தேங்க்ஸ்காரணம் அம்மா. பொதுவாக தாராவுடன் கூடல் முடிந்ததும் இப்படித்தான் அது நிறைவடையும். உதட்டைச் சுழித்து பற்கள் பளீரிட அழகு காட்டுவாள். ஏசியை மீறி நெற்றியில் பூத்திருந்த முத்துக்களை அப்படியே என் முகத்தில் - அதே அதே... கன்னத்துக்கும் உதட்டுக்கும் இடையில் - அப்புவாள். பிடிமானமற்று முன்பக்கம் கொத்தாக விழும் தன் கேசத்தை ஒரு தலையசைப்பில் பின்பக்கம் தள்ளுவாள். சரியாக தன் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து என் நாசியை வலிக்காமல் திருகுவாள். ம்ஹும். ஒருமுறையோ இருமுறையோ அல்ல. சரியாக ஒன்றரை முறை. அடுத்து?மார்பில் புதைவாள். உடலை சரிசெய்து கச்சிதமாக ஒண்டுவாள். இதயத் துடிப்பை செவியில் கேட்பாள். கைகளை உயர்த்தி என் கீழுதட்டின் நுனியைக் கிள்ளுவாள். அதுவும் எறும்பு கடிப்பது போல்.

நறுக்.‘ஆ...’ என அனிச்சையாக கத்துவேன். உள்ளங்கையை விரித்து வாயைப் பொத்துவாள். பிறகு? ‘‘இடியட். அலுக்கவேயில்லையா? ஒரே வார்த்தையை தினமும் சொல்லணும்னு என்ன வேண்டுதலா? கேட்டுக் கேட்டு போரடிக்குது. நீ சொல்லலைனா எனக்குத் தெரியாதா? லூசு... மரமண்டை...’’ மார்புக் குழியில் முணு முணுத்துவிட்டு கன்னத்தில் பற்கள் பதியாதபடி கடிப்பாள். பட்டாம்பூச்சியின் சிறகைப் போல் கைகளை விரித்து அணைப்பாள். நிமிருவாள். என் தலைமுடியைக் கலைப்பதும் கோதுவதும் தோன்றும்போதெல்லாம் முத்தமிடுவதுமாக இரவைப் பூர்த்தி செய்வாள். கமா, ஃபுல் ஸ்டாப் மாறாமல் இப்படித்தான் ஆயிரத்து எட்டு நாட்களாக நடந்து வந்தது.

அவளுடன் இரண்டறக் கலந்தபின் நான் ‘‘தேங்க்ஸ்...’’ சொல்வதும், பதிலுக்கு தாரா இப்படி ஈஷிக் கொள்வதும். இன்று இதெல்லாம் நடக்கவேயில்லை. காரணம் அம்மா. அனைத்துக்கும் ‘நன்றி’ சொல்ல வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது அம்மாதான்.‘‘உன்னால, உன் செய்கையால நான் சந்தோஷமா இருக்கேன். அறிந்தோ அறியாமலோ... ஏதாவது தப்பு செய்திருப்பேன். உன் மனசை காயப்படுத்தியிருப்பேன். அதையெல்லாம் மனசுல வைச்சுக்காம எனக்காக இந்தக் காரியத்தை செய்திருக்க. உன்னை நினைச்சு நான் பெருமைப்படறேன். இதே மாதிரி நீயும் மகிழ்ச்சியா இருக்க என்னால முடிந்ததை நான் செய்வேன்...’ இதுதான்டா கண்ணா ‘தேங்க்ஸ்’க்கு உண்மையான அர்த்தம்...’’

‘‘ஆனாம்மா, ரொம்ப நெருக்கமானவங்ககிட்ட கூட ‘நன்றி’ சொல்லணுமா?’’‘‘அவங்ககிட்டதான் கண்ணா அதிகமா ‘தேங்க்ஸ்’ சொல்லணும். ஏன்னா, நம்மை சகிச்சுகிட்டு ஏத்துகிட்டவங்க அவங்கதானே?’’சரியென்று பட்டது. மனதார ‘தேங்க்ஸ்’ சொல்ல ஆரம்பித்தேன். குறிப்பாக அம்மாவுக்கு. அப்பா இல்லை. பழுப்பேறிய புகைப்படத்தில் பார்த்ததுடன் சரி. நான் ஜனித்தபோதே விபத்தில் இறந்துவிட்டாராம். சாதி மறுப்பு காதல் திருமணம். எனவே தாத்தா, பாட்டி, மாமன், அத்தை, பெரியப்பா, சித்தப்பா உறவெல்லாம் அனுபவித்ததேயில்லை. இழப்பை உணரும்படி அம்மாவும் செய்ததில்லை. கல்லூரியில் கிடைத்த விரிவுரையாளர் பணியை மறுத்துவிட்டு அருகிலிருந்த மெட்ரிக் பள்ளியில் டீச்சராக அம்மா சேர்ந்த நேரம் அது.

