PAD MAN



ஒரு தமிழனின் வாழ்க்கை இந்தியில் படமாகி இருக்கிறது!

மெட்ரோபாலிட்டன் நகரங்களில் வாழும் நாகரிக பெண்கள் கூட லைட்டாக அந்த ‘மூன்று நாட்களுக்காக’ கூச்சப்படுகிறார்கள். மாதம்தோறும் அவர்களுக்கு இயற்கை கொடுக்கும் இந்த ‘லீவு’தான் தாய்மைக்கே அடிப்படை என்றாலும், அந்நாட்களின் அவஸ்தையை பெண்கள் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணிடம் பேசத்தயங்கும் இந்த ‘மூன்று நாள்’ பிரச்னைக்கான தீர்வுக்காக ஓர் ஆண் பல்லாண்டுகள் போராடி வெற்றி பெற்றிருக்கிறார். அந்த ஆண், வேறு யாருமல்ல... கோவையைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்தான். மிகக்குறைந்த விலையில் சுகாதாரமான சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரத்தை அருணாச்சலம் முருகானந்தம் உருவாக்கியிருக்கிறார்.

இதற்காக இவரை ‘மென்ஸ்ட்ரூவல் மேன்’ (Menstrual Man) என அயல்நாட்டு ஊடகங்கள் பாராட்டுகின்றன. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கைதான் ‘Padman’ என்ற இந்திப் படமாக உருவாகி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடிப்பவரும், இந்தி சினிமாவின் டாப் மோஸ்ட் நடிகர்களில் ஒருவருமான அக்‌ஷய் குமார் - அருணாச்சலம் முருகானந்தம் கேரக்டரில் நடித்திருக்கிறார். உண்மையில் ரத்தமும் வலியும் வேதனையும் அவமானமும் கலந்தது இவரது வாழ்க்கை. அதை அப்படியே அருணாச்சலம் முருகானந்தம் வார்த்தைகளில் கேட்போமா... சொந்த ஊர் கோவை க்கு அருகிலிருக்கும் கிராமம்.

அப்பா கைத்தறித் தொழிலாளி. எனக்கு பதினான்கு வயதாக இருக்கும்போதே அப்பா, விபத்தில் காலமாகி விட்டார். அம்மாவுக்கோ படிப்பறிவு இல்லை. கூலி வேலைக்குச் சென்றுதான் என்னைக் காப்பாற்றினார். அம்மாவுக்கு உதவுவதற்காக படிப்பை நிறுத்திவிட்டு வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். கதவு, ஜன்னல் போன்றவற்றை உருவாக்கும் தொழிலை அங்கு கற்றேன். 1998ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. அதுவரை எனக்கு பெண்களின் உலகம் அவ்வளவாகத் தெரியாது. ஒருநாள் என் மனைவி கையில் எதையோ மறைத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றதை பார்த்தேன். வித்தியாசமானதாக இருந்தது.

‘என்ன அது?’ என்று கேட்டபோது, ஒரு அழுக்கான கந்தல் துணியைக் காட்டினார். எங்கள் பட்டறையில் கூட அவ்வளவு அழுக்கான துணியை இயந்திரங்கள் துடைக்கக்கூட பயன்படுத்த மாட்டோம்.‘இது எதற்கு?’ என்றபோது தயங்கித் தயங்கி, ‘மாதவிடாய்க்கு பயன்படுத்தும் துணி’ என்றார். கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. என் மனைவியைப் போல்தானே இந்த நாட்டில் பல கோடிப் பெண்கள் அந்த மூன்று நாட்களில் இப்படி அவஸ்தைப்படுவார்கள்? இவ்வளவு சுகாதாரமற்ற முறையில் இருந்தால் தொற்றுநோய் ஏதாவது வருமே...உடனே மெடிக்கல் ஸ்டோர் சென்று சானிட்டரி நாப்கின் வாங்கிக் கொடுத்தேன். அப்போது நாப்கின் கொஞ்சம் காஸ்ட்லி.

‘நீங்கள் வாங்கக்கூடிய சம்பளத்துக்கு, இந்த மாதவிடாய் நாட்களுக்காக மட்டும் நாற்பது ரூபாய் செலவழித்து சானிட்டரி நாப்கின் வாங்கினால் நமக்கு எப்படி கட்டுப்படி ஆகும்?’ என்று மனைவி கேட்டார். நியாயமான கேள்வி. நம் தேசம் முழுக்கவே என்னைப் போன்று மிகக்குறைந்த ஊதியத்துக்கு பணியாற்றுபவர்கள்தான் மெஜாரிட்டி. அவரவர் குடும்பப் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வாங்கித் தருமளவுக்கு வசதி எத்தனை பேருக்கு இருக்கும்? பெண்கள் அந்த நாட்களில் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் அந்த முறை ஏழைகளுக்கும் கட்டுப்படி ஆகக்கூடிய வகையில் அமைய வேண்டும். இதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று யோசித்தேன்.

