மதுர வீரன்சாதி வேறுபாடுகளைக் களைந்து, ஜல்லிக்கட்டு நடத்த முயன்று கொலையுண்ட தந்தை சமுத்திரக்கனியின் கனவை மகன் சண்முக பாண்டியன் நிறைவேற்றினாரா என்பதே ‘மதுர வீரன்’.கிராமத்தின் முக்கியமானவராக இருந்து எல்லோரையும் சமமாக நடத்துவதில் அக்கறை காட்டுகிறார் சமுத்திரக்கனி. எல்லா சாதிக்காரர்களையும் ஒன்றிணைத்து, கிராமத்தின் நலன் பேணுகிறார். அதைப் பிடிக்காத சிலர் அவரைக் கொலை செய்ய, சிறு வயது மகன் சண்முகபாண்டியன் மலேசியா போகிறார். இளமையும், துடிப்போடும் திரும்பும் சண்முகபாண்டியன் தன் தந்தையைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடித்தாரா?

அப்பாவின் கனவான ஜல்லிக்கட்டை ஊர் மெச்ச நடத்திக் காட்டினாரா? மண்ணின் மனதோடு இருக்கிற பெண்ணை மணக்க விரும்பியது கை கூடியதா... என்பதே மீதிக்கதை. ஜல்லிக்கட்டின் பல்வேறு கூறுகளை எடுத்துக் காட்டியதற்கும், வீர விளையாட்டின் சிறந்த பக்கங்களை வெளிக்காட்டி துணிச்சலோடு பேசிய தன்மைக்கும், விதிகள், சட்டங்கள் துணை கொண்டு மக்களின் விருப்பங்கள் மறுக்கப்படும் மதிப்பீடுகளை பேசியதற்கும் அறிமுக இயக்குநர் பி.ஜி.முத்தையாவுக்கு வாழ்த்துகள். அசல் கிராமத்து இளைஞராக கம்பீரமான உயரத்தில் பொருந்துகிறார் கேப்டனின் வாரிசு சண்முகபாண்டியன். பாந்தமாக சிரிக்கும் அந்த முகம், கோபத்தில் அப்பாவைப் போலவே சீறுகிறது.

‘ஃபைட்’டைப் பொறுத்தவரை அப்பாவின் பெயரைக் காப்பாற்றுவதில் நேர்த்தி காட்டுகிறார். ஆனால், இன்னும் ‘வெயிட்’டை குறைத்தால், உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் கவனம் சேர்த்தால், உச்சரிப்பில் ஏற்ற இறக்கம் காட்டினால் பெரிய உயரத்திற்கு வருவது நிதர்சனம் பாண்டியன் உயரத்திற்கு இருந்து உற்சாகம் காட்டுகிறார் அறிமுக மீனாட்சி. பாட்டியிடம் மீன் குழம்பு வைக்க பிரியப்படுவதில் ஆரம்பித்து, சண்முகபாண்டியனோடு சலம்புவது வரைக்கும் மீனாட்சி பக்கா கிராமத்து வடிவம். நல்ல உணர்வுகளை மதிக்க விரும்பும் கிராமத்து தலைக்கட்டாக நல்மன மனிதராக சமுத்திரக்கனி அசத்துகிறார். சாதியில் ஆரம்பித்து நமது சொந்த அடையாளங்களை மறப்பது வரை அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையடி பதிவு.

தவறுகளைச்  சுட்டிக் காட்டும்போது அழுத்தம்திருத்தமாகப் பேசி பதற்றத்தையும், அக்கறையையும் கச்சிதமாக ப்ளே செய்வது அழகு. மைம் கோபி, வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன் என கிராமத்தின் பெரிய மனிதர்களிடம் இருக்கிற மிடுக்கும், முறுக்கும் படத்தின் கதையம்சத்திற்கு வலு சேர்க்கிறது. பால சரவணன் சண்முகபாண்டியனின் நண்பனாக நகைச்சுவை தருகிறார். நிகழ்ந்து கொண்டேயிருக்கும் மைம் கோபி, தேனப்பன், வேல ராமமூர்த்தியின் சாதீய உரையாடல்களைக் குறைத்திருக்கலாம். பழக்கமான திரைக்கதையிலும் பளிச்சென ஈர்க்கிறது முத்தையா - கே.சிவா வசனம். சந்தோஷ் தயாநிதியின் இசை பரபரக்கிறது. ‘உன் நெஞ்சுக்குள்ளே’, ‘என்ன நடக்குது நாட்டுலே’ என யுகபாரதியின் வரிகளில் இரண்டு பாடல்கள் ஈர இசைகொண்டு நம் மனதை ஈர்க்கின்றன.           

- குங்குமம் விமர்சனக்குழு