ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்



ஊருக்குள் கொள்ளையடிக்க வந்த திருட்டுக் கும்பல் தலைவனின் ஒருதலைக் காதல் நிறைவேறியதா என்பதே ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.ஆந்திராவில் யார் பார்வைக்கும் படாத இடத்தில் இருக்கிறது எமசிங்கபுரம். மலைகள் சூழ்ந்து எவரின் கவனத்தையும் பெறாத இடத்தில் இருந்துகொண்டு, நல்ல பல கொள்கைகளோடு திருட்டுத்தொழில் செய்து வருகிறது விஜய் சேதுபதி அண்ட் கோ. அப்படியொரு முறை திருட வந்த இடத்தில் தன் அக்கா குடும்பத்தையும், அவர் மகளையும் கண்டுபிடிக்கிறார். அக்கா மகளைக் கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். வி.சே.வின் அக்கா மகள் நிகாரிகாவை காதலித்து வரும் கெளதம் கார்த்திக், தன் காதலியைத் தேடி வருகிறார்.

விஜய் சேதுபதியிடம் அகப்பட்டுக் கொள்கிறார். இறுதியில் யார் காதல் ஜெயித்தது என்பதே கதை.கணிக்க முடியாத திரைக்கதையாகக் கொண்டு வந்து சிரிப்பூட்ட முயன்ற வகையில் அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் கவனம் பெறுகிறார். விஜய் சேதுபதிக்கு இது சுலபமான கேரக்டர். சிரிப்புத் திருடனாக உருக்கொண்டு, சிட்டிக்கு வரும் வரையிலும் காமெடிக்கு முக்கியத்துவம் தருகிறார். கூட்டத்தின் தளபதி வேடத்திற்கும் அவரது உடம்பு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. சுருக்க வசனங்களில் வித்தியாசம் காட்டும் சேதுபதி, இதில் மூச்சு விடாமல் பேசியும் கலகலப்பு தருகிறார். அப்பாவை நிறைய ஞாபகப்படுத்துகிறார் கௌதம்.

காதலி நிகாரிகாவை லவ் பண்ணுவது, பின்தொடர்வது என அப்படியே இளமைத் துள்ளல். நண்பன் டேனியலோடு சேர்ந்து கொண்டு அவர் அடிக்கும் லூட்டிகள் சிரிப்பு மேளா. படம் மொத்தத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என ஆரம்பத்திலேயே மறைமுகமாகச் சொல்லி விடுகிறார்கள். நாமும் அந்த ரிலாக்சுக்கு தயாராகி விடுகிறோம். விஜய் சேதுபதியின் கூட்டாளிகள் ரமேஷ் திலக், ராஜ்குமார் என ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பு. காட்டில் எமன் இருப்பிடங்களின் கலையமைப்பில் நுணுக்கம். இடைவேளைக்குப் பிறகு தொடரும் காட்சிகளும், முடிவும் யூகிக்க முடிவது மைனஸ்.

காயத்ரி பார்க்கிற பார்வைக்கு விஜய் சேதுபதி கிடைப்பார் என பிறந்த குழந்தையும் சொல்லிவிடுகிறது. முதல் பாதியில் காமெடி தந்த திரைக்கதை, பின் பகுதியில் தடுமாறுகிறது. சேதுபதியின் கெட்டப்புகள் அவரது பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. நகரம், காடு என நம் தோள் மீதே பயணிக்கும் உணர்வைக் கடத்தியிருக்கிறது சரவணன் ஒளிப்பதிவு. பின்னணியில் மட்டும் கவனிக்க வைக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். அபத்த காமெடியும் ஏற்றுக் கொள்ளப்பட்ட திரைப்பட ஜானர்தான். ஆனால், அதை மேம்போக்காகச் சொல்லிவிடக் கூடாது என்பதற்கு இப்படமே எடுத்துக்காட்டு.

- குங்குமம் விமர்சனக்குழு