purely love100% காதல் ஸ்பெஷல்

‘‘இதயங்களின் மேக்னட் மேஜிக்தான் காதல். காதல் வயப்படுவதும், காதலிக்கப்படுவதும்னு காதலைச் சுத்தி நடக்கிற அத்தனை உணர்வுகளும் அமேஸிங் பூக்கள். அதிலும் இந்த ‘100% காதல்’ இன்னும் அல்டிமேட். கலர்ஃபுல்லான இளமை புதுமை ரசவாதம்!’’வார்த்தைகளில் லவ் தெளித்து செம ஃபீலாகிறார் எம்.எம்.சந்திரமௌலி. ஜி.வி.பிரகாஷ், புதுமுகம் ஷாலினி பாண்டே நடிக்கும் ‘100% காதல்’ படத்தின் அறிமுக இயக்குநர். டோலிவுட், கோலிவுட் படங்களின் அமெரிக்க டிஸ்ட்ரிபியூட்டராக இருந்து இயக்குநராக புரொமோஷன் ஆகியிருப்பவர்.

‘‘ஒரிஜினல் வெர்ஷனான தெலுங்கு ‘100% லவ்’வை விட பல மடங்கு தமிழ்ல சிறப்பா கொண்டு வந்திருக்கோம். வெறுமனே காதல் மட்டும் இல்லாம அழகான ஃபேமிலி என்டர்டெயினராவும் இருக்கும். இதன் ஒரிஜினலை இயக்கின சுகுமார் என் நீண்ட கால நண்பர். என்னை ஒரு இயக்குநராக்கி அழகு பார்க்க நினைத்தது அவர்தான். அவரோட படத்தை இயக்குறது நானே எதிர்பாராத ஆச்சரியம்...’’ நிதானம் பொங்க பேசுகிறார் இயக்குநர் சந்திரமௌலி.

ஜி.வி.பிரகாஷ் இப்ப ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சிட்டிருக்கார்... கால்ஷீட் சொதப்பாம படப்பிடிப்புகளுக்கு வந்தாரா..?
என்ன இப்படி கேட்டுட்டீங்க! இந்த படத்துக்காக அவரை அப்ரோச் பண்ணினதுமே தொடர்ச்சியா எங்களுக்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்தார். நவம்பர்ல ஆரம்பிச்சு, ஜனவரியில் முடிச்சிட்டோம். பாடல்கள்தான் பாக்கி. ஜி.வி.பிரகாஷோட ஒத்துழைப்பு இல்லாம இந்த வேகம் சாத்தியமாகி இருக்காது. இதுக்காகவே அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். இந்தப் படத்துல அவர் காலேஜ் ஸ்டூடண்ட்டா நடிச்சிருக்கார்னு சொல்றதை விட, அச்சு அசலா அந்த கேரக்டராகவே மாறியிருக்கார். ஹீரோயினா ஷாலினி பாண்டே நடிச்சிருக்காங்க. இவங்களத் தவிர நாசர், ஜெயசித்ரா, ரேகா, தம்பிராமையானு ஃபேமிலி என்டர்டெயினருக்கான அத்தனை பேரும் இருக்காங்க.

ஹீரோயினா லாவண்யா திரிபாதி தானே நடிக்கறதா இருந்தது... அப்புறம் எப்படி ஷாலினி பாண்டே?
நிஜம்தான். மொத்த படத்தையும் லண்டன்ல ஷூட் முடிச்சிட்டு வந்திடலாம்னு திட்டமிட்டோம். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியா ஆரம்பத்துல லாவண்யா திரிபாதியைத்தான் செலக்ட் பண்ணினோம். அவங்களும் நடிக்கறதா சம்மதிச்சாங்க. ஜி.வி.யும் தொடர்ச்சியா ரெண்டு மாசம் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனா, படப்பிடிப்புக்கு கிளம்பற நேரத்துல ‘என்னால வரமுடியாது. வேற ஒரு படத்துல நடிக்கப் போறேன்’னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டாங்க. ஒரு கோடி ரூபாய்கிட்ட செலவு பண்ணின பிறகு ஒரு ஹீரோயின் இப்படிச் சொன்னா எப்படியிருக்கும்?