‘‘உன் பையனுக்கு ப்ளஸ் டூ வரை பீஸ் கட்டத் தேவையில்லைனு இந்த முடிவை எடுத்தியா?’’ பக்கத்து வீட்டு மாமி கேட்டபோது வழக்கம்போல் புன்னகையையே பதிலாகத் தந்தாள். மாமி சென்றபிறகு முதல் முறையாக ‘‘தேங்க்ஸ்மா...’’ என்றேன். அதன் பிறகு பலமுறை என் நாவில் ‘நன்றி’ தவழ்ந்து விளையாடியிருக்கிறது. கிரிக்கெட் பேட் வாங்கித் தந்த போது. ஆசைப்பட்டேன் என்று ஜிமிக்கியை அடகு வைத்து குற்றாலம் டூருக்கு அனுப்பிய போது. தோட்டம் அமைக்க வீட்டுக்காரர் எதிர்ப்பு தெரிவித்தபோது லோன் போட்டு சொந்த வீட்டை வாங்கி ‘‘இப்ப கார்டன் அமைச்சுக்க...’’ என்று அனுமதி கொடுத்தபோது. பக்கத்து வீட்டு மாலதிக்கு காதல் கடிதம் கொடுத்து அது ரசாபாசமான பிறகு ‘‘இது இயல்பான விஷயம்டா கண்ணா.

நீ எந்த தப்பும் செய்யல...’’ என்று முதுகைத் தடவியபோது. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றதும் வாங்கிய வீட்டை அடமானம் வைத்து ‘‘இன்ஜினியரிங் படி...’’ என்று ஆஸ்டலில் சேர்த்தபோது. எல்லாவற்றுக்கும் சிகரம், கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையைத் தூக்கி எறிந்தபோதுதான்.‘‘ஜர்னலிஸ்ட்டா ஆகணும்னு விரும்பறேம்மா...’’‘‘இதை அப்பவே சொல்லியிருந்தா ஆர்ட்ஸ் காலேஜுல உன்னை சேர்த்திருப்பேன். வீட்டையும் அடமானம் வைக்காம இருந்திருக்கலாம்...’’இப்படி முணுமுணுக்கக் கூட இல்லை. பதிலாக ‘‘எங்க என் நிழல்ல வளர்ந்ததால உன் சுயம் அழிஞ்சிடுச்சோன்னு பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை. உனக்கு என்ன விருப்பமோ அதை செய்...’’ என்றாள்.

செய்தேன்.சென்னை வந்து பத்திரிகை அலுவலகங்களில் ஏறி இறங்கினேன். படிப்பு தடையாக இருந்தது. சொல்வதைத் தவிர்த்தேன்.‘‘ப்ளஸ் டூ வா?’’‘‘டிகிரி இன்கம்ப்ளீட்...’’‘‘எங்க, இந்த நியூஸை ரீரைட் செய்...’’ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, எழுதிய தாளை நீட்டினேன். கண்ணாடி வழியே எழுத்துக்களை நோட்டம் விட்ட எடிட்டரின் முகத்தில் புன்னகை.‘‘சம்பளம் பெருசா கிடைக்காது...’’‘‘பரவால்ல சார்...’’‘‘சரி. நாளை காலைஒன்பது மணிக்கு வந்துடு...’’‘‘தேங்க்ஸ் சார்...’’‘‘ஒரு விஷயம். எழுத்தாளனா ஆகணும்னு விரும்பினா வேற வேலைக்குப் போ. கதை எழுத நானே வாய்ப்புத் தரேன்...’’‘‘இல்லை. பத்திரிகையாளனா வரணும்னுதான் ஆசை...’’‘‘அப்ப சிறுகதையை எழுதிட்டு வந்து என் முன்னாடி நீட்டாத...’’நீட்டவேயில்லை.

