பாரீஸ் பஜார்கள்!- பேராச்சி கண்ணன்

சென்னை மட்டுமல்ல; தமிழகமே ஒரு காலத்தில் உச்சரித்த பெயர் பாரிஸ் @ பாரிமுனை. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் சென்னைக்குப் பேருந்தில் வரும் எவரும் பாரிஸில்தான் இறங்க வேண்டும். அன்றைய கோயம்பேடு, பாரிஸ்தான். சென்னை நகரமும் இங்கிருந்தே ஆரம்பிக்கிறது. அதனாலேயோ என்னவோ, பாரிஸைச் சுற்றி ஒன்றல்ல... இரண்டல்ல... ‘ஈவினிங் பஜார்’, ‘ரட்டன் பஜார்’, ‘ஃப்ளவர் பஜார்’, ‘சைனா பஜார்’ என ஏராளமான பஜார்கள் தனித்துவத்துடன் மிளிர்கின்றன. பாரிமுனையிலிருந்து தொடங்கி வால்டாக்ஸ் சாலை வரை சுமார் இரண்டு கி.மீ தொலைவு நீளும் என்.எஸ்.சி.போஸ் சாலையெங்கும் பஜார்களே!

தவிர, பாரிமுனைக்கு எதிரே ராஜாஜி சாலையின் ஓரத்தில் திரைப்பட டிவிடிகளுக்கும், வெளிநாட்டுப் பொருட்களுக்கும் பெயர் போன பர்மா பஜார் பரபரக்கிறது.‘‘இந்தச் சாலையில் மட்டும் 25 தெருக்கள். ஒவ்வொரு தெருவும் ஒரு தொழிலுக்கு ஃபேமஸ். கிடங்குத் தெருவை ‘டெக்ஸ்டைல் ஹப்’னு சொல்லலாம். அடுத்து, ஆண்டர்சன் தெரு முழுவதும் திருமண அழைப்பிதழ், பேப்பர், டைரிகளுக்கான நிறைய கடைகள் இருக்கு. அப்புறம், கோவிந்தப்ப நாயக்கன் தெருவுல ஒருபக்கம் எலெக்ட்ரிக்கல் கடைகளும், மறுபுறம் உலர்பழங்கள் கடைகளுமா வரும். இப்படி சொல்லிட்டே வரலாம்...’’ என்றார் அந்தப் பகுதியைச் சேர்ந்த நண்பர். ஒரு காலைப்பொழுதில் ‘ஈவ்னிங்’ பஜாருக்குள் நுழைந்தோம்.

மாலை பஜாரில் காலை ரவுண்ட் அப் என்பது முரணாக இருக்கலாம். ஒரு காலத்தில் மாலை நேரம் மட்டுமே இங்கே கடைகள் இயங்கின. அதனாலேயே இந்தப் பெயரைத் தாங்கி நிற்கிறது. ஆனால், இன்று அப்படியல்ல. காலை வேளையிலும் கூட்டம் ஜமாய்க்கிறது. மட்டுமல்ல,  இது, ‘மேட் பஜார்’, ‘குஜிலி பஜார்’ என இரு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. மேட் பஜார் என்றழைக்க காரணம் இங்கே பாய் விற்பனைக் கடைகள் அமோகமாய் இருப்பதாலே! பாய், தலையணை, மெத்தை, பெட்ஷீட், சோபாவில் உட்காரும் பஞ்சணைகள் என சகலமும் ஒரு கடையிலேயே கிடைத்துவிடுவது அழகுதான்.

‘‘இன்னா வேணும் தம்பி..?’’ என வாஞ்சையோடு அழைத்த ஒரு ‘பாய்’ கடையின் முன் நின்றோம். உள்ளே சிலர் பாய்களை விரித்துப் பார்த்தபடி விசாரித்துக் கொண்டிருந்தனர். ஓர் ஆள் படுத்துறங்கும் மெத்தையின் விலையைக் கேட்டோம். ‘‘450 ரூபா. கொழந்தைங்க, பெரியவங்கனு யார்னாலும் படுத்துக்கிடலாம்...’’ என்றார் அங்கிருந்த பெரியவர் ஒருவர். அப்படியே குஜிலி பஜாரான நைனியப்பா தெருவுக்குள் வந்தோம். இந்தத் தெரு முழுவதுமே பாத்திரக் கடைகள்தான். எவர்சில்வர், காப்பர், அலுமினியம் என எல்லா வகையான பாத்திரங்களும் கிடைக்கின்றன. தவிர, கேஸ் அடுப்புகள் விற்கும் கடைகளையும் பார்க்க முடிகிறது.