ஒரு சானிட்டரி நாப்கின் எப்படி உருவாக்கப்படுகிறது என்று ஆராய்ந்தேன். அதை பஞ்சினால் செய்கிறார்கள். நான் பட்டறையில் வேலை பார்க்கும் ஒரு வெல்டர். என் அப்பா ஒரு கைத்தறித் தொழிலாளி. எனக்குத் தெரிந்த இந்த இரண்டு தொழிலிலும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு இருப்பதாக நம்பினேன். முதலில் பஞ்சு வாங்கி நானே ஒரு சானிட்டரி நாப்கின் வடிவமைத்து, என் மனைவிக்கு பயன்படுத்த கொடுத்தேன். அவர் பயன்படுத்திவிட்டு, ‘இது சரிவரவில்லை. துணியையே பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்றார். இரும்பையே வளைக்கும் வேலையில் இருப்பவன் நான். பஞ்சு மேட்டரில் தோற்பதா... பலகாலம் முயற்சித்து குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தை கண்டுபிடித்தேன்.

முன்பே சொன்னதுபோல், மாத விடாய் குறித்த அடிப்படை விவரங்கள் கூட எனக்குத் தெரியாது. ஏழைக் குடும்பங்களில் இது போன்ற விஷயங்களை யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதில்லை. என் மனைவியிடம் இது குறித்து கேட்டபோது கூட அவர் சரளமாகப் பேசத் தயங்கினார். படித்த பெண்களால்தான் துணிச்சலாக இதைப்பற்றி பேசமுடியும் என்று கருதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலரிடம் கேட்டேன். அவர்களும் ஓர் ஆணான என்னிடம் இதைப்பற்றி பேச மறுத்தார்கள். புறச்சூழல் காரணமாக மாதவிடாயை பர்சனல் பிரச்னையாக பெண்கள் கருதுகிறார்கள். எனவே என்னையே பரிசோதனை எலியாக மாற்றிக் கொண்டேன். ஆமாம். நானே என் உள்ளாடையில் சானிட்டரி நாப்கின் வைத்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.

கால் பந்து பிளாடரை வயிற்றைச் சுற்றி கட்டி, அதில் ஆட்டு ரத்தத்தை நிரப்பி, குறிப்பிட்ட நேரத்தில் அதிலிருந்து ரத்தம் கசியும்படி செய்தேன். உள்ளாடையில் படியும் இரத்தப்போக்கு அதிகரித்து என் வேட்டியெல்லாம் ரத்தக்கறை. ஒரு விதமான கெட்ட வாடை வேறு சூழ்ந்தது. நான் செய்த இந்த ஆராய்ச்சியைக் கண்டு பலரும் அதிர்ந்தார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று கூட என்னைப் பற்றி நினைத்திருக்கலாம். என் குடும்பத்தார் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்கள். என் மனைவியே என்னைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்று விட்டார். இரண்டு மாதங்கள் கழித்து அவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். எனினும் என் ஆய்வை நிறுத்திக் கொள்ளவில்லை.

இது என் தனிப்பட்ட பிரச்னையோ, என் மனைவியின் மாதவிடாய் பிரச்னையோ மட்டுமல்ல; கோடிக்கணக்கான பெண்களின் பிரச்னை. தீர்வு காண முற்பட்டேன். ஆனால், ஒருவருடம் கடந்தும் முடிவு கிடைக்கவில்லை. மற்றவர்கள் பயன்படுத்திய நாப்கினை வாங்கி அதைக்கொண்டு ஆராய்ந்தால் இன்னும் கூடுதல் தெளிவு கிடைக்கலாம் என்று நினைத்தேன். சாதாரணமாக மாதவிடாய் குறித்து பேசினாலே பதறும் பெண்கள், அவர்கள் பயன்படுத்திய நாப்கின்களை எப்படி எனக்குத் தருவார்கள்? மறுபடியும் மருத்துவக் கல்லூரி மாணவிகளை பதட்டத்துடன் அணுகினேன். என்னை அந்த மாணவிகள் விசித்திரமாகப் பார்த்தாலும், நான் ஏதோ முக்கியமான காரணத்துக்காகத்தான் கேட்கிறேன் என்று புரிந்து கொண்டு கொடுத்தார்கள்.

அவர்கள் பயன்படுத்திய நாப்கின்களை வீட்டுக்குக் கொண்டு வந்து முகத்தில் மாஸ்க் அணிந்து ஆய்வுகளில் இறங்கினேன். இந்தக் காட்சியைப் பார்த்த என் அம்மா அதிர்ச்சியானார். சித்தம் கலங்கிவிட்டதாக அவரும் நினைத்து என்னை விட்டு பிரிந்தார். இதுதான் இப்படியென்றால் என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பேய் பிடித்துவிட்டதாக நினைத்தார்கள். மரத்தில் தலை கீழாக கட்டித் தொங்கவிட்டால் தலையில் ஏறிய பேய் அப்படியே இறங்கிவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. அப்படிச் செய்தார்கள். அப்படியும் ‘பேய்’ இறங்கவில்லை என்று தெரிந்ததும் என்னை ஊரைவிட்டுத் தள்ளி வைக்க முடிவெடுத்தார்கள். வேறு வழியில்லாமல் என் கிராமத்தை விட்டு கோவைக்கு இடம் பெயர்ந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.

