கோமாதா வரி!



‘விவசாய வரி கட்டுகிறீர்கள். அதோடு கூடுதலாக கோமாதா வரியையும் கட்டினால்தானே கோசாலைகளைப் பராமரிக்க முடியும்?’ மைக்செட்காரரே மிரளும் யோசனையைச் சொன்னது யாராயிருக்கும்? யெஸ். பா.ஜ.கவின் கொள்கை பிளஸ் சர்ச்சை பீரங்கி சுப்பிரமணிய சுவாமியேதான்.

‘‘1962ம் ஆண்டு இந்தியா - சீனா  போர் மூண்டபோது பாதுகாப்புக்கு மக்கள் நிதியளித்தனர். அதேபோன்ற உத்வேகத்தோடு மக்கள் கோசாலையைப் பாதுகாக்க வரியாக ரூ. 1 தரவேண்டும்...’’ என மும்பையின் பசு பாதுகாப்புக்கென நடந்த மாநாட்டில் பேசியிருக்கிறார். இந்த வரியை இந்து, முஸ்லீம் என பாகுபாடின்றி விதிக்கலாம் என சகோதரத்துவ சமநிலையை நிலைநாட்டி அவர் சொன்னது பலருக்கும் தலைசுற்றலை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போதாதென்று உள்துறை அமைச்சர் ஹன்ஸ்‌ராஜ் அஹிர், ‘புலிகளுக்கு காப்பகம் அமைப்பது போலவே பசுக்களுக்கும் அமைக்க அரசை மக்கள் வற்புறுத்தவேண்டும்!’ என்றிருக்கிறார். பசு காப்பகத்துக்கு 7 ஹெக்டேர் நிலப்பரப்பு தேவை என்பது கொசுறு தகவல்.