ஒரு காலத்தில் அலுமினியப் பாத்திரங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த மக்களை எவர்சில்வருக்குள் நுழைத்த கதை சுவாரஸ்யமானது. எவர்சில்வர் பாத்திரங்கள் ஸ்டீல் என்பதால் துருப்பிடித்துவிடும் என மக்கள் வாங்க மறுத்து ஒதுங்கியே இருந்துள்ளனர். அப்போதே ‘ஃப்ரீ சேம்பிள்ஸ்’ கொடுத்து மக்களை கவர்ந்திழுத்துள்ளனர் கடைக்காரர்கள். அங்கிருந்து ஈவினிங் பஜாரோடு மிங்கிள் ஆகும் தேவராஜ முதலித் தெருவுக்குள் ஓர் எட்டு வைத்தோம். முகம் பார்க்கும் கண்ணாடிகள், ஃப்ரேம் கடைகள் நிறைந்திருந்தன. தெருவின் முடிவில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னகேசவ பெருமாள் கோயிலும், சென்னமல்லீஸ்வரர் கோயிலும் அழகாக வீற்றிருக்கின்றன. இதனருகே மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட கோயில் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வரிசை கட்டியிருந்தன.

மீண்டும் பின்னோக்கி வந்தோம். வழியில் ராசப்ப செட்டித் தெரு கிராஸ் செய்கிறது. இந்தத் தெருவில் கதவுக்கான லாக், கைப்பிடி, சானிட்டரி என ஹார்டுவேர்ஸ் அயிட்டங்கள் கிடைக்கின்றன. இங்கே மாரிசெட்டி மற்றும் கந்தபண்டாரம் என இரு பக்தர்களால் 17ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கந்தகோட்டம் முருகன் கோயிலும் உள்ளது. சரி, அதென்ன குஜிலி பஜார்?‘‘இந்த பஜார் மாலையில் இயங்கியதாலும், கூட்டம் அதிகமா காணப்பட்டதாலும் அப்போது பிக்பாக்கெட் திருடர்கள் படு உற்சாகமாக இருந்துள்ளனர். அதனால் இது திருட்டுகள் நிறைந்த பஜார் என அழைக்கப்பட்டுள்ளது. உருது மொழியில் ‘குஜல்’ என்றால் ‘ரகசியம்’ எனப் பொருள்.

அதிலிருந்து குஜிலி பஜார் என்ற பெயர் வந்தது...’’ என்கிறார் சென்னை வரலாற்றாளர் வி.ஸ்ரீராம். அடுத்து, ரட்டன் பஜார் வழியே பயணித்தோம். பிரம்புக் கடை சாலை என்ற பெயர்ப் பலகை வரவேற்றது. நூறு மீட்டர் கொண்ட இந்தச் சாலை என்.எஸ்.சி.போஸ் சாலையுடன் இணைகிறது. பழைய கட்டடங்களை இங்கே நிறைய பார்க்க முடிகிறது. லைட் கடைகளும், நகைக் கடைகளும், கம்பளிக் கடைகளும் உள்ளன. தவிர, கோல்ட் கவரிங் கடைகளும் நிறைந்திருக்கின்றன. நிறைவில், பூக்கடை காவல் நிலையம். தொடர்ந்து எதிரிலிருந்த கிடங்குத் தெருவுக்குள் கால் வைத்தோம். டெக்ஸ்டைலின் சக்ரவர்த்தியாகத் திகழ்கிறது இந்தத் தெரு. இதற்குள் சுமார் 1500 கடைகள் ஜொலிக்கின்றன.