கல்லூரி இதழில் எட்டு சிறுகதைகளை எழுதியவன், பத்திரிகையில் சேர்ந்தபிறகு ஒன்றைக் கூட எழுதவில்லை.‘‘கதை எதுவும் எழுதலையா?’’ ஊருக்குச் சென்றபோது அம்மா கேட்டாள்.‘‘வேலை சரியா இருக்கும்மா...’’‘பிடிச்சிருக்கா?’’‘‘ரொம்ப...’’‘‘சம்பளம் குறைவா?’’‘எதுக்கு கேட்கற?’’‘‘கன்னம் ஒட்டியிருக்கு, அதான்...’’‘‘எனக்கு அப்படித்தெரியலையே..?’’அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. அதனாலேயே மறுமாதம் முதல் மணியார்டரில் பணம் அனுப்பத் தொடங்கினாள்.‘‘தேங்க்ஸ்மா...’’ அயன்புரம் த.சத்தியநாராயணன் போல் போஸ்ட் கார்டில் கடிதம் எழுதிப் போட்டேன். வேலைக்குச் சேர்ந்த எட்டாவது மாதம் எடிட்டர் அழைத்தார்.‘‘வர்ற திங்கள் ஒரு சிறுகதை வேணும்...’’

‘‘சார்...’’‘‘பத்திரிகையாளனா தேறிட்ட. இனி அலைபாய மாட்டே. அதுபோதும். வாராவாரம் ஒரு சிறுகதை கொடு. ஆனா, மூணு மாசத்துக்கு ஒருமுறைதான் உன் பேர்ல அது பிரசுரமாகும். மத்தது எல்லாம் புனைப்பெயர்ல...’’‘‘தேங்க்ஸ் சார்...’’ துள்ளிக்குதித்தேன்.‘‘லவ் பண்றியா?’’‘‘சார்?’’‘‘காதலிக்கிறியா?’’வெட்கம் ஆண்களுக்கும் வரும். வந்தது.‘‘உன் ஆள் பேர்லயும் ஒரு கதை எழுது...’’எழுதவேயில்லை. தாரா அதற்கு அனுமதிக்கவில்லை. ‘‘கொன்னுடுவேன்...’’‘‘ஏன்?’’‘‘அதான் உன்னோட எல்லா எழுத்துலயும் நான் இருக்கேனே. அப்புறம் எதுக்கு தனியா? ‘தேங்க்ஸ்’ சொல்லவா?’’பக்கத்து வீடுதான். பேச்சிலராகக் குடியேறி இரண்டு நாட்கள் பொறுத்து வாசலில் அவளைப் பார்த்தேன்.

சிநேகத்துடன் பரஸ்பரம் புன்னகைத்துக் கொண்டோம். அதுவே நிலைத்துவிட்டது. முதல் அறிமுகத்திலேயே அப்படி ஒட்டிக் கொண்டாள். ‘சிரிக்கலைனா சொல்றேன். என்னவோ தெரியலை. உன்னைப் பார்த்ததுமே நீதான் என் ஆளுன்னு பட்சி சொல்லிச்சு...’’‘‘எங்க. இங்கயா?’’ ‘சீ. கையை எடு...’’எடுத்தவனின் விரல்களை அவளே ஆறு மாதங்கள் பொறுத்து அதே இடத்தில் வைத்தாள்.‘‘ஏய்...’’‘‘உஷ். பேசாத. இயல்புக்கு வந்ததும் எழுது...’’‘‘தாரா...’’பேச விடாமல் உதட்டால் மூடினாள். அவள் சொன்னபடியே அடுத்த பதினைந்தாவது நிமிடம் சரசரவென எழுத முடிந்தது.‘‘ரொம்ப நல்லா இருக்கு...’’ படித்துவிட்டு எடிட்டர் சொன்னார். அம்மா தொலைபேசியில் அழைத்து பாராட்டினாள்.

