ஒரு மனுஷி... ஒன்பது குளங்கள்..!



-திலீபன் புகழ்

சாதித்த பஞ்சாயத்து தலைவி

மக்களின் நலன் சார்ந்த எந்த ஒரு முயற்சிக்கும் மக்களின் ஆதரவும் பங்களிப்பும் மிக மிக முக்கியம். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினாலும், ஒதுங்கினாலும் பிறகு நம்முடன் இணைந்துகொள்வார்கள். மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு திட்டமும் அதன் நோக்கத்தை முழுமையாக அடைந்ததில்லை. மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அபரிமிதமாக இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

இதற்கு உதாரணம் சுமதியின் சாதனை. திருவள்ளூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அழகாக பூத்துக் குலுங்குகிறது அதிகத்தூர் ஊராட்சி. சுட்டெரிக்கும் கோடையிலும் அங்கிருக்கும் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. காரணம், சுமதிதான். ‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாடி எங்க ஊரே கடுமையான வறட்சில வறண்டு போயிருந்துச்சு. குடிக்கிற தண்ணிக்கு தினம் தினம் திண்டாட்டம், போராட்டம்.

எங்களோட வாழ்வாதாரமே விவசாயம்தான். அதை செய்ய முடியாததால வேற வேலையைத் தேடி சென்னைக்கும் ஆந்திராவுக்கும் மக்கள் போக ஆரம்பிச்சாங்க. விவசாயமே அழிஞ்சு போயிடுற நிலமை. இதை என்னால தாங்கிக்கவே முடியல. மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு...’’

நிதானமாக பேசத் தொடங்கும் சுமதி, இதன் ஒரு பகுதியாகவே ஒன்பது குளங்களை வெட்டி யுள்ளார். மட்டுமல்ல, 2006ம் ஆண்டிலிருந்து அதிகத்தூரின் பஞ்சாயத்து தலைவியாகவும் இருந்து வருகிறார். ‘‘எங்க கிராமத்தை ஒட்டி கூவம் ஆறு ஓடினாலும் தண்ணிப் பஞ்சம் எப்பவும் இருக்கும். ஒவ்வொரு கோடைலயும் தமிழகம் முழுக்க பஞ்சம் இருக்கத்தான் செய்யுது.

அடுத்த மழைப்பருவம் வந்ததும் மக்கள் அதை மறந்துடறாங்க. ஆனா, மனுசனைத் தவிர மத்த எல்லா உயிரினங்களும் மழைக்காலத்துக்காக உணவைச் சேகரித்து வைக்குது. நாம உணவை சேகரிக்க வேண்டாம். அட்லீஸ்ட் கோடைக் காலத்துக்கு வேண்டிய தண்ணீரையாவது சேகரிக்க வேண்டாமா?’’ என்றவர் குளம் வெட்டிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டப்பட்டோம். முதல்ல குடிநீருக்காக கிராமத்தைச் சுத்தி பல இடங்கள்ல போர் போட்டோம். பல ஆயிரம் அடியில ஆழ் துளைகள் இறக்கியும் ஒரு சொட்டு தண்ணி கிடைக்கல. எல்லா போர்வெல் திட்டமும் ஃபெயிலியர். இதுக்குப் பிறகுதான் ஊரைச் சுத்தி குளங்களை வெட்டி நீரைச் சேமிக்கலாம்னு முடிவு செஞ்சோம். எங்களுக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியாது. அப்ப ராஜஸ்தான்ல உள்ள ‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்தர் சிங் பத்தி கேள்விப்பட்டோம். நீர் மேலாண்மையில் சாதிச்ச மனிதர்.

அவரோட ஊர்ல எப்படி நீர் சேகரிப்பை கட்டமைச்சிருக்கார்னு பாத்துட்டு அதுப்படி முறையா செய்வோம்னு முடிவு செஞ்சோம். எங்க கிராமத்துல இருந்து ஏழு விவசாயிகளைக் கூட்டிக்கிட்டு அவரைப் பாக்க போனோம். மொழி தெரியாத ஊர். பயணம் கொஞ்சம் கடினமாத்தான் இருந்துச்சு. பத்து நாள்கள் அங்க தங்கி இருந்தோம்.

ராஜேந்தர் சிங்குகிட்ட தண்ணீர் மேலாண்மை செயல்பாடுகளைச் சார்ந்து ஓரளவு கத்துக்கிட்டோம். எல்லா செயலிலும் மக்களோட ஒத்துழைப்பு தேவைனு ஒவ்வொரு செயல் விளக்கத்தப்பவும் சொல்லிக்கிட்டே இருந்தார். அந்த முறையை எங்க ஊர்லயும் செயல்படுத்தத் தொடங்கினோம். அவர் செஞ்சிருந்த கட்டமைப்பை இங்க உருவாக்குறதுல சிக்கல் வந்துச்சு.