‘‘ரெடிமேட், பீஸ் துணிகள்னு எல்லாமே இங்க குறைஞ்ச விலைக்குக் கிடைக்கும். வெளியே 500 ரூபாய்க்கு வாங்குற சேலையை இங்க முந்நூறு, முந்நூத்தம்பதுக்கு வாங்கலாம். மொத்தமா எடுக்கும்போது இன்னும் விலை குறையும். பல இடங்கள்ல இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்தமா வாங்கிட்டுப் போறாங்க. தி.நகர்ல இருக்குற பெரிய கடைகளுக்குக் கூட இங்கிருந்து துணிகள் போகுது. நாங்க சூரத், மும்பைனு வடமாநிலத்துல இருந்து துணிகள் வாங்கி இங்க சேல்ஸ் பண்றோம்...’’ என்றனர் மெட்ராஸ் பீஸ் குட்ஸ் வியாபாரிகள் சங்கத்தினர். வலதுபக்கம் சௌகார்பேட்டை. அதைப்பற்றி ஏற்கனவே ‘அறிந்த இடத்’தில் பார்த்திருந்தோம். அதனால், இடதுபக்கமாக பாரிமுனை நோக்கித் திரும்பினோம்.

முதலில், பந்தர் தெரு. ஸ்டேப்ளர், பிளாஸ்டிக் கவர், டெக்கரேஷனுக்குப் பயன்படும் கலர் பேப்பர்கள், நோட்டுகள் என ஸ்டேஷனரி அய்ட்டம்ஸ் நிறைந்த கடைகள் அழகு சேர்க்கின்றன. இதற்கடுத்து பத்ரியன் தெரு. கோயம்பேட்டிற்குப் போகுமுன் இங்குதான் பூ மார்க்கெட் கொடிகட்டிப் பறந்தது. இப்போது 50, 60 கடைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.‘‘மல்லி 3 முழம் 50 ரூபா...’’ என வாசலிலே மல்லியை அளந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் கடந்து உள்ளே நுழைந்தோம். கூட்டம் அலைமோதியது. இரண்டு பக்கமும் பூமாலை விற்பனைக் கடைகள். அடுத்து, எடை கணக்கில் தரும் பூக்கடைகள். செவ்வந்தி, கேந்தி, தவணம், துளசி, அரளி என பூக்களை விற்பனை செய்தபடியே இருந்தனர் வியாபாரிகள்.

கொஞ்ச தூரத்தில் கடை வரிசை முடிந்ததும் களையிழந்திருந்தது அந்த இடம். அப்படியே அடுத்துள்ள மலையபெருமாள் கோயில் தெருவினுள் சென்றோம். இந்தத் தெருவில் திருமணத் தாம்பூலப் பை கடைகள், டைரி விற்பனையகங்கள், பேப்பர் ஸ்டோர்ஸ் நீக்கமற நிறைந்திருக்கின்றன். இந்தத் தெருவின் முடிவில் வருகிறது கொத்தவால் சாவடி காய்கறி மார்க்கெட்! ‘‘கேரட், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ 20 ரூபா...’’ எனக் கூவும் சத்தத்தைக் கேட்டபடியே திருமண அழைப்பிதழ் கடைகளால் நிரம்பி வழியும் ஆண்டர்சன் தெருவிற்குள் வந்து சேர்ந்தோம். விதவிதமான கார்டுகள் ஒவ்வொரு கடையையும் அலங்கரித்திருந்தன. இடையிடையே திருமணத் தாம்பூலப் பைகளுக்கான கடைகளும் வருகின்றன.

‘‘40 ரூபால இருந்து 350 ரூபா வரை பைகள் விதவிதமா கிடைக்கும் சார்...’’ என்றார் தாம்பூலப் பை வியாபாரி ஒருவர். தலையசைத்தபடியே செருப்பு, ஷூ மற்றும் பேக் கடைகள் நிறைந்த Stringer தெருவைக் கடந்து பிராட்வே சிக்னலில் நின்றோம். எதிரே பிராட்வே பஸ் நிலையம் பரபரப்பாக இயங்க, அதனருகே டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கட்டடம் அமைதியாக வீற்றிருந்தது. இந்த சிக்னலைக் கடக்கும் போதே நம் போட்டோகிராபர், ‘‘பாஸ், பிராட்வே ரோடு உள்ள போகலையா? அங்க ஆப்டிகல்ஸ் கடைகளும், சைக்கிள் கடைகளும் நிறைய இருக்கு...’’ என்றார். தொடர்ந்து நடந்தோம்.

