இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?பா.ராகவன் - 34

அன்புள்ள பாரா, வணக்கம். ‘குங்கும’த்தில் நீங்கள் எழுதி வரும் ‘இளைப்பது சுலபம்’ தொடரை முதல் வாரத்தில் இருந்து தவறாமல் படித்து வருகின்றேன். முதல் மூன்று நான்கு அத்தியாயங்களிலேயே இதன்பால் ஈர்க்கப்பட்டு, நானும் இதை கடைப்பிடிக்க முடிவு செய்து, ரத்தப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அட்வைஸ்படி பேலியோ டயட்டினைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன் (நான் சுத்த சைவம்). நீங்கள் சொல்லியிருந்தபடியே இரண்டு வாரங்களில் எனக்கு எடைக்குறைப்பு நிகழ ஆரம்பித்தது. அது வேகமாகவும் நடந்தது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ஒன்றரை மாதத்தில் எனக்கு ஏழு கிலோ வரை எடை குறைந்துவிட்டது. ஆனால் ஒரு சிக்கல். பல்வேறு குடும்பக் காரணங்களால் என்னால் பேலியோவினைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியவில்லை.

எனவே, இறங்கிய ஏழு கிலோவுடன் அப்படியே விட்டுவிட்டு, பழையபடி அரிசிச் சாப்பாட்டுக்கு மாறிவிட்டேன். என் எடை ஏறியிருக்குமா என்று தெரியவில்லை. எடை போட்டுப் பார்க்க அச்சமாக இருக்கின்றது. நிச்சயம் ஏறித்தான் இருக்கும் அல்லவா? இப்போது மீண்டும் பேலியோவினைத் துவங்க ஆசையாக இருக்கிறது. செய்யலாம் அல்லவா? தங்கள் அன்புள்ள தட்சிணாமூர்த்தி சிவசங்கரன், திட்டக்குடி. (குங்குமம் வாசகர்) மேற்படி மின்னஞ்சல் எனக்குக் கடந்த வாரம் வந்தது. நண்பரின் அனுமதியுடன் அதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். மிக முக்கியமானதொரு காரணத்துக்காக. இந்தக் கடிதத்தில் உள்ளது போன்ற பிரச்னை பேலியோவுக்கு வருகிற பலபேருக்கு நேர்வதைக் காண்கிறேன்.

வீட்டாரின் ஒத்துழைப்பு இல்லாமல் பாதியில் நிறுத்துவது, அடிக்கடி வெளியூர்ப் பயணம் செய்ய நேர்ந்து, அங்கே பேலியோ உணவு கிடைக்காமல் நிறுத்திவிடுவது, யாராவது கொழுப்பு சாப்பிட்டால் மரணம் சீக்கிரம் வரும் என்று பயமுறுத்தி நிறுத்த வைப்பது, நமக்கே போரடித்து பாதியில் நிறுத்துவது என்று பேலியோவில் இருந்து வெளியேற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் அவசியம் இருக்கும் ஆனால், குறுகிய காலத்தில் இந்த உணவு முறை கொடுக்கிற நல்ல பலன்களை ருசி பார்த்ததன் விளைவாக, மீண்டும் இதைத் தொடர்ந்தால் என்ன என்கிற நப்பாசையும் கூடவே வரும். சுருக்கமாக இப்படித் தொகுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவு எடை குறையும்வரை பேலியோ உணவு முறையைக் கடைப்பிடிப்பது.

சரி போதும் என்று ஒரு பிரேக் விட்டு, இட்லி பூரி பரோட்டா லட்டு ஜாங்கிரி ஜிலேபிகளில் சங்கமமாகிவிடுவது. இறங்கிய எடை மீண்டும் ஏறிவிடும். அப்போது மீண்டும் கொஞ்ச நாளைக்கு பேலியோ. எடை குறைந்தபின் மீண்டும் வழக்கமான கார்ப் உணவுகள். இப்படி வாழ்நாள் முழுதும் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று மாறி மாறி வாழ்ந்துகொண்டால்தான் என்ன? இது என்ன தாலி கட்டிய பெண்டாட்டியா? இதற்கு மட்டுமே விசுவாசமாக இறுதி வரை இருந்துவிட்டுப் போக வேண்டுமென்பதற்கு? அநேகமாக தினமும் யாராவது என்னிடம் இப்படிக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் சொல்லுகிற பதில் ஒன்றுதான். எதில் வேண்டுமானாலும் விளையாடுங்கள். உடல் ஆரோக்கியத்தோடு மட்டும் வேண்டாம்!

நாம் நன்றாக இருக்கிறவரை நமக்கும் சரி, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் சரி; எந்தப் பிரச்னையும் இல்லை. உடல் ஆரோக்கியமாக இருந்துவிடுகிற பட்சத்தில் என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடிப் பார்க்கலாம். ஆனால், அந்த வண்டி எப்போது படுக்கும் என்று சொல்ல முடியாது. ஒரேயடியாகப் படுத்தால்கூடப் பிரச்னை குறைவு. மக்கர் செய்தபடி மூச்சிறைத்துத்தான் ஓடுவேன் என்று சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தால் தீர்ந்தது கதை. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பேலியோ என்பது டயட் அல்ல. இது ஓர் உணவு முறை. நம்முடைய அரிசிச் சாப்பாடு, வடக்கத்திக்காரர்களின் ரொட்டிச் சாப்பாடு எல்லாம் எவ்வாறு வேறு வேறு உணவு முறைகளாக இருக்கின்றனவோ, அது போல இதுவும் ஓர் உணவு முறை.