அவரோட கிராமத்துல வருஷத்துக்கு பாதி நாள் மலைப்பகுதியில இருந்து தண்ணீர் வரும். அத்தோடு சமதளமான பகுதி வேற. அதனால அவங்களால நீருக்கான பாதையை அமைச்சு எல்லா பகுதிக்கும் அனுப்ப முடிஞ்சது. எங்க ஊர் மேடு பள்ளம் நிறைஞ்ச, மழை நீரை மட்டுமே நம்பி இருக்கிற பூமி. மழை நீரை சேமிக்க கைவசம் இருக்கிற ஒரேயொரு வழி ஏரி, குளம் அமைக்கிறது மட்டும்தான். அதனால அதுல இறங்கினோம்.

முதல்ல ஊரைச் சுத்தியிருந்த ஏரிகளைச் சீரமைச்சோம். ஏரி வழியா போற கால்வாய்களை ஒழுங்குபடுத்தி இடையில தடுப்பணைகளைக் கட்டினோம். முக்கியமா கால்வாய்க்கு இடையில குளங்களை வெட்டினோம். மேடாகிக் கிடந்த 6 குளங்களை சீரமைச்சோம். அத்தோட பல வருஷங்களுக்கு முன்னாடி குளமா இருந்த 3 இடங்களைத் தேடிப்பிடிச்சோம். அது எல்லாமே ஆக்கிரமிப்புல இருந்துச்சு.

அந்த நிலத்தை பயன்படுத்துனவங்ககிட்ட விவரத்தை எடுத்துச் சொல்லி புது குளமாகவே வெட்ட ஆரம்பிச்சோம். வெட்டிய 9 குளத்தையும் கால்வாய் வழியா ஒண்ணு சேர்த்தோம். குடிநீருக்கான போர்வெல் போட்ட பகுதி வழியா கால்வாயை உருவாக்கி இணைச்சோம். அப்படி இணைக்கிறப்ப  குடிநீருக்கான போர்வெல்ல நிலத்தடி நீர்மட்டம் உயர ஆரம்பிச்சது.

இப்ப எல்லா போர்வெல்லிலும் தண்ணீர் மட்டம்  நல்லாவே உயர்ந்திருக்கு. குடி நீர் பிரச்சனை தீர்ந்துச்சு. இது எல்லாத்துக்கும் ஊர் மக்களோட சப்போர்ட்தான் காரணம். நான் துணையாக மட்டும்தான் நின்னேன். இப்ப இருளர் இன மக்கள் வாழும் பகுதில 3 குளங்களை வெட்ட தொடங்கியிருக்கோம். ரெண்டாயிரத்துக்கும் அதிகமான மரங்களை நட்டிருக்கோம்.

மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனியா பிரிச்சு அதை உரமாக மாத்தறோம். போன வருஷம் இந்தியஅளவுல சிறந்த தூய்மை கிராமமா எங்க  ஊர்தான் தேர்வாச்சு. அதுக்காக டெல்லிக்குப் போய் விருதை வாங்கி வந்திருக்கிறோம்!’’ பெருமையுடன் சொல்கிறார் சுமதி.

படங்கள்: ஆர்.சி.எஸ்

யார் இந்த ராஜேந்திர சிங்?

தண்ணீர் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளால் இந்தியாவின் ‘தண்ணீர் மனிதர்’ என்றழைக்கப்படுகிறார் ராஜேந்திர சிங். தார் பாலைவனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராமம் ஒன்றில் தனது தண்ணீர் மேலாண்மை செயல்பாடுகளை 1975ம் ஆண்டு தொடங்கினார்.

‘தருண் பாரத் சங்’ என்ற அமைப்பின் வாயிலாக இப்பணியை ஆரம்பித்தவர், மழை நீர் சேகரிப்பு, நீர் வழித்தடங்களில் சிறு சிறு தடுப்பணைகள் கட்டுவது என தானே கண்டுபிடித்த எளிமையான தொழிநுட்ப யுக்திகளின் மூலமாக இன்று ராஜஸ்தானிலுள்ள பல கிராமங்களை நீர் வளமிக்க பகுதியாக மாற்றிக் காட்டியுள்ளார். தண்ணீருக்கான நோபல் பரிசு என அறியப்படும் ஸ்டாக்ஹோம் விருது, ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசேசே விருதுகளைப் பெற்றுள்ளார்.