு சுதந்திரமாக நடமாடத் தொடங்கினார்கள்.

எனினும், கார்டெல்காரர்கள் முன்புபோல அதிகாரம் செலுத்த முடியவில்லை. ஓரளவுக்கு கொலம்பிய அரசையும், அதிகாரிகளையும் அவர்கள் சரிக்கட்டி விட்டார்கள் என்றாலும் அவர்கள் நாட்டுக்குள் ஊடுருவிவிட்ட சிஐஏ உளவாளிகளுக்கு பயந்தார்கள். எந்த நிமிடம், எந்த திக்கிலிருந்து தங்களை நோக்கி தோட்டா பாயுமோ என்கிற அச்சத்திலேயே இரவும், பகலும் தூக்கமின்றி தவித்தார்கள். குறிப்பாக பாப்லோவின் மீது நடத்தப்பட்ட பண்ணை வீட்டுத் தாக்குதல் கொலம்பியாவின் ஒட்டுமொத்த போதையுலகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது.

இதனால் ஆயுதத்தை நன்கு கையாளத் தெரிந்த பாதுகாவலர்களை பெரும் சம்பளத்துக்கு பணிக்கு வைத்துக் கொண்டார்கள். பாப்லோ, மெதிலின் நகரில் புழங்குவதற்காக மட்டுமே சுமார் இருபது கார்களை மாற்றி மாற்றி பயன்படுத்தினார். இதன் மூலமாக, தான் எந்த காரில் பயணிக்கிறோம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியாமல் எதிரிகள் குழம்பி, கொலைத்திட்டம் எதுவும் தீட்டிவிட முடியாது இல்லையா? அமெரிக்காவுக்கு எதிராக கொலம்பிய அரசு சுண்டு விரலைக் கூட நீட்டாது என்பது நன்றாகவே புரிந்தது. இன்னும் சொல்லப் போனால் அமெரிக்காவின் ஏவல்நாயாக தங்கள் மீது பாய்வதற்கு கொலம்பியாவுக்கு எந்த தயக்கமும் கிடையாது. இதை எதிர்கொள்ள நமக்கு நாமே ஒரு ராணுவத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிரடியான ஐடியாவை பாப்லோ முன்வைத்தார்.

மற்ற போதை கார்டெல்கள் இந்த யோசனையைக் கேட்டதுமே நடுநடுங்கினர். ஏனெனில், முன்பு போதைத்தொழில் என்பது சகஜமாக இருந்தது. பாப்லோவின் மெதிலின் கார்டெல் உள்ளிட்ட முன்னணி கார்டெல்களில் பணியாற்றுவது கொலம்பியாவின் ஏழை இளைஞர்களுக்கு கவுரவமான தகுதியாக இருந்தது. சமீபமாக அப்படியல்ல. கார்டெல் தொடர்புடையவர்கள் என்று போலீஸாரால் சொல்லப்பட்டவர்கள், நடுத்தெருவில் நாய் மாதிரி சுட்டுக் கொல்லப்பட்டாலும் கேட்க நாதியில்லை. எனவே, கார்டெல்கள் நடத்தப் போகும் ராணுவத்தில் சேர யார் முன்வருவார்கள்? அதுவுமின்றி அமெரிக்காவை எதிர்த்து போர் புரிந்துவிடத்தான் முடியுமா?

“எத்தனை தலைகள் மண்ணில் வீழ்ந்தாலும் பரவாயில்லை. எவ்வளவு ரத்தம் ஆறாக ஓடினாலும் கவலையில்லை...” என்று கர்ஜித்தார் பாப்லோ எஸ்கோபார். உலகம் அதுவரை கண்டறியாத வன்முறை வெறியாட்டங்களுக்கு அதுவே பிள்ளையார் சுழி. பாப்லோ, கொலம்பிய அரசிடமிருந்து நிறையவெல்லாம் எதிர்பார்க்கவில்லை. போதை கடத்தல்காரர்களின் பெயரைச் சொல்லி அமெரிக்கா கேட்டால், விசாரணை எதுவுமின்றி அவர்களைக் கைது செய்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் சட்டம் தேவையில்லை என்று மட்டும்தான் சொன்னார். அமெரிக்காவோ, இந்த சட்டத்தை கொலம்பியா ஏற்றே ஆகவேண்டும், இல்லையேல் எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருந்தது.

“பாம்புக்கு வாலாக இருப்பதை விட எறும்புக்கு தலையாக இருந்து தொலைங்களேன். இல்லையேல், எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள்; நாங்கள் நடத்திக் கொள்கிறோம்...” என்று எஸ்கோபார் விட்ட சவாலை கொலம்பிய அரசியல்வாதிகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. விளைவு? உள்நாட்டுப் போரை நோக்கி கொலம்பியா போய்க்கொண்டிருந்தது. 1986ல் போதைத்தொழில் செய்துவந்த இருபத்தெட்டு கொலம்பியர்களை அமெரிக்கா தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்று அமெரிக்க சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுத்தது. “அமெரிக்க சிறையில் உயிரோடு இருப்பதைவிட, கொலம்பிய மண்ணில் புதைவதே கவுரவம்...” என்று முழங்கினார் பாப்லோ.

இந்த கோஷம், கொலம்பியாவின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. போதைக் கடத்தல்காரர்களாக இருந்தாலும் அவர்கள் கொலம்பியர்கள். அவர்கள் தவறு செய்திருந்தால், அவர்களுக்கு கொலம்பிய நீதிமன்றங்கள் தண்டனை வழங்கட்டும். அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது சரியல்ல என்று பொதுமக்களிடையேகூட ஒரு பொதுக்கருத்து உருவானது. இனியும் பொறுக்க முடியாது என்று கார்டெல்கள் பாப்லோவின் பின்னால் அணிதிரளத் தொடங்கினார்கள். வெளியேற்றத்துக்கு எதிரானவர்கள் (Los extraditables) என்கிற பெயரில் பாப்லோ தலைமையில் ஒரு ரகசியக் கூட்டமைப்பு உருவானது. கொலம்பிய அரசுக்கு எதிராக இந்த அமைப்பு ஒரு ராணுவத்தையே கட்டமைக்கத் தொடங்கியது.

அரசின் ராணுவத்தில் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட இரு மடங்கு சம்பளம் என்பதால், இதில் இணைவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டினார்கள். மேலும் -இந்த அமைப்பு போதைத் தொழிலை விட்டுவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றும் என்கிற நம்பிக்கையும் மக்களுக்கு உருவானது. தங்களுக்கு என்று வலிமையான ராணுவத்தை உருவாக்குவதோடு மட்டுமில்லாமல், ராஜதந்திர ரீதியிலான அரசியல் கூட்டணிகளை உருவாக்கவும் பாப்லோ முற்பட்டார். இந்த போதைத் தொழிலாளர் கூட்டமைப்போடு இணைந்து இயங்க M-19 கொரில்லாக்கள் முடிவெடுத்ததுமேதான் கொலம்பிய அரசு, தாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஆபத்தை உணர்ந்தது.ஏனெனில் - M-19 கொரில்லாக்கள் யாரென்றால்…

(மிரட்டுவோம்)

ஓவியம் : அரஸ்