அசோக்நகரிலிருந்து மயிலை கோபியும், பொன்னியம்மன்மேட்டிலிருந்து வண்ணை கணேசனும் கடிதம் எழுதி ஊக்குவித்தார்கள்.‘‘தேங்க்ஸ் தாரா...’’‘‘இந்த வார்த்தையை விடவே மாட்டியா..?’’விட முடியவில்லை. விடுமுறை நாட்களில் அறை தேடி வந்து துணி துவைத்துத் தந்தபோது. காரமாக மீன் குழம்பு வைத்தபோது. மின்வெட்டை கணக்கிட்டு உடைகளுக்கு அயர்ன் செய்தபோது. ‘‘அடுத்த கதை எழுதணும்...’’ என்று எச்சிலை விழுங்கியதும், ‘‘அதுக்கு?’’ என்றபடி கண்களைச் சுருக்கி என் விரல்களைத் தடுக்காமல் சிரித்தபோது.‘‘மேற்கொண்டு பிஎச்.டி படிக்கிறியா?’’ ‘‘ஆணியே புடுங்க வேண்டாம்...’’‘‘பிறகு என்ன செய்யப்போற?’’

‘‘உன்னை கட்டிக்கிட்டு புள்ளை பெத்துக்கப்  போறேன்...’’நிமிர்ந்தேன். ‘‘உனக்குனு கனவு, லட்சியம்..?’’‘‘ஒரு புண்ணாக்கும் இல்லை...’’‘‘முட்டாள்தனமா பேசாத தாரா. எல்லாருக்கும் ஓர் அடையாளம் வேணும்...’’‘‘எனக்கு வேண்டாம்...’’‘தாரா...’’‘‘இங்க பார். சின்ன வயசுலேந்தே எனக்கு பெருசா எந்தக் கனவும் இல்ல. அன்பான கணவன் சிநேகிதனா கிடைச்சா போதும்னுதான் நினைச்சேன். அதேமாதிரி நீ கிடைச்சுட்ட. வேறென்ன வேணும்? அதான் நீ கனவு, லட்சியம்னு ஓடிக்கிட்டு இருக்கல? நிழலா கூடவே வந்துகிட்டு இருப்பேன்...’’அப்படித்தான் வருகிறாள். கல்லூரிப் படிப்பை அவள் முடிக்கவும் எனக்கு துணை ஆசிரியர் பதவி கிடைக்கவும் சரியாக இருந்தது.

பதவியும் அதற்கேற்ற சம்பளமும் தாராவின் அப்பாவுக்கு நம்பிக்கையை அளித்தன. ஊருக்குச் சென்று அம்மாவிடம் பேசினார்.‘‘என் பையன் சரியான முடிவைத்தான் எப்பவும் எடுப்பான். கல்யாணம் சிம்பிளா கோயில்ல நடந்தா போதும். ஊரைக் கூட்டி ஒரு ரிசப்ஷன் வைச்சிடலாம்...’’ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டேன். ‘‘தேங்க்ஸ்மா...’’‘‘சந்தோஷமா இருடா...’’‘‘இருப்பேன்மா. என் மேல தாரா உயிரையே வைச்சிருக்கா. ஒருவகைல இந்தளவுக்கு நான் பத்திரிகைல உயர்ந்திருக்கேன்னா அதுக்கு அவதான் காரணம்...’’‘‘இதுபோதும்டா கண்ணா...’’‘‘சரிம்மா. வீடு பார்த்துட்டேன். சென்னைக்கு வா...’’‘‘இப்ப வேண்டாம்...’’‘‘அம்மா...’’‘‘என்னை விட்டுடு. தோணும்போது நானே வர்றேன்...’’

ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் அம்மாவுக்கு சென்னை வரத் தோன்றவேயில்லை.‘‘எப்படி தனியா இருக்காங்க?’’ முதலிரவில் நான் ‘தேங்க்ஸ்’ சொல்லி, பதிலுக்கு என் உதட்டைக் கிள்ளி, என் மார்பில் முகம் புதைத்த தருணத்தில் தாரா கேட்டாள்.‘‘அவங்களுக்கு பழகிடுச்சு...’’‘‘வயசானவங்களாச்சே? அவசரத்துக்கு உதவி வேண்டாமா?’’பொட்டில் அறைந்தது போலிருந்தது. உடனே பர்சனல் லோன் போட்டு வீட்டுக்குப் பின்னால் சின்னதாக அவுட் ஹவுஸ் கட்டினேன்.‘‘ஒரு ரிட்டயர்ட் ஆர்மி ஆபீசர் வாடகைக்கு கேட்கறாருடா கண்ணா. அவரும் ஒண்டிக்கட்டைதான்...’’ அம்மா தொலைபேசியில் விவரம் சொன்னாள்.‘‘உனக்கு ஓகேனா அவருக்கே கொடுத்துடுமா...’’