அந்த டைம்ல ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படம் ரிலீஸ் ஆகியிருந்தது. அதைப் பார்த்த என் டோலிவுட் ஃப்ரெண்ட்ஸ் பலரும் ஷாலினி பாண்டே பொருத்தமா இருப்பாங்கனு சொன்னாங்க. ஒரிஜினல்ல தமன்னா நடிச்சிருப்பாங்க. கலர்ஃபுல்லா பாவாடை தாவணி க்ளாமர்ல பக்காவா செட் ஆகியிருப்பாங்க. ஆனா, ‘அர்ஜுன் ரெட்டி’ல ஷாலினி ஒரு குறிப்பிட்ட அளவு பர்ஃபாமென்ஸ்தான் பண்ணியிருப்பாங்க. ரொம்பவே யோசனையா இருந்துச்சு. அப்புறம் ஏதோ ஒரு நம்பிக்கைல ஷாலினியை கூப்பிட்டோம். நம்ப மாட்டீங்க, பிச்சு உதறினாங்க. லாவண்யா நடிச்சிருந்தா கூட இந்தளவுக்கு கெமிஸ்ட்ரி கிடைச்சிருக்காது. டைனமிக் பர்ஃபாமென்ஸ்.

என்ன சொல்றாங்க டெக்னீஷியன்ஸ்?
ஆர்ட் டைரக்‌ஷனை தோட்டாதரணி சார் கவனிக்கறார். பெரிய பெரிய படங்களுக்கு மட்டுமே ஒர்க் பண்றவர் என் மேல உள்ள ப்ரியத்துல இதுல ஒர்க் பண்ணியிருக்கார். இசை ஜி.வி.பிரகாஷ். முதல்ல தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கறதா இருந்தது. என் நண்பர்கள்ல அவரும் ஒருத்தர். என்னை பார்க்கறப்ப எல்லாம் ‘எப்பனு சொல்லுங்க... பாடல்கள் தந்திடுறேன்’னு பாசமா சொல்லிட்டே இருப்பார்.

படம் ஆரம்பிச்சதும் ஜி.வி.பிரகாஷ்கிட்ட டி.எஸ்.பி.தான் மியூசிக்னு சொன்னேன். ‘இந்தப் படத்துல ரொம்பவே ஒன்றிட்டேன். நானே இசையமைக்கறேன்’னு சொன்னதோட நான்கு பாடல்களும் பிரமாதமா கொடுத்துட்டார். மீதி பாடல்கள் கம்போஸிங் போயிட்டிருக்கு. டட்லி கணேஷ் ஒளிப்பதிவு பண்றார். அவர் என் காலேஜ் மேட். இனிமையான நண்பர். தயாரிப்பாளரும் என் நண்பர்தான். சுகுமார் தயாரிச்சிருக்கார்.

எல்லாருமே உங்க நண்பர்கள்னு சொல்றீங்க... உண்மைல நீங்க யாரு?
சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல சினிமாட்டோகிராஃபி முடிச்சேன். டைரக்‌ஷன்தான் என் இலக்கு. படம் இயக்க வாய்ப்பு களைத் தேடிக்கிட்டே, சின்னதா ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி தொடங்கினேன். டெலிஃபிலிம், சீரியல்கள் தயாரிச்சேன். அடுத்த கட்டமா ஃபிலிம் எக்ஸிபியூட்டராகவும், அமெரிக்க நாட்டிற்கான விநியோகஸ்தராகவும் ஆனேன். தெலுங்கு / தமிழ் படங்களை அங்க விநியோகிக்கிறேன்.

அதனாலேயே நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. வட அமெரிக்கால ‘பாகுபலி 2’, 21 மில்லியன் அமெரிக்கன் டாலர் வசூல் பண்ணி சாதனை படைச்சிருக்கு. பொதுவா இந்தியப் படங்களுக்கான வரவேற்பு அமெரிக்காவில் அதிகரிச்சிட்டே இருக்கு. தெலுங்கு, தமிழ் படங்கள் அங்க ரிலீஸ் ஆகும்போது இந்த ஆடியன்ஸ்தான் டார்கெட். சிலசமயம் ஒருசில வெளிநாட்டினரும் தியேட்டருக்கு வருவாங்க. இது நல்ல விஷயம்தான். நாலு ஃபாரீனர் நம்ம படத்துக்கு வந்தா, நாளைக்கு அந்த எண்ணிக்கை பத்தா உயருமில்லையா?!            

- மை.பாரதிராஜா