பேலியோவுக்கும் மற்ற உணவு முறைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவற்றில் கொழுப்பு இருக்காது. கார்போஹைடிரேட் மட்டும் இருக்கும். கொழுப்பு என்பது அவற்றில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். பேலியோவில் கொழுப்பு மட்டும்தான் உணவு. கார்போ ஹைடிரேட் என்னும் மாவுச் சத்து இதில் வேறு வழியில்லாமல் தற்செயலாக உள்ளே வருகிற வஸ்து மட்டுமே. சிக்கல், கொழுப்பும் கார்பும் பரம எதிரிகள் என்பது. இரண்டையும் ஒரே சமயத்தில் அதிக அளவு உட்கொள்வதோ, இரண்டையும் மாறி மாறி உட்கொள்வதோ வெகு விரைவில் உடல் ஆரோக்கியத்தைப் படுக்கையில் கொண்டு தள்ளிவிடும். ஒன்று கொழுப்புணவின்மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பக்கமே இருங்கள். அல்லது எப்போதும் உண்ணும் உணவையே தொடருங்கள்.

அதில் ஆரோக்கியக் கேடு ஏதாவது உண்டானால் இருக்கவே இருக்கிறார் டாக்டர், இருக்கவே இருக்கிறது மருந்து மாத்திரைகள். நான் சொல்லுவது புரிகிறதா? இதில் கொஞ்ச நாள், அதில் கொஞ்ச நாள் என்பது பேலியோவுக்கு சுத்தமாக ஒத்து வராது. பேலியோ ஆரம்பித்து விட்டால் வாழ்நாள் முழுதும் பேலியோதான். ஆனால், பேலியோவில் இருக்கிறவர்களும் கொஞ்சம் அரிசிச் சாப்பாடு சேர்த்துக்கொள்ளலாம் என்று சொன்னீர்களே என்று கேட்பீர்கள். ஆம். மெயிண்டனன்ஸ் பேலியோவில் அரிசி உண்டுதான். உருளைக் கிழங்கு, பழங்கள்கூட உண்டு. ஆனால் எக்கட்டத்திலும் இதில் கோதுமை கிடையாது, மைதா, மக்காச்சோளம் உள்ளிட்ட வேறெந்த தானியமும் கிடையாது. எண்ணெய் வகை (செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தவிர) அறவே கிடையாது. சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, தேன் உள்ளிட்ட எந்தவிதமான இனிப்பும் கிடையாது.

எடைக்குறைப்பு பேலியோவுக்குள் நாற்பது கிராம் கார்போஹைடிரேட் அனுமதிக்கப்படுகிறது என்றால், குறைந்த எடை ஏறாமலும் மேலும் இறங்காமலும் ஒரே சீராக ஓரிடத்தில் நிற்பதற்கு மேலும் பத்துப் பதினைந்து கிராம் கார்ப் எடுத்துக்கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருளே தவிர, பேலியோ - கார்ப் சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று இதைப் புரிந்துகொள்ளுவது தகாது. படு பயங்கரமான எடை ஏற்றம், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்த்துவிட்டு வாழ விரும்பினால் உணவில் கார்போஹைடிரேட்டின் அளவைக் குறைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை. அதற்கு பதிலாகக் கொழுப்பை உணவாக்குவது பேலியோ.

கொழுப்பை முதன்மைச் சத்தாக்கி, மாவுப் பொருள்களைக் கணிசமாகக் குறைத்து, சமயத்தில் அறவே இல்லாமலாக்கிவிடுவதன் மூலம் நோய்க் காரணியின் வேரைப் பிடுங்கி எடுத்து விடுகிறது பேலியோ. அந்த விதத்தில் எடைக் குறைப்பு என்பதே பேலியோவில் ஒரு பக்க விளைவுதான்!இந்த அடிப்படை புரிந்துவிட்டால், கொஞ்ச நாள் பேலியோ, கொஞ்ச நாள் சாதா உணவு என்று மாறி மாறிச் சாப்பிட்டுப் பார்க்க ஆசை வராது. சாப்பாடு கூட ஓகே. இன்னொரு விஷயம்தான் ரொம்பப் படுத்துகிறது என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லத் தயங்கி, மென்று விழுங்கி அரைகுறையாகக் கொட்டிக் கிளறி, புலம்பிவிட்டு ஓடிவிடுகிறவர்கள் அநேகம் பேர்.

அதுவும் நான் புழங்கும் கலைத்துறையில் பேலியோவின் அவசியம் உணர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் இருக்கிறார்கள். அதே சமயம் நமது வாழ்க்கை முறைக்கு இது ஒத்துவருமா என்கிற சந்தேகம் அவர்கள் அத்தனை பேருக்குமே உண்டு. அவர்கள் பிரச்னை என்று கருதுவது, குடி!‘யோவ், சோறில்லாமகூட இருந்துடுவேன். ஆனா, சரக்கடிக்காம முடியாது. கொழுப்பு சாப்ட்டு சரக்கடிச்சா என்னாகும்? உடனே செத்துருவனா? அத மட்டும் இல்லைன்னு சொல்லு, நாளைலேருந்து நான் பேலியோ!’ என்றார் ஒளிப்பதிவாளரான என் நண்பர் ஒருவர்.ஒரு வரியில் சொல்லிவிடக் கூடிய பதிலா அது? அடுத்த வாரம் விரிவாகச் சொல்லுகிறேன்.

(தொடரும்)