கொடுத்துவிட்டாள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்த ஆர்மி ஆபீசர்தான் அம்மாவுக்கு துணை. விடுமுறை கிடைக்கும்போது தாராவும் நானும் ஊருக்குச் செல்வோம். ‘‘தள்ளிப்போட்டிருக்கீங்களா?’’ ஒரு முறை தயங்கித் தயங்கி அம்மா கேட்டாள்.‘‘இல்லம்மா. வரும்போது வரட்டும்னு விட்டுட்டோம்...’’‘கண்டிப்பா வரும் மனசைப் போட்டு குழப்பிக்காத...’’குழப்பிக் கொள்ளவேயில்லை. இருவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவே மருத்துவ அறிக்கை தெரிவித்தது.‘‘நானே எட்டு வருஷம் பொறுத்துத்தான் பொறந்தேன்...’’தாராவுக்குப் பிடித்த பொடிமாஸை நான் வதக்கிக் கொண்டிருந்தபோது நகத்தைக் கடித்தபடி சொன்னாள்.‘‘பதினஞ்சு வருஷம்தான் ஆகட்டுமே? என்ன அவசரம்...’’

‘‘அதுசரி. அப்பதானே உன்னால சிறுகதையா எழுதித் தள்ள முடியும்!’’ நாசியின் நுனி அதிர சிரித்தாள்.‘‘இனிமே நோ ஷார்ட் ஸ்டோரீஸ்...’’‘‘த்தோடா. அப்புறம்?’’‘‘ஸ்ட்ரெய்ட்டா நாவல்தான்...’’‘‘ஹை... ஆசையைப் பாரு...’’ஆசைதான். எடிட்டர் அதை மூன்று நாட்களுக்கு முன்னர்தான் நிறைவேற்றினார். ‘‘வர்ற காதலர் தினத்துல உன் தொடர் ஆரம்பமாகட்டும்...’’‘சார்...’’‘ஜானர் உன் விருப்பம். சொந்தப் பேர்லயே எழுது...’’‘தேங்க்ஸ் சார்...’’அறிந்ததுமே தாரா பாய்ந்து வந்து கட்டிக்கொண்டாள். ‘‘அம்மாகிட்ட சொல்லிட்டியா?’ ’‘இல்ல...’’‘‘ஏன்?’’ ‘‘நேர்ல போய் சொல்லலாம்...’’‘‘உனக்கு லீவு?’’‘‘கிடைச்சிடுச்சு...’’‘‘அப்ப வா. கையோட அம்மாவையும் கூட்டிட்டு வந்துடலாம்.

போன முறை போனப்பவே கால் மூட்டு வலிக்கறதா சொன்னாங்க. இதுக்கு மேலயும் அவங்க தனியா இருக்க வேண்டாம்...’’‘‘தேங்க்ஸ் தாரா...’’‘‘தத்தி...’’ தலையில் குட்டினாள். புறப்பட்டுச் சென்றோம். வீடு மாறியிருந்தது. மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட்டால் கூரை முளைத்திருந்தது. வாசலில் சின்னதாக ‘இங்கே டியூஷன் எடுக்கப்படும்’ போர்டு.‘‘இதெல்லாமா கண்ணா சொல்வாங்க? வீட்ல போரடிச்சுது. அங்கிள்தான்...’’‘‘அங்கிள்?’’ஆர்மி ஆபீசர். அவர்தான் இந்த ஐடியாவை கொடுத்தாரு...’’ அம்மாவின் பேச்சு வாசலில் வந்து நின்ற மூன்று சக்கர வண்டியைப் பார்த்ததும் தடைப்பட்டது.‘‘எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டாரு...’’ முகமெல்லாம் மலர அம்மா விரைந்தாள். பின்னாலேயே நானும் தாராவும்.

‘‘பார்த்து... பார்த்து இறக்குங்க...’’ அங்கிள் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். ஆட்கள் எச்சரிக்கையுடன் கறுப்பு போர்டை இறக்கினார்கள். ‘‘நான்தான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேனே...’’ சலிப்பில்லாமல் அம்மா சலித்துக் கொண்டாள்.‘இருக்கட்டும் டீச்சர்...’’ என்றவர் எங்களைப் பார்த்ததும் சிரித்தார். ‘‘அடடே வாங்க தம்பி... சவுக்கியமாம்மா..?’’தாராவும் நானும் தலையசைத்தோம். ‘‘டீச்சர்... இந்தாங்க உங்க மாத்திரை...’’ பார்சலைக் கொடுத்தார். ‘‘டியூஷனுக்கு நேரமாச்சு. நீங்க ரெடியாகலை..?’’‘‘இதோ...’’அம்மா முகம் கழுவினாள். பவுடர் பூசினாள். அங்கிள்தான் எங்கள் அனைவருக்கும் காபி கலந்தார். ‘‘இது டீச்சருக்கு. ஷுகர் கம்மி...’’