பேக்கர் தெரு, பிரான்சிஸ் ஜோசப் தெரு, சுங்குராம செட்டித் தெரு, கொண்டிச் செட்டித் தெரு என அடுத்தடுத்து வரும் தெருக்களைக் கடந்து ரங்கவிலாஸில் ‘டீ’ அருந்தி ஆசுவாசமானோம். எதிரே 125வது ஆண்டைக் கொண்டாடிய சென்னை உயர்நீதிமன்ற கட்டடம். ஆர்மேனியன் தெருவைத் தொடர்ந்து பாரிமுனை வந்தோம். அதனருகே ஒரு கல்தூண். இதனை ‘Boundary pillar’ என்கின்றனர் வரலாற்றாளர்கள்.‘‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டதும் இப்போது உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்தில் கருப்பர் நகரம் உருவானது. கோட்டைக்குள் வெள்ளையர்களும் அவர்களுக்குப் பணி புரியும் இந்தியர்கள் கருப்பர் நகரத்திலும் வாழ்ந்தனர்.

பிறகு, 1746ல் பிரிட்டிஷ் அரசுக்கும் பிரஞ்சுக்கும் ஏற்பட்ட மோதலில் மூன்றாண்டுகள் சென்னை நகர் பிரஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு, சென்னை வந்த ஆங்கிலேயர்கள் வேறு எவரும் இனி கோட்டையைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக கருப்பர் நகரத்தை கோட்டையின் பின்புறம் இருந்த பெத்தநாயக்கன்பேட்டை, முத்தியால்பேட்டை பக்கமாக இடம் மாற்றினர். அந்த இடத்தை காலியாக வைத்ததோடு 13 தூண்களையும் நட்டு, அதைத் தாண்டி கட்டடம் கட்டக்கூடாது என்றனர். அதிலொன்று மட்டும் எஞ்சிய நிலையில் டேர்ஹவுஸ் அருகில் நிற்கிறது...’’ என்கிறார்கள். அங்கிருந்து பர்மா பஜார் பக்கமாக நடந்தோம். புறாக் கூண்டுகள் போல ஐந்நூறுக்கும் மேற்பட்ட கடைகள்.

ரிசர்வ் வங்கியிலிருந்து தொடங்கி கடற்கரை ரயில் நிலையத்தைக் கடந்தும் செல்கிறது. ‘‘எந்த மொழி பட டிவிடிகளும் இங்க கிடைக்கும். கேன்ஸ், ஆஸ்கர் வாங்கின படங்கள்னு எல்லா நாட்டுப் படங்கள் பத்தியும் இங்குள்ள கடைக்காரங்க விரல் நுனில தெரிஞ்சு வச்சிருப்பாங்க...’’ என்றார் அடிக்கடி இந்த பஜாருக்குச் செல்லும் சினிமா நண்பர். டிவிடிகள் மட்டுமல்ல, டிவி, மொபைல், எலக்ட்ரானிக்ஸ் அயிட்டம்ஸ், பொம்மைகள், சென்ட் பாட்டில்கள் என சகலமும் கிடைக்கிறது.

தவிர, சாக்லெட், பாதாம் உள்ளிட்ட உலர் பருப்பு வகைகளும், பீஸ் துணிக்கடைகளையும் இங்கே பார்க்க முடிகிறது. இது 1950 மற்றும் 60களில் பர்மாவிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்காக உருவான பஜார். அதனாலேயே இதனை ‘பர்மா பஜார்’ என்கிறார்கள். இதனை நம்பி இன்று 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதற்குள் ஒரு நடை போய்விட்டு டேர் ஹவுஸின் பின்புறமுள்ள ஜஹாங்கீர் தெருவிற்குள் வந்தோம். சுவையான பர்மா உணவான அத்தோவை ருசித்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

பாரிமுனை
* இங்கிலாந்திலுள்ள வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த தாமஸ் பாரி, 1788ல் சென்னை வந்து சுதந்திர வணிகராக உரிமம் பெற்று வணிகத்தை ஆரம்பித்தார்.
* 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’ உருவானது. உலகளவில் இன்றுவரை நீடித்திருக்கும் ஒரு பழமையான வணிகப் பெயர் மட்டுமல்ல; இந்தியாவின் பழமையான இரண்டாவது வணிகக் கட்டடமும் இதுதான்.
* 1819ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் பார்ட்னர்ஷிப் சேர, ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமானது.
* 1824ல் காலரா நோயால் கடலூரில் பாரி இறந்து போக, டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்தது.
* பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது.
* 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது.
* தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது. அந்தக் கட்டடம் இருக்கும் இடத்தைத்தான் ‘பாரிஸ் கார்னர்’ என்கிறோம்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்