குடும்பத்தார் உட்பட எல்லோரும் என்னைக் கைவிட்ட நிலையில் ஆய்வு மட்டுமே ஆறுதல் கொடுத்தது. கிராமத்தில் இருந்தவரை என் ஆய்வு கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது. அடுத்த கட்டத்துக்கு நகரவே முடியவில்லை. கோவையில் நிலை மாறியது. தேவையான உபகரணங்களை சுலபமாக வாங்கினேன். சானிட்டரி நாப்கினின் மூலப்பொருள் என்னவென்று விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டபோது, பருத்திதான் என்றார்கள். நானும் பருத்தியைப் பயன்படுத்தி செய்த நாப்கின் ஏன் உதவவில்லை என்ற குழப்பம் வந்தது. எனக்கு அறிமுகமாகியிருந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் உதவியோடு, நாப்கின் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு கடிதம் எழுதினேன்.

அவர்களது பதிலில்தான் தெளிவு கிடைத்தது. நான் பயன்படுத்திய பருத்தி வேறு. நாப்கின்களில் பைன் மரப்பட்டையில் இருந்து உருவாக்கப்பட்ட பருத்தியைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் அதற்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருக்கிறது. பைன் மரப்பட்டையை பஞ்சாக மாற்றக்கூடிய இயந்திரத்தின் விலை மட்டும் ஏழு கோடி என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் நாப்கின்கள் விலை அதிகமாக இருக்கிறது. எனில் இயந்திரத்தின் விலை குறைவாக இருந்தால் நாப்கின்கள் விலையும் குறையும் அல்லவா? எனக்குத் தெரிந்த வெல்டிங் அறிவைப் பயன்படுத்தி அந்த இயந்திரத்தைத் தயாரிக்க முயற்சித்தேன். கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகால உழைப்பிலும், ஆய்விலும் குறைந்த செலவில் ஓர் இயந்திரத்தை உருவாக்கினேன்.

பார்ப்பதற்கு நாம் மாவு அரைக்க பயன்படுத்தும் கிரைண்டர் மாதிரி இருக்கும். ஒரு பாத்திரத்தில் பைன் மரப்பட்டைகளைப் போட்டால் அது பஞ்சாக வெளியேறிவிடும். செவ்வக வடிவில் ஓர் அமைப்பு அமைத்து அதன் மேல் நெய்யப்படாத துணியைக் கொண்டு சுற்றி அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு முறையில் நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் மரத்தில்தான் இந்த இயந்திரத்தை செய்தேன். சென்னை ஐஐடி வளாகத்துக்கு அதை எடுத்துச் சென்று, அங்கிருந்த நிபுணர்களிடம் காட்டினேன். ஏதோ கிராமத்தான் எதையோ செய்து எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான் என்றெல்லாம் அவர்கள் கருதாமல் என் முயற்சியை ஆச்சரியப்பட்டு பாராட்டினார்கள்.

அங்கு நடந்த போட்டி ஒன்றில் என் இயந்திரத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த விருதினை நான் அன்றைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் கையால் வாங்கினேன். உடனே, ஊடகங்கள் என் மீது வெளிச்சம் பாய்ச்சத் தொடங்கின. எனக்கு பேய் பிடித்திருக்கிறது என்று கருதிய என் கிராமத்தார் என்னை நெகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்கள். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் என்னைப் பிரிந்து வாழ்ந்த மனைவி, என்னைப் புரிந்து கொண்டதுதான் என் ஆய்வுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். கிராமத்துப் பெண்கள் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வருமானம் பார்க்க வேண்டும் என்பதே என் எண்ணம். சுய உதவிக் குழுக்கள் அமைத்திருக்கும் பெண்கள் என் இயந்திரம் மூலம் தங்களுக்கான நிலையான வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். இந்த இயந்திரத்தை எப்படி இயக்க வேண்டும் என்று நானே அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.

நாப்கின் சுகாதாரமானதுதான். என்றாலும் அதை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். கறை படியாவிட்டாலும் மாற்றுவது அவசியம். இல்லாவிட்டால் சிறுநீர்க் குழாயில் பெண்களுக்கு பிரச்னை வரும். ஃபைப்ராய்ட்ஸ், கர்ப்பப்பை பாதிப்பு போன்றவை ஏற்படலாம். பெண்களின் உடலில் இருந்து வெளியேறும் ரத்தம், அவர்களுக்கே வேறு உபாதைகளை ஏற்படுத்தலாம். ஒருமுறை தில்லியில் நடிகை ட்விங்கிள் கண்ணாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஊடகங்கள் மூலமாக என்னை நன்கு அறிந்திருந்தார். அவருடைய கணவர்தான் பிரபலமான நடிகர் அக்‌ஷய்குமார் என்பதுகூட அப்போது எனக்குத் தெரியாது. என்னிடம் பேசும்போது, ‘உங்கள் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும். பல கோடி இந்தியப் பெண்களுக்கு அப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...’ என ட்விங்கிள் குறிப்பிட்டார்.  ‘Padman’ இந்திப் படம் உருவானது இப்படித்தான்..!

- ப்ரியா