பார்த்துப் பார்த்து செய்தார். பார்த்தபடியே இருந்தோம்.‘‘நைட் தூங்காம என்னம்மா எழுதிட்டு இருக்க?’’‘‘டென்த்துக்கு நோட்ஸ். அங்கிள் பப்ளிஷ் பண்றதா சொல்லியிருக்கார்...’’தாராவும் நானும் சென்னையை அடைந்தபோது இருட்டியிருந்தது.‘‘அம்மாவை ஏன் கூப்பிடலை?’’ நைட்டிக்கு மாறியபடி கேட்டாள்.‘‘நசுக்க விரும்பலை...’’‘‘எதை?’’மவுனமாக இருந்தேன்.‘‘அம்மாங்கிற உறவையா?’’‘‘இல்லை. காதலை...’’அருகில் வந்தவள் என் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தாள். அழுத்தமாக உதட்டில் முத்தமிட்டவள் அப்படியே படுக்கையில் சாய்த்தாள். அவளது ஆண்மையை என் பெண்மை வரவேற்றது. அரைமணி நேரத்துக்குப் பிறகு முதல் முறையாக அந்த வார்த்தையைச் சொன்னாள். ‘‘தேங்க்ஸ்...’’

மனித அதிசயம்!
துருக்கி விவசாயி சுல்தான் கோஸன், இந்திய நடிகை ஜோதி அம்ஜே ஆகிய இருவரும் எகிப்து பிரமிடை சுற்றிப்பார்த்த சிறப்பு விசிட்டர்கள். சுல்தானின் உயரம் 8 அடி 3 அங்குலம் என்றால், ஜோதியின் உயரம் 2 அடிதான். நான்கு நாட்கள் விசிட்டில் கெய்ரோ டவர் உள்ளிட்ட இடங்களையும் சுற்றிப்பார்க்கப் போகிறார்கள்.

கங்காரு தாக்குதல்!
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் ரெபெக்கா தன் நண்பருடன் சைக்கிளில் ஜாலி ரைடு சென்றார். அப்போது சாலையை ஒரே ஜம்பாகத் தாண்டிய கங்காரு நேராக ரெபெக்காவின் மீது விழுந்து அவரைக் கீழே சாய்த்தது. விளைவு? முழங்கால் மற்றும் தோள்பட்டையில் தையல்களோடு ஆஸ்பத்திரியில் இருக்கிறார் ரெபெக்கா. இந்த கங்காரு அட்டாக் வீடியோ இணையத்தில் சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

பயிர் காவலன்!
பாங்காக்கில் அறுவடையான பயிர்களை ஏற்றியபடி ட்ரக் ஒன்று சென்றது. அதன் பின்னால் சென்ற பைக் பயணி, அதன் மேலே பார்த்தபோது ஆச்சர்யம் அடைந்தார். பயிர்களுக்கு செக்யூரிட்டியாக நாய் ஒன்றும் மேலே நின்று பயணித்தது. ‘‘வண்டியில் பயிர்களுக்கு மேலே நின்ற நாய், அப்படியே அதன் மீது சர்ஃபிங் செய்வது போலிருந்தது...’’ என்கிற பயணியின் வீடியோவுக்கு லைக்குகள் அநேகம்.

பாத்ரூமில் கல்யாணம்!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரையனும் மரியா சூல்ஸும் திருமணம் செய்ய நகர கோர்ட் ஹவுசுக்கு வந்தனர். பிரையனின் அம்மாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்க, பாசக்காரப் பிள்ளை பிரையனின் சிந்தனைப்படி அவருக்கு சிகிச்சையளித்த பெண்கள் பாத்ரூமிலேயே தாயார் முன்னிலையில் மரியா சூல்ஸுக்கு மோதிரம்மாற்றி திருமணம் செய்துகொண்டார்!

- கே.என்.சிவராமன்